தொல்காப்பியம் – அறிமுகம் பகுதி -1

Jan 27, 2024 | Uncategorized | 0 comments

இலக்கணம் என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பினோம் என்றால்,

பதினேழாம் நூற்றாண்டில் ரிச்சலியால் நிறுவப்பட்ட பிரெஞ்சு அகாதமி 1932-  இல் வெளியிட்டுள்ள இலக்கணம் என்பதற்கான விளக்கத்தை இலக்கணவியல் நூலில் பேராசிரியர் சு. இராசராம் எடுத்துக்காட்டியிருப்பார்.

இலக்கணம் என்பது ஒரு மொழியைச் சரியாகப் பேசவும் எழுதவும் பயன்படும் கலை. மொழிக் கூறுகளுக்கிடையேயுள்ள உறவுகளைக் கண்டுபிடிப்பது இதன் நோக்கம். இவ்வுறவுகள் இயற்கையானதாகவோ மரபுவழிப்பட்டதாகவோ இருக்கலாம். இலக்கணக் கலைஞனின் கடமை இம்மொழியின் சரியான பயன்பட்டை விளக்குவதாகும். அதாவது தூய்மையான மொழியை எழுதும் புலமை மிக்கோரும் நூலாசிரியரும் பேசும் மொழியை விளக்குவதாகும். பிறமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து மொழியை இவர்கள் காக்கின்றனர். இலக்கணத்தின் விதிகளைப் பொருத்தவரையில் அவை காரண காரிய விளக்கங்களுக்கு உட்பட்டவை. மனித மனத்தின் இயல்பான போக்குகளிலிருந்து வருவிக்கப்பட்டவை அவை.

நமக்கு கிடைத்துள்ள முழுமுதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர் தொல்காப்பியர். தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியதால் தொல்காப்பியன் எனப் பெயர் பெற்றார் என்பதைப் பாயிரம் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்று தெளிவாகக் கூறுகிறது.

பழமையான காப்பியக்குடியில் உள்ளான் என நச்சினார்க்கினியர் கூறுவார். பழைய காப்பியக்குடி என்னும் சொல்லாட்சியைக்கொண்டு விருத்த காவ்யக்குடி என்பது வடநாட்டுக் குடியென்றும் பிருகு முனிவரின் மனைவி காவ்ய மாதா எனப்படுவாள் எனக்கொண்டு காப்பியம் என்பதை காவ்யம் எனக் கொண்டு வடநாட்டைச் சார்ந்தவர் என  ஆய்வாளர்கள் சிலர் கூற முயன்றனர். மேலும் தொல்காப்பியரை ஜமதக்கினி மகரிஷியின் புத்திரரும் அகத்திய மகரிஷியின் முதற் மணாக்கருமாகிய திரணதூமாக்கினி என்னும் இயற்பெயர் கொண்ட தொல்காப்பிய மகரிஷியினால் அருளிச்செய்யப்பட்ட என 1847 இல் முதல் அச்சுப் பதிப்பினைக் கொண்டுவந்த மழவை மகாலிங்கையர் முகப்புப் பக்கத்தில் கூறுகிறார். இதற்கான சான்றுகள் இல்லை. இவை புனையப்பட்டனவே.

காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க்காப்பியன், காப்பியன் சேந்தன், காப்பியன் ஆதித்தன் என்ற பெயர்கள் இருப்பதையும் நோக்கவேண்டும்.

தொல்காப்பியத்திற்கு முன் இலக்கண நூல்கள்

          முந்துநூல் என்பதற்கு நச்சினார்க்கினியர் முன்னை இலக்கணங்கள் என்று கூறி அவை அகத்தியம் மாபுராணம் , பூதபுராணம், இசை நுணுக்கம் என்கின்றார். இறையனார் களவியலுரையில் மூன்று சங்கத்துக்கான நூல்கள் கூறப்பட்டுள்ளன.

என்ப, என்மனார், என்மனார் புலவர், மொழிப, மொழிமனார், மொழிமனார் புலவர், வரையார் என்பவற்றை மட்டும் ஏறத்தாழ 300 நூற்பாக்களில் கூறுகிறார். மேலும் உணர்ந்திசினோர், உணருமோர், அறிந்திசினோர், தெரியுமோர், தெளியுமோர், புலமையோர், புலனுணர்ந்தோர், சிறந்திசினோர், இயல்புணர்ந்தோர், குறியிந்தோர், வகுத்துரைத்தோர், நேரிதின் உணர்ந்தோர், வயங்கியோர், வல்லோர் என்று முந்து நூல்லாரைக் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியர் காலம்

  • தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த ‘முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார்.
  • தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர் என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
  • தொல்காப்பியர் எழுதிய ‘தொல்காப்பியம்’ வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
  • தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
  • வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
  • “தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது” என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் ‘தமிழ் இலக்கிய வரலாறு – தொல்காப்பியம்’ என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
  • இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200 இருக்கலாம்.
  • செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது.

தொல்காப்பியத்தின் நிலை 

            தமிழ் நிலப் பரப்பில் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களினால், ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு சமூகப் பொதுவெளியிலும், அறிவுப் பாரம்பரியத்திலும், தமிழ் அடையாளத்திலும் சில அதிர்வுகள் உருவாகின. இவற்றால் பல இலக்கிய இலக்கணப் பனுவல்கள் அழிந்தன / அழிக்கப்பட்டன. தமிழை இந்தியப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது தமிழில் ஒன்றும் விசேடமாக இல்லை என்று சொல்கிற ஒரு செல்நெறிகுறிப்பாக இடைக்காலத்தின் பின்னர் வளர்வதை நாம் காணலாம்.[1] இவற்றை எல்லாம் கடந்து நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியம் பொருளதிகாரம் குறித்து அறிப்படாமல் இருந்த நிலையும் இருந்துள்ளது. இறையனார் அகப்பொருள் நூலின் தோற்றவரலாற்றைக்  கூறும்போது, அரசன் இனி நாடு நாடாயிற்று ஆகலின் நூல் வல்லாரைக் கொணர்க என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்கஎழுத்ததிகாரமும்சொல்லதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்துபொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம் என்று வந்தார் வர அரசனும் புடைபடக் கவன்றுஎன்னை எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றேபொருளதிகாரம் பெற்றேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம் எனச் சொல்லா நிற்ப என.[2]  என்னும் கூற்றிலிருந்து, பொருளதிகாரம் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கிடைக்காமல் இருந்த நிலையையும் அறியமுடிகிறது. அதே நேரத்தில் தொல்காப்பியத்திற்குப் பின் வந்த இலக்கணநூல்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் இல்லாமல் உருவாகவில்லை எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பொருத்தவரை தொல்காப்பியப் பொருளதிகாரம் இருந்துள்ள நிலையினை, சி.வை.தா. அவர்கள் தாம் பதிப்பித்த பொருளதிகார முன்னுரையில்,

சென்னைப்பட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின் எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுதாரணங்களோடு பாடங்கேட்வர்கள் மிக அருமைமுற்றாய் இல்லையென்றே சொல்லலாம்வரதப்ப முதலியார் காலத்திலுந் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பதுஅவர் தந்தையர் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங் கேட்கும் விருப்பமுடையரான போது பிறையூரிற் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறாரரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிகம் திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமை யானும்,வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதானும்அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்ப முதலியாரென்று பெயர் வந்தமையானும்பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கணச் சமுச்சயம் நிகழ்த்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையானும் நிச்சயிக்கலாம்.[3]

பன்னீராயிரம் வருஷ காலத்தின் மேற்பட நிலைபெற்றோங்கித் தமிழ்க்கோர் தனிச்சுடர் போலத் பிரகாசித்து வந்த தொல்காப்பியமுந்தற்காலத்து இலக்கணங் கற்போர் அனைவரும் அதன் வழித் தோன்றிய சிற்றிலக்கணங்களையே கற்று அம்மட்டோடு நிறுத்தி விடுவதலால்எழுதுவாரும் படிப்பாருமின்றிப் பழம் பிரதிகளெல்லாம் பாணவாய்ப்பட்டுஞ் செல்லுக்கிரையாகியுஞ் சிதைவுப்பட்டுப் போகயாவராயினும் ஒருவர் வாசிக்க விரும்பிய வழியுங் கிடைப்பது அருமையாய் விட்டதுதமிழ் நாடனைத்திலும் உள்ள தொல்காப்பியப் பொருளதிகாரப் பிரதிகள் இப்போது இருப்பது இருபத்தைந்திற்கு மேற்படாஅவையும் மிக்க ஈனஸ்தித அடைந்திருப்பதால் இன்னுஞ் சில வருஷத்துள் இறந்து விடுமென்று அஞ்சியே அதனை உலோகோபகாரமாக அச்சிடலானேன்.[4]

எனக் குறிப்பிடுகிறார்.

பாட நோக்கிலான நூல்கள் தொடக்கத்தில் அச்சிடப்பெற்றன. பாட நூல் தன்மையிலிருந்து முழுமையும் பதிப்பித்தல் நோக்கி அச்சாக்கம் விரிவுபெற்று,  தமிழின் பண்டை இலக்கண / இலக்கிய நூல்கள் அச்சிடப்பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே.  காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கணமாகவும் பயன்பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன.  1835 – இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும், அ. முத்துச் சாமிப் பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்கம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக்கொணர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக 1838 – இல் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 – இல் தான் மழைவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள்

  1. ச.பவானந்தம் பிள்ளை
  2. ரா.ராகவையங்கார்
  3. காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார்
  4. வ.உ.சிதம்பரம் பிள்ளை
  5. பி.சிதம்பரம் புன்னைவனநாத முதலியார்
  6. தி.த. கனகசுந்தரம் பிள்ளை
  7. கந்தசாமியார்
  8. ரா.வேங்கடாசலம்
  9. எஸ். கனபதிசபாபதி
  10. சி. கணேசையர்
  11. நா. பொன்னையன்
  12. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை
  13. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை
  14. ஞா. தேவநேயப் பாவாணர்
  15. தெ.பொ.  மீனாட்சிசுந்தரம்
  16. கு.சுந்தரமூர்த்தி
  17. அடிகளாசிரியர்
  18. தி.வே.கோபாலையர்
  19. இரா.இங்குமரனார்

தொல்காப்பிய மூலம், பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *