கல்கியின் பொன்னியின் செல்வன் புனைவில் மிக முக்கியமான கதாபாத்திரம் வந்திய தேவன். பொன்னியின் செல்வனைப் படித்தப் பெரும்பான்மையினரைக் கவர்ந்த கதாபாத்திரம். கல்வி வீரம், விவேகம், ஆளுமை, அன்பு, காதல் எனப் பன்முகம் கொண்ட கதாபாத்திரமாக வடித்திருப்பார். வீராணம் ஏரிக்கரையில் வந்தியதேவன் குதிரையில் பயணித்துக் கொண்டே அன்று நிகழும் ஆடிப்பெருக்கு விழாவினைப் பார்த்துக் கொண்டே வரும் காட்சி தான் கதையின் தொடக்கமாக அமைந்திருக்கும் (கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்துவர்களுக்கு மணிரத்னம் எடுத்த பொன்னியின் செல்வன் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. ஆனால் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளியில் பொன்னியின் செல்வன் குறித்த தேடலும், வாசிப்பும் உரையாடலும் நிகழ்ந்தது என்பதை மறுக்க முடியாது)
தஞ்சை சுற்றுலாத்துறை பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாகக் கொண்டு வந்திய தேவன் சென்ற பாதை (ஒற்றனின் பாதை) ஒரு நாள் பயணம் ஏற்பாடு செய்திருந்திருந்தார்கள். மொத்தம் 50 பேர்கள் மட்டும் கலந்து கொண்டோம். 24.11.2024 அன்று இருள்பிரியும் பனி பொழிந்த காலை 5.30 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு 6 மணிக்குத் தஞ்சை பெரிய கோவிலைச் சென்றடைந்தோம். அனைவரின் அறிமுகமும் நிகழ்த்து. அடையாள அட்டை வழங்கப்பெற்றது. கேழ்வரகு கூழும் தொட்டுக்கொள்ள வற்றலும் மோர் மிளகாயும் வழங்கப்பெற்றது. 6.15 க்கு இரண்டு வாகங்களில் வீராணம் ஏரியை நோக்கிப் பயணப்பட்டோம். நாங்கள் சென்ற வாகனத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர்கள் அறுவர் வந்திருந்தனர். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்கள் ஒன்று கூடுவதாகவும் வரும்பொழுது தொடர்வண்டியில் பதிவு செய்து வந்ததால் நிறைய பேசிக் கொண்டு வந்ததாகவும் கூறினார்கள். எங்களுடன் பயணிக்கும் பொழுதும் அத்துணை மகிழ்வோடு, சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு கேலியும் கிண்டலும் என அமைந்தது. அத்துடன் நிறைய தின்பண்டங்களையும் எடுத்து வந்து அனைவருக்கும் பகிர்ந்தளித்தார்கள். அவர்களெல்லாம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டே வர, எங்களுடன் பயணித்த இளம் வயது பிள்ளைகள் ஒன்று திறன்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இல்லை தூங்கிக் கொண்டு வந்தனர். சிலர் சோழ வரலாறு குறித்து உரையாடிக் கொண்டு வந்தனர். பயணத்தின் இடையில் கங்கை கொண்ட சோழபுரம் வந்தபொழுது கதைச் சொல்லி சந்தியா அவர்கள் பொன்னியின் செல்வன் கதையைச் சுருக்கமாகக் கூறத் தொடங்கினார்கள். (கலந்து கொண்ட பலர் பொன்னியின் செல்வன் கதைனைப் படித்தவர்கள் சிலர் திரைப்படம் மட்டுமே பார்த்து வந்தவர்கள் சிலர் கதையும் படித்து, வரலாற்றையும் அறிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)
அப்பொழுது இராஜராஜன் அவர் கட்டிய பெருவுடையார் கோவில் இன்றும் கொண்டாடப்படுகிறார் / கொண்டாடப்படுகிறது ஏன் தன் தந்தையின் நிழலில் இல்லாமல் தனக்கென ஒரு நகரத்தையும் கட்டுமானத்தையும் உருவாக்கிய இரசேந்திரசோழனோ கங்கை கொண்ட சோழபுரமோ கொண்டாடப் பெறுவதில்லை என்ற வினா யெழுந்தது.
அது குறித்த விவாதங்கள் நிகழ்ந்தன.
8.30 மணிக்கு வீராணம் ஏரியை அடைந்தோம். கடல் போன்று காட்சியளித்த வீராணம் ஏரிக்கரையில் வந்திய தேவனின் குதிரையின் குளம்பொலி சத்தத்தினைத் தனது மொழியால் கனத சொல்லி சந்தியா விவரித்தார். மறுபுறம் வீராணம் ஏரி உருவான வரலாற்றை ரமேஷ் அவர்கள் கூறினார்கள்.
முதலாம் பராந்தகசோழனின் மகன் ராஜாதித்தன் தக்கோலம் போருக்குச் செல்லும் வழியில் போர் ஏற்படாமல் காலம் கடந்தாலும் வீரர்களை வைத்து என்ன செய்யலாம் அது மட்டுமில்லாமல் அவர்களின் நீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டும் வடகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் நீர் கடலில் கலந்து வீணாவதை அறிந்து ஏரியை உருவாக்குகிறார். கிடத்தட்ட 16 கிலோ மீட்டர நீளம் 12 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஏரி 6 ஆண்டுகளில் வெட்டி முடிக்கப்பெறுகிறது. இதற்கு இடையில் போர் ஏற்பட அப்போரில் ராஜாதித்தன் யானை மீது அமர்ந்து போர் செய்யும் பொழுது வீரமரணம் எய்துகிறார் (யானை மேல் துஞ்சிய தேவன் என்ற பெயருண்டு) அவர் இறப்பதற்கு முன் ஏரிக்குத் தன் தந்தையின் பெயர்கள் ஒன்றான வீர நாரயணன் என்னும் பெயரை வைக்க விரும்பியதன் காரணத்தினால் அப்பெயரே ஏரிக்கு வைக்கப்பெறுகிறது. வீர நாராயண கோவில் காட்டுமன்னார்க் கோவிலும் உருவாக்கப் பெறுகிறது. கோவில் இன்றும் அதே பெயரால் வழங்கப்பெறுகிறது. ஆனால் வீர நாராயண எரி இன்று வீராணம் ஏரியாகிவிட்டது. அதனுடைய நீள அகலமும் குறைந்துவிட்டது. பல கிராமங்கள் இதனால் பயன்பெறுவதுடன், சென்னைக்கு குடிநீர் வழங்குதலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது வீராணம் ஏரி.
காலை உணவு இயற்கையான சூழலில் அமைந்த லக்ஷ்மி விலாஸில் ஏற்பாடு செய்யப்பட்டது. நாம் மறந்து போன பல பராம்பரிய வாழ்வியலை நினைவுபடுத்தும் இடமாகவும் அந்த இடம் இருந்தது. ரவை கேசரி, இட்லி, பொங்கல், பூரி, சாம்பார், தேங்காய், வெங்காய சட்டினி, பூரி மசாலா நன்றாக இருந்தது. வயிற்றுக்கு எவ்வித கேடும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடையார் குடியில் அமைந்துள்ள ஆனந்தீஸ்வரர் ஆலயத்தில் ஆதித்த காரிகாலன் கொல்லப்பட்டப்பிறகு, உத்தம சோழன் பதவியேற்கிறார். அவர் காலத்தில் கொன்றவர்களைக் கண்டுபிடிக்கவோ, தண்டனை வழங்கப்படவோ இல்லை. பின்னால் பதவியேற்ற இராஜராஜ சோழன் காலத்தில் தன் அண்ணனைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்குகிறார். அவர்கள் அரசாங்க முக்கியப் பதவிகளில் இருந்துள்ளனர் அதற்கான சான்று இக்கோவிலின் கல்வெல்டில் உள்ளது. கீழே காணும் கல்வெட்டு வரிகள் அங்கு உள்ளன.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”
பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கியமான சதி ஆலோசனைகள் நடைபெறும் இடமாகப் புனையப்பட்டிருப்பது கடம்பூர். ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட இடமாகவும் கூறப்பெறுகிறது.சம்புவரயரும் அவருடைய மகன் கந்தன மாறனும் வசிக்கக்கூடிய மாளிகை அமைந்த இடம். ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர் ஆலயமாகவுள்ளது. அங்கு சென்ற பொழுது மலர் தூவுவது போல மழை சிறு தூவலாகத் தூவியது. மனத்திற்கு இதமான மகிழ்வான பருவநிலை . கோயிலின் உள்ளே சுரங்கபாதை ஒன்றுயிருந்தது. தற்போது அதனை அடைத்து வைத்துள்ளார்கள். தேநீரும் சுண்டலும் வழங்கப்பெற்றது.
திருபுறம்பயம் பிற்கால சோழர்கள் பேரரசாவதற்கான தொடக்கப்புள்ளி. விஜயாலய சோழன், பிரதிபதி ஆகியோருக்கான பள்ளிப்படை அமைந்துள்ள இடம். பொன்னியின் செல்வன் புனைவில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மீது ஒளிந்திருப்பதும், நந்தினி ஆதித்த கரிகாலனைக் கொல்ல சதித்திட்டம தீட்டுவதும் வந்திய தேவன் அவர்களால் சுற்றிவளைக்கப்படும் இடம். நிகழ்வைக் காட்சியாக அங்கு காட்டியது எங்களுக்கு வியப்பாகயிருந்தது. மதியவுணவு சோழா உணவகத்தில் முடித்து விட்டு பழையாறை நந்திபுரம் விண்ணகரம் குந்தவை பெருமாளைப் பார்த்துவிட்டு உடையாளூர் சிவபாத சேகரையும் அங்கிருந்த கல்வெட்டையும் வாசித்தப்பிறகு அங்கிருந்த அஹ்ரகாரத்தையும் பார்த்துவிட்டு. மீண்டும் சோழா உணவகத்தில் தேனீர் முடித்துவிட்டு . தஞ்சை பெருவுடையார் கோயில் உள்ள வந்திய தேவரைப்பற்றி குறிப்பும் இராஜராஜ சோழன் முதலில் எழுதச் சொன்ன கல்வெட்டுக் குறிப்புகளையும் வாசித்துவிட்டு, நிகழ்வு குறித்த அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டு, இரவு உணவாக சர்க்கரைப்பொங்கல், புளிசோறு, சப்பாத்தி, இடியாப்பம், வாழைப்பழம் வழங்கப்பெற்றது.
புனைவு வரலாறு என மாறி மாறி எங்களை ஆட்கொள்ளச் செய்து. அந்த காலத்தின் ஊடாக எங்களைப் பயணிக்க வைத்து புனைவு வியப்பைக் கொடுத்தாலும் வரலாற்றின் வழியாக உண்மையை அறியச் செய்தும் சிறப்பான திட்டமிடலுடன் செய்யப்பெற்ற ஏற்பாடு குறிப்பாகப் பங்கேற்பாளர்களுக்கு எவ்விதத்திலும் பயணம் ஏமாற்றதை அளித்து விடக் கூடாது எனச் சிறு சிறு விடயங்களில் கூட மெனக்கெட்டு செய்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்பாளர், சுற்றுலாத்துறை அலுவலர், கதை சொல்லியவர், வரலாற்றை விளக்கியவர். உதவியாளர், புகைப்படக்கலைஞர்கள் அனைவரும் நெஞ்சம் நிறை நன்றி. பங்கேற்பாளர்கள் அனைவரும் இனிமையோடும் அன்போடும் பேசி பழக்கினார்கள். ஒரு நல்ல அனுபவமாக நினைவுகளில் சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடிய நினைவாகவும் அமைந்தது. யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் தொடர்ந்து இது போன்ற நிகழ்வினை முன்னெடுங்கள் வாழ்த்துகளும் பாராட்டும்
நன்றி! நன்றி! நன்றி!
0 Comments