அண்மையில் ஒரு பெண் பெரியவளான நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பத்தி வழியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அக்குடும்பத்தின் மூத்தோள், அந்த குழந்தைக்கு எப்படியெல்லாம் இனி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி கொண்டு வந்தார். உன்னை வீட்டிற்குள் அழைக்கும் வரை கோயில் கோபுரத்தையும், வானில் கருடன் வந்தாலும் பார்ப்பதைத் தவிர்த்து விடு என்றார். அந்த குழந்தை அது குறித்து எதிர்கேள்வி எழுப்பினாள். உரையாடல் தொடர்ந்தது. அறிவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை நான் எப்படி பின்பற்ற முடியும் என்றாள்.
இன்னுமொரு நிகழ்வு ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். சடங்கு என்ற பெயரில் அவளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
வீட்டிற்குள்ளும், உறவுகளுக்குள்ளும் சமுதாயத்துள்ளும் நவீன காலத்துள் வாழ்ந்தாலும், பலர் மனங்களில் நவீனம் என்பது இல்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. ஒரு பெண் திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லாத காரணத்தினால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக உயிர் போய்விட்டது. இத்தனைக்கும் அந்தப் பெண் மருத்துவர். இன்னும் எத்தனையோ . இரண்டு நாட்களில் நான் கண்டது கேட்டது. சமூகம் வெவ்வேறு நிலைகளில் பெண்ணுக்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
பெண் உடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து அவள் உடலும், மனமும் அவளுக்கானதாக இல்லை. இந்த சமூகம் கட்டியுள்ள எழுப்பியுள்ள சட்டகத்தினுள் நின்று கொண்டு காற்றுப் புக முடியாது இறுக்கி கட்டப்படுகிறாள். அவ்வபோது சில சாரளங்கள் திறக்கப்படுகின்றன. சில அவளே உடைத்து உருவாக்குகின்றாள்.
அப்படியான ஒரு கலக்காரியாக இயாங் – ஹை . தன்னுடைய செயல்பாட்டின் வழியாக உடைப்பினை நிகழ்த்துகின்றார். சைவப் பெண், மங்கோலிய மச்சம், கொழுந்து விட்டு எரியும் மரங்கள் என்று மூன்று பகுதியாக இயாங் – ஹை கதை சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் அவள் சைவ உணவுக்கு மாறுகிறாள். அதனை அவள் கணவனும், குடும்பமும் எதிர்க்கிறது. தொடர்ந்து குடும்பம் அதைப் பற்றி அவளுடன் விவாதித்துக் கொண்டே இருக்கிறது. அவள் உறுதியாக மறுக்கும் பொழுது தந்தை வன்முறையாளராக மாறுகிறார். அவளுக்குப் பிடிக்காத உணவினைத் திணிக்கிறார். தாய் புலால் உணவின் மணமோ சுவையோ தெரியாத படி உணவினைத் தயாரித்துக் கொடுக்கிறார். அதனை உட் கொள்ளாமல் வாந்தி எடுக்கிறாள் துப்புகிறாள் நிராகரிக்கின்றாள். அவள் அதிகம் பேசுவதில்லை. சைவ உணவை எடுத்துக் கொள்வதிலிருந்து தன் போராட்டத்தைத் துவங்குகின்றார்.
தன் அக்காளின் கணவன் தன் உடல் மீது ஓவியம் வரைய எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்கிறாள். தன்னை ஒரு தாவரமாகவே கருதுகிறாள். தன் உடலிலிருந்து இலைகள் துளிர்ப்பதாகவும் கையிலிருந்து வே
ர்கள் தோன்றுவதாகவும் எண்ணுகிறாள். ஓரிடத்தில் அவள் அக்காள் இன்-ஹையிடம் உலகில் உள்ள எல்லா மரங்களும் சகோதர சகோதரிகள் போல இருக்கின்றன என்கிறாள். தன்னை ஒரு மரமாகவே நினைக்கின்றாள்.
ஓரிடத்தில் என் உடம்புக்கு நீர் ஊற்றுவது அவசியம். அக்கா இந்த வகையான உணவுகள் எனக்குத்
தேவையில்லை தண்ணீர் வேண்டும் என்கிறாள். பெண்ணுக்குத் தனக்காகச் சிந்திப்பது என்பது கனவாகவே இருக்கிறது. இயாங் – ஹையின் அக்கா இறுதியில் இருவரும் ஆம்புலன்ஸில் செல்லும்பொழுது உனக்குத் தெரியுமா எனக்கும் கனவுகள் இருக்கின்றன. கனவுகள் அவற்றுக்குள் நானே என்னைக் கரைந்து போகச் செய்ய முடியும். அவை முற்றிலுமாக என்னை எடுத்துக் கொள்ளட்டும் .. ஆனால் நிச்சயமாக அங்கிருப்பவை எல்லாமே கனவுகளாக இருக்க முடியாதல்லவா? ஏதோ ஒரு புள்ளியில் நாம் விழித்துக் கொண்டாக வேண்டும் இல்லையா?
இயாங் ஹை ஏன் இப்படி பிடிவாதம் பிடித்த வாளாக இருக்கிறாள் என்று தோன்றினாலும், தொடர்ந்து அவளுடைய கணவன், குடும்பம், சமூகம் கொடுக்கக் கூடிய நெருக்கடியைப் பார்க்கும் பொழுதும், அவள் தன்னை வேர்விட்டு கிளைத்து பூப்பூக்கும் தாவரமாக வளமையின் குறியீடாக நினைப்பதும் திரும்பத் திரும்பக் கூறுவதும் தான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் உரிமையற்றவள் என்ற அடிநாதமும் ஓங்கி ஒலிக்கும் போது, இயாங் – ஹையின் உணர்வுகளை நியாயங்களையும் புரிந்து கொள்வதுடன் இயலாமையின் வலியோடே நாம் கடக்க வேண்டியுள்ளன. அவளுக்காக கண்ணீர் மட்டுமே சிந்தப் போகிறோமா?மாற்று என்ன?
(சங்க அக இலக்கியங்கள் தலைவி அவளுடைய குடும்பம் அவளுக்கான தோழி, செவிலித்தாய் , நற்றாய் கண்காணிப்புகளுக்கு உட்பட்டே தானே இருக்கிறாள்)
2024 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்ற ஷான் காங் எழுதிய நூல் மரக்கறி தமிழில் சமயவேல் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். தமிழ் வெளி பதிப்பகம் வெளியிட்டுள்ளது . இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு 2009 இல் திரைப்படம் எடுக்கப்படுள்ளது. பன்னாட்டு மேன்புக்கர் விருதினைப் பெற்ற நாவல்.
0 Comments