பூனையும் நானும்

Feb 21, 2019 | Uncategorized | 0 comments

கதிரவன் தன் கதிர்களால் மெல்ல வருடிக்கொடுக்கும்
நேரம். வீட்டின் பின்புறம் மதில் மீது ஒரு பூனை அதன் குட்டியுடன் இருந்தது.  புதிய வரவு. முன்பின் அதனை நான் பார்த்தது இல்லை. அன்று தான் பார்க்கிறேன். நான் அதனையேப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அங்கு முதல் முறையாக மாமரம் ஒன்று பூத்திருந்தது. சாத்துக்குடி மரம் இரண்டு மூன்று காய்களை ஈன்றிருந்தது. நார்த்தங் குருவி, சிட்டுக்குருவி முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அணிற்பிள்ளைகள் வேகமாக மரத்தில் தாவிக்கொண்டிருந்தன. பூனையைப் பார்த்தேன் அது என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது. உனக்குப் பசிக்கிறதா என்றேன். மியாவ் என்றது. உணவு எடுத்துவரவா என்றேன் மியாவ் என்றது. உணவு எடுத்து வந்து வைத்துவிட்டு தூர நின்று கொண்டேன். பூனை  கண்களிலும், நடையிலும் அச்சத்துடன் இறங்கி வந்தது. அதன் குட்டியை அழைக்கவில்லை. உணவு அருகே
வந்தது. என்னைப் பார்த்தது. அச்சப்படாமல் சாப்பிடு உன்னை நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்றேன். சாப்பிடத் தொடங்கியது. சுற்றும்முற்றும்பார்த்தவாறே. என் மீதும் கண் வைத்துக் கொண்டு. மெல்ல மெல்ல தன் நாவால் உணவினை நக்கி நக்கிச் சாப்பிட்டது. அப்பொழுது அதன் அருகே போக முனைந்தேன். அது பின்வாங்கியது. நான் ஒன்றும் உன்னைச் செய்யமாட்டேன். உன் தோழி நான் என்றேன். பிறகு சாப்பிட்டது. இன்னும் நெருங்கினேன். விலகுவது போல் பாவனை செய்தது. பயப்படாதே உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என்று கூறினேன். சாப்பிட்டது. அருகே அமர்ந்தேன். என்னைப் பார்ப்பதும் சாப்பிடுவதுமாகச் சாப்பிட்டு முடித்தது. சாப்பிட்டுவிட்டுத் தன் உடம்பினை வில்லை வளைப்பது போல் வளைத்தது. வாலினைத் தூக்கி நெட்டி முறிப்பது போல் முறித்தது. பிறகு அருகே வந்தது. என்னைச் சுற்றி வந்து என் காலினைத் தன் நாவினால் நக்கிவிட்டுச் சென்றுவிட்டது. பிறகு இருவதும் நட்பாகிவிட்டோம். நான் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் என் குரலை அடையாளம் கண்டு வந்து என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *