நூல் பதிப்பும் நுண் அரசியலும்…

Dec 2, 2010 | Uncategorized | 0 comments

நூல் பதிப்பும் நுண் அரசியலும்என்னும் நூல் புலம் பதிப்பகம் வழி வெளிவந்துள்ளது. ஆசிரியர் அ.சதீஷ் கேராளாவிலுள்ள சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.இவரின் பிற நூல்கள் ரசிகன் கதைகள், சங்க இலக்கிய உரைகள், கு.பா.ரா. கதைகள் ஆய்வுப் பதிப்பு, கு.பா.ரா. கட்டுரைகள் ஆய்வுப் பதிப்பு .

அச்சு ஊடகத்தின் வருகையால் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இன்று செம்மொழி என அடையாளப்படுத்திக் கொள்வதற்கான பிரதிகள் , அன்று ஓலைச்சுவடியிலிருந்து அடையாளங் காணப்பட்டு அச்சில் பதிப்பிக்கப்பெற்றன.
பதிப்பிக்கப்பட்ட பிரதிகளின் ஊடாக நிகழ்ந்த அரசியலைத் தக்கச் சான்றுகளுடன் , தான் கலந்த தமிழ், 19 ஆம் நூற்றாண்டுப் புத்தகப் பதிப்பு முறைகளும் உ.வே.சா அவர்களும், அகநானூறு உரைப் பதிப்பு நிகழ்ந்ததும் நிகழவேண்டியதும், பதிப்பாசிரியர் பயன்படுத்தும் அடைமொழிகள் சில விவாதங்கள், தமிழில் மதனநூல் பதிப்பு, திண்ணைப் பள்ளிச் சுவடிகள் பதிப்பும் சிக்கலும், நவீன கதைப் பதிப்புகள் புதுமைப்பித்தனின் கதைப் பதிப்புகளின் பதிப்பு அரசியல் என ஏழு தலைப்புகளில் நூல் பதிப்பும் நுண் அரசியலும் என்னும் நூலில் விவாதித்துள்ளார் இந்நூலாசிரியர்.
உ.வே.சா பதிப்பு பணியைக் குறிப்பிடும்போது ,அக்காலத்தில் நிலவிய பதிப்பு நூட்பத்தினை உள்வாங்கி பதிப்பித்துள்ளாரா என்பதை மேலும் ஆராயப்படவேண்டியதையும், சங்க இலக்கியப் பதிப்பின் மீது காட்டிய அக்கறையினை வேறு நூல்களைப் பதிப்பிக்கும் போது காட்டினாரா என்பதும் ஆய்வுக்குரியது என்னும் செய்தியையும், அவருடைய சமகாலத்தவர்களுடைய பதிப்பு செயல்பாட்டினோடு ஒப்ப வைத்து உ.வே.சாவை ஆராயும்போது பல புதிய செய்திகள் அறிவதற்கு வாய்ப்புள்ளதையும் சுட்டிச் செல்கின்றார்.
அகநானூற்றுப் பதிப்பில் காணக்கூடிய சிக்கல்களை எடுத்துக்காட்டி சிறந்த ஆய்வு பதிப்பு அகநானுற்றிற்கு தேவை என்பதை உணர்த்துகின்றார்.

பழைய உரை என்னும் சொல் பயன்பாட்டில் இருக்க கூடிய பிரச்சனைகளை விவாதித்து , பெயரறியப்படாத உரைகளைப் பழைய உரை என்று பதிப்பதைவிட பெயரறியப்படாத உரை என்றே பதிப்பிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றார்.

ஆக இந்நூலில் காணப்படும் அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து நோக்கும் பொழுது, தமிழ்ப் பதிப்பு நெறிமுறைகளை அறிந்து கொள்வதோடு, அப்பதிப்பில் காணப்படுகின்ற முரண்களையும் கண்டறியமுடிகின்றது.மேலும் சிறந்த ஆய்வு பதிப்பின் தேவையையும் உணர்த்துகின்றது இந்நூல்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *