அண்ணாவின் தமிழர் திருநாள் வாழ்த்து (1940 – 1969)

உழைத்து வாழ்பவனே வணக்கத்தக்கவன்; வாழ்த்துக்குரியவன்; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும்.
ஆய்வுச் சுருக்கம்
பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று நூலாகத் தொகுத்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1940 இலிருந்து 1969 வரை வரையப்பட்டுள்ள மடல்கள் வாழ்த்து மடலாக மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை நாகரிகத்தை பண்பாட்டை கூறுவதோடு, தமிழ் மக்கள் கொள்ள வேண்டிய சமூக, அரசியல், பண்பாட்டு விழிப்புணர்வுகளைப் பற்றியும் பேசுகின்றன. அவற்றை அறியும் நோக்கத்தில் இக்கட்டுரை எழுதப்பெற்றுள்ளது.
கலைச்சொல்
`வைதீகம் – ஊராள்வோர் – அந்தி – தீண்டாமை – ஆதிக்கம் – புனைகதை – வருணாசிரமம்.

முன்னுரை

தமிழ்ச்சமூகத்தில் வேரோடி போன வைதீக நெறிகள், வருணாசிரம் கோட்பாடுகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை அறிவாயுதமான எழுத்து (புனைகதைகள், கட்டுரை, கடிதம், வாழ்த்து மடல், கவிதை, நாடகம், திரைப்படம்) பேச்சு வழியே அகழ்ந்து எடுத்தவர்; மோரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெற வேண்டும் என மக்களை நோக்கி கூறி, தமது உரையாடலின் வழியே ஒரு தலைமுறையின் சிந்தனையைக் கூர்த்தீட்டியவர்; நவீனத் தமிழகத்தின் சிற்பி; தம் கருத்தில் மாறுபட்டவர்களிடமும் வலியச் சென்று அன்போடு பழகியவர்; சாதி, மத, பேதங்களைக் கடந்து ஒரு தத்துவத்தின் கீழ் அனைத்து மக்களையும் இணைத்து, அதிகாரத்தை எளியவர்களும் அடைவதற்கான வழியை வகுத்தவர்; மக்களை ஆள்வது மட்டும் ஆட்சியல்ல மனங்களை ஆள்வதும் என்பதை உணர்ந்து செயல்பட்டவர்; அறிதல், சிந்தித்தல், பகுத்தாராய்தல், செயல்படுத்தல் என அனைத்தும் தமிழ்ப் பெருநிலத்தின் நலத்தை நோக்கியதாகவே அமைத்துக்கொண்ட செயல்வீரர்; முப்பது ஆண்டுகள் கல்வி, பத்து ஆண்டுகள் சமூகப் பணி, இருபது ஆண்டுகள் அரசியல் பணி என வாழ்ந்த பெருந்தகை தமிழ்மண்ணின் பெருமை பேரறிஞர் அண்ணா.
தைத்திருநாள் இந்து மதத்துக்குரிய நாள் அல்ல அது அனைத்து தமிழ் மக்களையும் உள்ளடக்கியத் தமிழர் திருநாள் என மொழிந்த கா. நமச்சிவாய முதலியாரின் கருத்தை நடைமுறைபடுத்தியதில் அண்ணாவுக்குப் பெரும்பங்குண்டு. 1940 இல் விடுதலையிலும்1944 – 1963 வரை திராவிடநாடுவிலும், 1956- 1968 முரசொலியிலும் 1965 – 1969 காஞ்சியிலும்1954 இல் மன்றத்திலும், 1956 தென்றலிலும் 1968 சமநீதியிலும் எழுதியுள்ள பொங்கல் மடலில் இக்கருத்தை முதன்மைபடுத்தியே எழுதியுள்ளார். பொங்கல் விழா தமிழர் திருநாளாக மட்டுமல்லாமல் பண்பாட்டு விழாவாகவும், சமூகம் உயர உழைக்கும் பெருமக்களை அடையாளம் கண்டு அந்தந்த ஊர் மன்றங்கள் அவர்களைப் போற்றி பரிசளிக்கும் விழாவாகவும் மாற்றி அமைத்தவர் அண்ணா. பொங்கல் மடலில், நேர்த்தி மிக்க ஆடை நெய்தவருக்குப் பரிசு, ஊர் மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று, எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடல் வல்லோர், புதிய கவிதைகளை புனைவோர், நல்ல ஏடு தருவோர் இப்படிபட்ட சிறப்பு இயல்புடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் எனத் தம்பிகளை நோக்கி கட்டளையிடுகிறார்.
1940 தொடங்கி 1969 வரை கிட்டத்தட்ட 43 பொங்கல் வாழ்த்து மடல்களை வரைந்துள்ளார். (திராவிட நாடு 21 முரசொலி11 காஞ்சி 6 விடுதலை 1 மன்றம் 1 தென்றல் 1 சமநீதி 1 மலேசிய கொள்கை முழக்கம் 1) இவை தமிழரின் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு எழுதிய வாழ்த்து மடலாக மட்டும் அமையவில்லை. உலக, இந்திய, தமிழக வரலாறுகள், சம கால அரசியல் நகர்வுகள், தமிழின் தொன்மை இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரையான மேற்கோள்கள் விளக்கங்கள், பழமொழிகள், பண்பாடு, நாகரிகம், நடைமுறை உவமைகள், ஆராய்ச்சி, எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய செயல் திட்டங்கள் என இலக்கியத் தன்மையுடன் வளப்பமானதாக கருத்துச் செறிவுடன் எழுதப்பெற்றுள்ளன.
13.1.1940 இல் விடுதலை இதழின் துணையாசிரியாகச் செயல்பட்ட அண்ணா பொங்குக புதுமை என்னும் தலைப்பில் முதல் மடல எழுதுகிறார். இதில் இந்திய எதிர்ப்பு குறித்தும், களையப்பட வேண்டிய எண்ணங்கள் குறித்தும் பேசுகிறார்.
உழுதுநீர்ப் பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம் பச்சைப்பயிர் பார்க்க முடியுமா? செஞ்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனியம் என்னும் பண்டைப் பயங்கர பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்களைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை, குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும், கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவை போகப்படா முன்னம், பயிர் எது? இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கறை கொண்டோரின் கடன்1.
மற்றொரு மடலில் விவசாய பெருங்குடி மக்களைச் இச் சமூகம் எந்நிலையில் வைத்துள்ளது. அவர்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் நிலையினைச் சுட்டிக்காட்டுகிறார்.
உழவரின் பெருமைக்குரிய நன்னாள் இத்திருநாள். எனவே இந்நாளன்று அவர்தம் நிலையையும், இழவுத் தொழிலின் நிலையினையும் ஊரார் அறிந்திட வேண்டுவது அவசியம். அதோ உள்ள கிழங்கும், கீரையும், மஞ்சளும், கரும்பும், செந்நெல்லும், பாகும், அவரையும் அவன்- பொருள் தரும் பொருள்கள். அவன் பாடுபட்டுக் குவித்த செந்நெல், மாளிகைகளில் மந்தகாச முகவதிகளின் மேனிக்கு மெருகாக அமைகிறது. பிரபுவின் மோட்டாராகிறது- வைரமாக ஜொலிக்கிறது- வழக்கு மன்றத்திலேறி வக்கீல்கலைக் கொழுக்க வைக்கிறது. ஏரடிக்கும் சிறுகோல் தரும் பெரிய செல்வத்தின் துணைகொண்டு, நாட்டிலே, போகபோக்கியங்கள் மலிகின்றன. அவன் இவ்வளவும் தந்தவன் தலைமுறை தலைமுறாயகத் தந்து கொண்டே வருகிறான். அதோ, மண் குடிசையிலேதான் இருக்கிறான். அவனுக்கும் இன்று பொங்கல்தான். ஆனால் அது மண் கலயத்தோடு நின்றுவிடுகிறது. மகிழ்ச்சி அவனுக்கும் உண்டு. ஆனால் மாளிகையிலேயே காணப்படும் மகிழ்ச்சியல்ல அது. உழைத்தவன் அதன் பயனைப் பெறாதிருக்கிறான். அதனை அறியாமலுங் கூடப் பெரும்பகுதியினர் உளர். அந்த நிலை நல்லதல்ல- நல்லதைத் தராது – தமிழர் திருநாளன்று இதனை மனதிலே பதியச் செய்து கொள்ளவேண்டும். உழவன் உழைக்கிறான். உழைக்காதவன் பிழைக்கிறான். அரிமா பட்டினி கிடக்கிறது. நரி கொழுக்கிறது. நாடு வளம் பெற இதுவல்ல கையாளப்பட வேண்டிய அறம் முறை மாறியாக வேண்டும். இன்பம் பொங்கும் இன்னாள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். தூங்கும் கலப்பைத் தொழிலாளர்கள் காலமெல்லாம் பாடுபட்டுக் கையை தலையணையாய், தரையே பஞ்சணையாய், வானமே போர்வையாகக் கொண்டு வதைகிறார்கள். வறுமை, அறியாமை, பிணி, கடன் முதலிய எண்ணற்ற தளைகளால் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களில், யாரும் ழுழுவாழ்வு வாழ்வதில்லை. அப்படிப்பட்டவர்களைத் தான் உழுதுண்டு வாழ்வானே வாழ்வான் மற்றவர்கள் தொழுந்துண்டு பின் செல்வோர் என்று புகழ்ந்து பாடி இருக்கிறார்கள். புகழ்ந்து ஏமாற்றி இருக்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்னும் அண்ணாவின் இக்கூற்று இன்றும் பொருந்துவதாகவே அமைகிறது. பல்வேறு நிலைகளில் உழுதுண்டு வாழும் உழவர் குடி படும் துயரம் சொல்லி மளாதாகவே இருக்கிறது. இன்றைய கிராமபுர இளையோர் நகரம் நோக்கி செல்லவே முற்படுகின்றனர். புதிய புதிய தொழில் நுட்பங்கள் அனைத்து உழவர்களுக்கும் சென்றடைய வேண்டுமென விரும்பியவர் அண்ணா. உலர்ந்த சதைப் பொறுக்கு! அதைக் கிள்ளி எடுத்தானதும், புண் ஆறிவிட்டது என்று அர்த்தமல்ல! புண் தெரியும் கண்ணுக்கு; அதற்கு தக்க மருந்திட வேண்டும் அதுவும் போதாது; இரத்த சுத்தியும் நடந்தாக வேண்டும். முறைகள் மாற வேண்டும் புதிய திட்டங்கள் வேண்டும்.
உரிமைகளை ஊராள்வோர் பாதுகாத்து தரவேண்டும் உழவனின் வாழ்வை வளைக்குமளவுக்கு இன்றுள்ள உழைப்பு குறையும் படியும், அதே போல விளைவு அதிகரிக்கும்படியும் விஞ்ஞான வசதிகள் கிடைக்கச் செய்யவேண்டும்2. அண்ணாவின் இவ்வெண்ணம் இன்றும் கடைக்கோடி உழவன் வரைக்கும் சென்றுள்ளதா என்பது கேள்விக்குறியே.
12.01.1947 அன்று திருநாள் என்னும் தலைப்பில் எழுதிய பொங்கல் மடலில், வேளாண்குடிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியல் இடுகிறார்.

 •  பண்ணைகள் கலைக்கப்பட வேண்டும்.
 •  உழுபவனுக்கே நிலம் தரப்படவேண்டும்.
 •  உடனடியாக விவசாய வருமானவரி விதிக்கவேண்டும்.
 •  குடும்பத் தேவைக்கு மட்டும் போதுமான நிலம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிலவரி கூடாது.
 •  தரிசு நிலத்தை உழவர்களுக்குப் பங்கிட்டுத் தரவேண்டும்.
 •  அதனைத் திருத்த, வளம் செய்ய, நீண்ட காலக்கடனைச் சர்கார் தரவேண்டும்.
 •  கூட்டுப் பண்ணைகளை நடத்திப் பார்க்க வேண்டும்.
 •  கிராமத்திலே வசதிகள், நகரவாசிகளுக்கு இருப்பது போலவே செய்யவேண்டும்.

இந்தி எதிர்ப்பு குறித்து முன்னெடுப்புகளை அண்ணா தொடர்ச்சியாக எடுத்துள்ளார். ஒரு மொழி பேசும் மக்களிடம் வேற்று மொழியைப் புகுத்தினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துக்கூறி எச்சரிக்கிறார்.
1965 இல் காஞ்சி இதழில், மொழி அதிக்கம், நிர்வாக ஆதிக்கத்துக்கு இடமேற்படுத்தும், அஃது பொருளாதார ஆதிக்கத்துக்கு வழிகோலும். பிறகோ தமிழர் அரசியல் அடிமைகளாகி அல்லற்படுவர். இதனை அறிந்தோர் கூறி வருகின்றனர். ஆலவட்டம் சுற்றிடுவோர் மறுத்துப் பேசி, ஆளவந்தாரை மகிழ வைக்கின்றனர்3.
இன்றும் ஆளவட்டம் சுற்றுவோர் இந்த கருத்தைக்கொண்டிருப்பது நினைக்கத்தக்கது. வேற்று மொழியைக் கற்றுக்கொள்ளுவது அவரவர் விருப்பம். அதுவல்லாமல் திணிக்கும் பொழுதே இச்சிக்கல் ஏற்படுகிறது. மற்றொரு மடலில், மனித தன்மையற்று நடக்கும் செயல்களை எண்ணி மனம் குமைகிறார்.
தம்பி! அந்த மனிதத் தன்மையிலேதான் முழுக்க முழுக்க நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். மனிதத்தன்மை திகழ்ந்திடச் செய்தைக் காட்டிலும் மகத்தான வேறோர் வெற்றி இல்லை என்றே கருதுகிறேன். அரசுகள் அமைவதே, இந்த மனிதத் தன்மையின் மேன்பாட்டினை வளர்த்திடத்தான் என்று கருதுகிறேன். என்னால் எந்தப் பிரச்சனையையும் மனிதத் தன்மை கலந்ததாக மட்டுமே கொள்ளமுடிகிறது. அதனால் கொடுமை நேரிட்டுவிடும்போது குமுறிப்போகிறேன். அக்ரமம் நடைபெற்றிடும்போது நெஞ்சில் வேல் பாய்கிறது. இந்நிலை உடலைப் பாதிக்கிறது.
இன்று எந்த ஒரு தனி மனிதரும் சமூகத்தைக் கப்பிக் கொண்டுள்ள சூழ்நிலையினின்று தம்மை வேறுபடுத்திக் கொள்ளமுடிவதில்லை. நோய்த் தாக்காதிருக்கத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுவது போல, சூழ்நிலை தம்மைத் தாக்கிடாதபடி சில தடுப்பு முறைகளை வேண்டுமானால் தேடிப் பெற்றிடலாமேயன்றி, பண்டை நாட்களைப் பெற்றிடுதல் தங்கு தடையற்ற தனிமனித வாழ்க்கையைப் போல இது போது இயலாது.
14.1.1958 திராவிடநாடு இதழில், இந்தி எதிர்ப்பில் சிறை வாசம் சென்றதை தம்பிகளிடம் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுக்கு முன்பு 1938 இல் நான் ஒருநாள் அந்திசாயும் நேரத்தில் அங்கு இழுத்துச் செல்லப்பட்டேன். கட்டாய இந்தியை எதிர்த்து நடத்தப்பட்ட கிளர்ச்சியில், நான் மறியலைத் தூண்டிப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டேன். வழக்கு விசாரணைக்காக என்னை அந்தக் கொட்டடியில் அடைத்து வைத்தார்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலே பிடிக்கப்பட்ட நூற்றுக் கணக்கானவர்கள், சென்னை மத்தியச் சிறையிலே இருந்தனர். என்னை மட்டும், தனியாக அழைத்துக்கொண்டு போனார்கள் 9 ஆம் எண்ணுள்ள கொட்டடிக்கு – சைதாப்பேட்டை சப்ஜெயிலில்! அதே சிறை! அதே கொட்டடி! அப்போது உள்ளே பூராவும் கருப்பு சாயம் பூசப்பட்டிருக்கிறது! இப்போது வெள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது! அறை மட்டுமா? நானே கூடத்தான்! அப்போது கருத்த மீசை இப்போது வெளுத்துக் கிடக்கிறது. அப்போது காளை ! கல்லூரி முலாம் கலையாத பருவம்! இப்போது, கட்டுத் தளர்ந்து கல்லூரி முலாம் குலைந்து பட்டிக்காட்டான் என்பார்களே அந்த உருவம் பெற்று விட்டிருக்கிறேன். அப்போது சிறை என்றால் ஓர் இனம் அறியாப் பயம்! இப்போது? சிறையிலிருப்பதற்கும் வெளியை இருப்பதற்கும் அதிக மாறுபாடு காணமுடியாத மனப் பக்குவம் பெற்றுவிட்டேனல்லவா? அப்போது தனியாகச் சென்றேன். இப்போது, என்னுடன் எழுபது தோழர்கள்! அப்போது, நான் பெரியாரின் புதிய கண்டுபிடிப்பு! இப்போதோ பெரியாருக்கு என பெயர் என்றாலே கசப்பாம்.
அண்ணா இறப்பிற்கு முன் எழுதிய இறுதி கடிதம் 1969ஆம் ஆண்டு காஞ்சி இதழில் தமிழர் திருநாள் என எழுதிய கடிதமாகும். அக்கடிதம் நம்மை நெகிழ வைப்பதுடன் தமிழர்களின் சாசனமாகவும் திகழ்கிறது.
ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுதற்குக் காரணம். தம்பி! எங்கோ படித்ததாக நினைவு. ஒரு நிமிடத்தில் விண்ணிலிருந்து6,000 விண்கற்கள் விழுகின்றன. பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது; 100 பேர் இறந்துபடுகின்றனர்;114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள்; 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோட்டர்கள் உற்பத்தி செய்ப்படுகின்றன என்பதாக.
காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்த கடமையை நினைவுபடுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவது போல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் நலிவைத் தாங்கி கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகிறேன். வலி இருக்கத்தான் செய்கிறது- ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன்4.

தொகுப்புரை
 தைத்திருநாள் இந்துக்களுக்கு மட்டும் உரிய விழாநாள் அல்ல அனைத்து தமிழ் மொழி பேசும் மக்களுக்கும் உரிய தமிழர் திருநாள் என்று உறுபட மொழிந்தவர் அண்ணா.
 பொங்கல் வாழ்த்து மடலில் ஊழவர்களின் சிறப்புகளை விவரித்துரைப்பதுடன் சமூக அக்கறையும் இணைத்துக் கூறுகிறார்.
 அண்ணாவின் பொங்கல் வாழ்த்து மடல் மட்டுமல்ல. அது குறிப்பிட்ட காலகட்டத்தின் சமூக வரலாறாக அமைகிறது
 பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்க்க வேண்டும் எனபர் பாரதியார்.அண்ணா பிறநாட்டின் தொழில் வளர்ச்சிமுறை, பகுத்தறிவு சிந்தனை, கால மாற்றத்திற் கேற்ற புதுவகை மாற்றம் ஆகியவற்றை உள்வாங்கி, தமிழர்கள் முன்னேற வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர் அண்ணா.
 தாம் படித்த சிந்தித்த அனைத்தும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என எண்ணியவர்.
 தமது இறுதி மடலில் தம்பிகளை நோக்கி காலத்தின் அருமையைக் கருதி சோர்வின்றி தமிழ்சமூகம் முன்னேற வேண்டுமென்ற வேண்டுகோளை விடுக்கிறார்.
முடிவுரை
பேரறிஞர் அண்ணா அவர்களின் பொங்கல் வாழ்த்து மடல்கள் அனைத்தும், தமிழ்ச்சமூகத்தின் நலன் பற்றியும் நிகழ்த்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசுகின்றன. அத்துடன் சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்னும் வள்ளுவரின் மொழியை உறுதியோடு பற்றி, உழுகுடிகளின் சிறப்பினை, அவர்களுக்கு சமூகம் ஆற்ற வேண்டிய பங்களிப்பினை எடுத்துரைக்கின்றன
அடிக்குறிப்பு
1. அண்ணாவின் அறிக்கொடை, பொங்கல் மடல்,தொகுதி1, பக். 63
2. அண்ணாவின் அறிக்கொடை, பொங்கல் மடல்,தொகுதி1, பக்.158
3. அண்ணாவின் அறிக்கொடை, பொங்கல் மடல், தொகுதி2, பக் 72
4. அண்ணாவின் அறிக்கொடை, பொங்கல் மடல்,தொகுதி2,பக். 236
உசாத்துணை
1. அண்ணாவின் அறிவுக்கொடை, 64 தொகுதிகள்,2019. சென்னை : தமிழ்மண் பதிப்பகம்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

  No Results Found

  The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *