நிர்வாணமாக்கிக் கொள்ளுதல்

Dec 26, 2021 | Uncategorized | 0 comments

நிர்வாணமாக்கிக் கொள்ளுதல் அதாவது அகத்தை நிர்வாணமாக்கி நம் முன் தூக்கிப் போடும் திராணி எத்தனைப் பேருக்கு இருக்கும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏராளமான இன்பமான கசப்பான அனுபவங்கள் எத்தனையோ எத்தனையோ அனைத்தையும் நாம் பிறருடன் பகிர்ந்து கொள்வதில்லை. நம் பிம்பத்தைக் கட்டுடைக்கும் எதனையும் அவ்வளவு எளிதாக நாம் கூறிவிடுவதில்லை. சிலரால் மட்டுமே தமது சுயத்தை அப்பட்டமாக வெளிகாட்ட முடியும். மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சிதம்பர நினைவுகள் வாசித்தபொழுது அப்படியான ஒரு அனுபவத்தைப் பெற்றேன். 21 தலைப்புகளில் எழுதப்பெற்றுள்ள அனுபவங்கள் அனைத்தும் மனித மனத்தின் இண்டு ஈடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

இந்நூலை வாசித்த கொண்டிருக்கும்பொழுது இவர் எதற்காக இதனை எழுதினார்? வாசிப்பாளனுக்கு எதனைக் கடத்த இவர் முனைகிறார்? என்ற வினா என்னுள் எழுந்து அடங்கியது. குற்றச் செயல்கள் எனச் சமூகம் வகுத்துள்ள மதிப்பீடுகளை மீறும் பொழுது சிலர் குற்றவுணர்வில் தத்தளிப்பர், சிலர் அதனைக் கடந்து எளிதில் சென்றுவிடுவர், அருகியோர் மட்டுமே அதிலிருந்து ஞானத்தை அடைவர். மனிதனின் நடத்தை சூழல்களைப் பொறுத்தே மாறுபடுகிறது. அவரவருக்கு சாதகமாக இருக்கும் நிலையை மட்டுமே அவர்களால் எடுக்கமுடியும். நாட்கள் கடந்து எண்ணிப் பார்க்கும் பொழுது, அதனை வலியோடு கடக்கலாம், நடந்தற்காக மன்னிப்புக் கோரலாம். சிதம்பரத்தில் இவர் சந்தித்த வயதான இரு தம்பதிகளின் வாழ்க்கை அன்பை மட்டும் போதிக்கவில்லை பணம் மட்டுமல்ல வாழ்க்கை என்பதை அந்த முதியவர் தன் தாயிடமிருந்து பெற்றதை வாழ்நாள்வரை பின்பற்றுகிறார். நம்மை கலங்க வைக்கிறது. மனதின் அடியாழத்தில் நம்மை நோக்கி சில வினாக்களை எழுப்புகிறது. கடந்து வந்து, விட்டுச் சென்ற நினைவுகளைப் பாலச்சந்திரனுக்கு மட்டுமல்ல நமக்கும் கிளறி விடுகிறது.

அவருடைய அம்மா, மனைவி, கடந்து வந்த பெண்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையும் பொறுத்துக்கொண்டு கடத்தல் என்பதாகவே அமைகிறது. கடுகளவான சின்ன சின்ன அவதானிப்புகள் கூட  விட்டுவிடாமல் பதிவு செய்திருப்பது, சுற்றி இருக்கும் உலகத்திலிருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறோம் என்ற உணர்வைக் கொடுக்கிறது.

மலையாள மூலத்தைக் கே.வி ஷைலஜா மொழிபெயத்துள்ளார். வம்சி பதிப்பகம் வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நடை வாசிப்புக்குத் தடையில்லாமல் ஒரே மூச்சில் படித்துவிட்டு வைக்கத் தூண்டுகிறது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *