காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!(நற்றிணை,39)
அருளினினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே( நற்றிணை,140)
அன்பில்லாத தலைவி நமக்கு அருள்செய்தாலும், அருள் செய்யாது பிரிந்து போனாலும் ,நீ மிகவும் உள்ளம் அழிந்து இரந்து வழிப்பட்டு நிற்றலை வெறுக்காதே. யான் கொண்ட காமநோயோடு கலந்த துன்பத்தைத் தவிர, வேறொன்றும் சிறிதளவு கூட, மருந்தாகும் தன்மையுடையது இல்லை என்று தலைவன் தம் நெஞ்சம் நோக்கி கூறினான்.
நல்காய் ஆயினும் நயனில செய்யினும்
நின்வழிப் படூஉம் என்தோழி நலநுதல்
விருந்திறை கூடிய பசலைக்கு,
மருந்து பிறிதின்மை நற்குஅறிந்தனை செம்மே ( நற்றிணை,247)
நீ தலைவிக்குத் தலையளி செய்யினும்,அவள் வெறுக்கும் செயலைச் செய்யினும், உன் மனதுகேற்ப நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியிலுள்ள
நிலை கொண்ட பசலை நோய்க்கு,நீயே மருந்தாவதன்றி பிறிதொரு மருந்தினை நீ நன்கு அறிந்து, பின் செல்வாயாக எனத் தலைவனுக்குத் தோழி கூறினாள்.
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர,
நினக்கு மருந்து ஆகிய யான், இனி
இவட்கு மருந்து அன்மை நோம்என் நெஞ்சே( ஐங்குறுநூறு,59)
மயக்கமுற்ற மனத்திற்குத் துன்பம் நீங்க, உனக்கு மருந்தாகிய நான் இத்தலைவிக்கு மருந்து ஆகமையை நினைத்து என் நெஞ்சு வருந்துகிறது,என்று தலைவனை நோக்கித் தோழி கூறினாள். தலைவனிடம் களவுகாலத்தில் தலைவியைச் சந்திக்கத் துணையாக இருந்து, அவன் காமநோய் தீர்த்தமையின், தோழி நினக்கு மருந்தாகி என்றாள், பரத்தையின் தொடர்பால் ஊடல் கொண்டு இருத்தலின், தலைவியின் துன்பத்திற்கு ஆற்றாளாகிய தோழி தலைவிக்கு மருந்தின்மை நினைந்து தன் நெஞ்சு நோகும் என்றாள்.
நின்முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிதுயாதும் இல்லேன்; திருந்திழாய்!
என் செய்வாம் கொல்இனி நாம் ( கலித்தொகை,60)
உன் முகத்தை இக்காலத்தே பெற்றால், அது மருந்தாவதல்லது வேறு சிறிதும் மருந்து இல்லையாக இருக்குமாயின், இனி நாம் என்ன செய்ய முடியும்? என்று தலைவன் கூறியதைத் தோழி தலைவியிடம் கூறினாள்.
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
ஞாயையும் அஞ்சுதி ஆயின், அரிதுஅரோ!
நீ உற்ற நோய்க்கு மருந்து( கலித்தொகை,107)
மிகுதியாக ஆயர் மகனையும் நீ காதலிக்கின்றாய்; மிகுதியாக தாயைக் கண்டும் அஞ்சுகிறாய்; இனி நீ கொண்ட காம நோய்க்கு மருந்து கிடைப்பது அரிது என்று தோழி தலைவியிடம் உரைக்கின்றாள்.
0 Comments