இச் செய்தியின் வாயிலாக ஆவுடையம்மாள் என்னும் பெயர் பின்னால் ஆவுடை அக்காள் என வழங்கலாயிற்று என அறியமுடிகின்றது.
செங்கோட்டையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடை அக்கா. இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, கணவரை இழந்த கைம்பெண்ணாக வீட்டுக்குள் வளர்ந்தார். ஊரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அக்காவின் தாயார் அவர் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பண்டிதர்களை வீட்டுக்கு வரவழைத்து அக்காவுக்குப் பாடம் கற்பித்தார்கள். கைம்பெண்ணுக்கு கல்வியா என ஊர்க்காரர்கள் ஏளனம் செய்தார்கள். தற்செயலாக அந்த ஊருக்கு வருகைப் புரிந்த ஸ்ரீவெங்கடேசர் என்னும் துறவி, தன்னை வரவேற்க பலரும் தத்தம் வீட்டு வாசலில் நின்று காத்திருந்ததை அறிந்தும், கதவுகள் சாத்தப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்னால் நின்று ஒரு பாடலைப் பாடினார். கைம்பெண்ணின் வீட்டின் முன்னால் துறவி நிற்பதைப் பார்த்து சீற்றம் கொண்ட மற்றவர்கள் தத்தம் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்கள். பாட்டுச் சத்தம் கேட்டு இளம்பெண்ணான ஆவுடை வெளிப்பட்டதும், அவளை அருகில் அழைத்து ஆசி வழங்கிவிட்டு சென்றார் துறவி. ஊருக்கு வெளியே ஆற்றங்கரையில் அந்தத் துறவி தங்கியிருப்பதை அறிந்த அக்கா, அன்று மாலையில் அவரைச் சந்திப்பதற்காகச் செல்ல விரும்பினார். ஆனால் அச்சத்தின் காரணமாக அவருடைய தாய் அதற்கு ஒப்பவில்லை. ஒரு கைம்பெண் வீட்டு வாசலுக்கு செல்வதற்கே தடையிருந்த காலம்அது. மகளுடைய பிடிவாதம் அவருக்கு கலக்கத்தை தந்தது.பிள்ளை பாசம் அனுப்பி வைக்கத் துண்டியது. ஆனால் ஊராரைப் பற்றிய அச்சம் அதைத் தடுத்தது .அவளைக் கண்காணிக்க ஒரு துணையை ஏற்பாடு செய்துவிட்டு வேறு வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார் அக்காவின் தாய்.
மனம் கவரும்படி உரையாடுவதில் வல்லவரான அக்கா, அவருடன் நெகிழ்ச்சியாகப் பேசி மனத்தை மாற்றி, அவரையே துணையாக அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். சூரியன் மேற்கு தொடர்ச்சி மலையில் சரியும் நேரம் இதயம் படபடக்க அக்கா ஆற்றங்கரை மண்டபத்தின் அருகில் நின்றாள். ஒரு கணம் அவள் தலை சுற்றியது மறுகணம் அக்காவின் கண்ணெதிரில் அந்தத் துறவி நிற்பதைக் கண்டார். பதற்றத்தில் கைகால் நடுங்க, துறவியின் பாதத்தில் விழுந்தார் அக்கா. துறவியின் கை முகவும் அன்புடன் அக்காவின் தலையை வருடித் தந்தது. அக்கணமே அத்துறவியை அக்கா தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அக்காவை எழுப்பி அமரவைத்த துறவி, அவர் அகம் விழிப்புறும் வகையில் ஞானத்தை வழங்கிவிட்டு மறைந்து போனார்.
அந்த ஞானச் சொற்களில் லயித்து, ஊரை மறந்து உலகத்தை மறந்து ஆற்றங்கரையிலேயே தங்கிவிட்டார் அக்கா. அவருக்குப் பித்துப் பிடித்திருக்கிறது என ஏளனம் செய்து ஊர்க்கார்ரகள் அவரை சாதியிலிருந்து விலக்கி வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். அதற்கிடையில் அக்காவே அந்த ஊரை விட்டுச் சென்றுவிடார். பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியாக மாயவரத்தை அடைந்த போது, குருவாக ஏற்றுக் கொண்ட துறவியை மறுபடியும் பார்க்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது.
அக்காவுக்கு உபதேசமும் ஆசியும் வழங்கிய துறவி அவரை செங்கோட்டைக்கே சென்று தங்கியிருக்கும் படி சொல்லிவிட்டுச் சென்றார். இடைப்பட்ட காலத்தில் அத்வைத உண்மையை விளக்கும் அக்காவின் பாடல்கள் எங்கெங்கும் பரவி, அவருக்கு மதிப்பு மிக்க ஓரிடத்தை உருவாக்கியது. அவருக்குப் பல சீடர்கள் உருவாகத் தொடங்கினார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறும் போது காணப்பட்ட எதிர்ப்பு, ஊருக்குத் திரும்பியபோது மறைந்து, எங்கெங்கும் வரவேற்பு முழக்கங்களே கேட்டன. வெகு காலம் அங்கே வசித்த அக்கா, அத்வைத உண்மையைப் பரப்புவதையே தன் நோக்கமாகக் கொண்டு, மிக எளிய மனிதர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஏராளமானப் பாடல்களைப் பாடினார்.
தான் அறிந்த உண்மையை உலக மாந்தர் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்று மனதார விரும்பினார். அக்கா தன் முதுமைப் பருவத்தில் ஒருநாள் ஓர் ஆடிமாத அமாவாசை அன்று குற்றாலம் சென்று அருவியில் குளித்து விட்டு, அப்படியே மலைச் சரிவில் சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்து விட்டு வருவதாகச் சீடர்களிடம் கூறிவிட்டுச் சென்றார் ஆனால் திரும்பி வரவேயில்லை( பாவண்ணன் கட்டுரையில் இருந்து)
0 Comments