நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே
– மூதுரை,9
நாள் ஒன்றுக்கு ஒரு நூறு பக்கங்களுக்குக் குறையாமல் படித்தலும், பதினாறு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுதலும், இரவில் படுக்கையில் வரும் சிந்தனைகளைப் பாடல் ஆக்குதலும் நாள் வழிக்கடமையாகக் கொண்டு, தமிழ் மொழிக்காவும் இனத்திற்காகவும் இறுதி காலம் வரை எழுத்து, பேச்சு எனச் செயல்பட்டவர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார். ஐயாவின் திருக்குறள் தொடர்பான நூல்கள், இலக்கண வரலாறு, சுவடியியல் போன்ற நூல்களின் வழியாக அறிந்திருந்தேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பு 2005 – இல் கிட்டியது. நெய்வேலிக்குச் சொற்பொழிவு நிமித்தமாக ஐயா வந்தபொழுது, நானும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழாரும் திருக்குறள் ஆய்வுத் தொடர்பாக அவர்களைச் சந்தித்தோம். அன்று தொட்டு ஐயா அவர்களுடன் ஏற்பட்ட சில நினைவுகளைப் பகிர்வதாகவே இக்கட்டுரை அமைகிறது.
என்னுடைய ஆய்வு திருக்குறள் பரிதியார் உரையைப் பற்றியது என்பதால் தவச்சாலை சென்றும் நெய்வேலி, தஞ்சை வரும்பொழுதெல்லாம் சந்தித்தும் ஐயாவுடன் கலந்துரையாடுவேன். சிலவேளைகளில் அவர்களுடன் தங்கியிருந்து உரைகளைக் கேட்ட பிறகு நானும் என் கணவரும் மீள்வோம்.
ஐயா அவர்களை ஆய்வுக்குக்காகச் சந்திக்கச் செல்லும் பொழுதெல்லாம் என் கணவரும் உடன் வருவார். என்னை விட என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழாரின் மீது அளவு கடந்த அன்பு. எப்பொழுதும் ஐயா வியந்து ஒரு மருத்துவராக இருந்து கொண்டு மனைவியின் கல்விக்கு இத்துணை உதவிபுரிகிறீர்களே நீங்கள் வாழ்க! என வாழ்த்துவார்கள். எங்களைப் பேரன், பேர்த்தி என அவர்களின் வாயால் விளிக்கும் பேறுபெற்றோம்.
ஐயாவின் ஒரு புல் இரண்டாம் பகுதி நெய்வேலியில் வெளியடப்பட்டது. அந்நூலினை நானும் என் கணவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பணித்தார்கள். என்னை அந்நூல் குறித்துப் பேசும்படி கூறினார்கள். அஃது என்னால் மறக்க இயலாத நிகழ்வாகும். என்னுடைய திருக்குறள் பரிதியார் உரைத்திறன், புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள் போன்ற நூல்களுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். எனக்கு இலக்கியம் இலக்கணங்களில் ஏற்படும் ஐயங்களைக் களைந்ததுடன், தொல்காப்பியம் குறிப்பாகச் செய்யுள் இலக்கணத்தை விவரிவாகப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.
2018 இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிவந்த தொல்காப்பியப் பதிப்பில் என்னையும் இணைப்பதிப்பாசிரியராக இணைத்துக்கொண்டார்கள். ஐயாவிடம் சிலர் ஏன் அவர்களை இணைத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்குத் தகுதியானவர், பழைய உரைகள் சிலவற்றை அவர் தான் தேடி எடுத்துக் கொடுத்தார் என்று மறுமொழி கூறியதாகக் கூறினார்கள்.
மொழிப்போர் மறவர் அவர்கள் 2017 – இல் நெய்வேலி விழா ஒன்றில் கலந்துகொண்டார்கள். நாங்களும் அவ்விழாவில் கலந்துகொண்டு, ஐயாவிடம் சிதம்பரம் வரும்படி நானும் என் கணவரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆறு நாள்கள் எங்களோடு வந்து தங்கினார்கள். யான் எவ்வூர் சென்றாலும் அச்செலவு தமிழுலாவாகவே இருக்கும் என்பர். எங்களுடன் தங்கிய நாள்களும் தமிழுலாகவே அமைந்தது. பிச்சாவரம் இதுவரை சென்றதில்லை என்றார்கள். ஐயாவுடன் நானும் என் கணவரும் பிச்சாவரம் நோக்கிப் பயணம் செய்தோம். அலையாத்தி காடுகளுக்கு இடையே படகில் பயணமானோம். ஐயா சிறு குழந்தையைப் போல இயற்கையோடு இணைந்து மகிழ்ந்தார்கள். அலையாத்தி காடுகளின் வரலாற்றினையும் இலக்கியங்களில் பதிவாகியுள்ளதையும் தில்லை மரம் குறித்தும் சிதம்பரத்திற்கு அப்பெயர் வழங்கிய வரலாற்றையும் எடுத்துக் கூறிக்கொண்டு வந்தார்கள். எங்களை அழைத்துச் சென்ற படகோட்டி ஐயாவின் மீது மிகுந்த பற்று உண்டாகி விட்டது. யாருக்குத் தான் ஐயாவைப் பார்த்தவுடன் பற்று உருவாகாது. நீண்ட நேரம் பல இடங்களுக்குப் படகோட்டி ஆர்வத்துடன் அழைத்துச் சென்றார். அந்நிகழ்வைக் கூறும் நூலாக ஐயா எழுதியது சுற்றுலாவும் தொற்றுலாவும்.
பூம்பூகார் சென்றதில்லை என்று கூறினார்கள். மூவரும் சென்றோம். பூம்புகார் இருந்த நிலைகண்டு வாட்டமுற்றார்கள். வேதனையோடு இருந்தார்கள். பூம்புகாரின் சிறப்பு, இளங்கோவடிகளின் புலமைத்தின்றன் கோவலன், கண்ணகி, மாதவி குறித்துப் பேசிக்கொண்டு வந்தார்கள்.
பூம்புகாரை விட்டு தஞ்சையில் உள்ள வயலூர் வீடு நோக்கிச் சென்றோம். வீட்டில் ஊஞ்சல் இருந்தது. ஐயா ஊசல் வரிப்பாடல்கள் எழுதியுள்ளேன் இதுவரை ஊஞ்சலில் ஆடியதில்லை என்றார்கள். ஊஞ்சலில் அவர்களை வைத்து ஆடிவிட்டோம். மிகுந்த மகிழ்ச்சி அவர்களுக்கு. நாங்களும் மகிழ்ந்தோம். பேரின்பம் அடைந்தோம். அந்நிகழ்வு ஊசல் வரி பாடலானது. மீண்டும் வயலூர் வரவேண்டும் என்றார்கள். இன்று ஊஞ்சல் உள்ளது. ஊசல்வரி பாடல்களும் உள்ளன.
2020 – இல் என் கணவர் கொரோனா தொற்றின் காரணமாக உயிர் நீத்து, நினைவில் நின்ற பொழுது என்னை மீட்டு எனக்குத் தந்தது ஐயாவின் மொழிகள். அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் காலை 7.45 இலிருந்த 8 மணி வரை என்னோடு உரையாடிவிடுவார்கள்.இன்னாதது இவ்வுலகம் என்பது எண்ணத்திற்குப் புரிந்தாலும் மனது ஏற்காத நிலையில் உலக இயல்பை உணர்த்தி இயங்கவைத்தது அவர்களின் சொற்கள். சொற்கள் என்னுள் இருக்கின்றன.
0 Comments