அக்கா என்னும் ஆளுமை…

Aug 18, 2010 | Uncategorized | 0 comments

நீயூ செஞ்சுரியின் உங்கள் நூலகத்தில் பாவண்ணன் எழுதிய அக்கா என்னும் ஆளுமை கட்டுரையை அண்மையில் படித்தேன். சு. வேங்கடராமன் எழுதிய அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு என்னும் நூலில் தமிழிலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படாத, தமிழுலகம் அறியாத ஆவுடை அக்காவைப் பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையை ஆக்கியுள்ளார்.

அந்நூலுள் சு.வேங்கடராமன் அவர்கள் மன ஆதங்கத்துடன் ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளதைக் குறிப்பிடுகின்றார்.

பாரதியார் அக்காவை நன்றாக அறிந்திந்திருந்தார், அக்காவின் பாடல்களை அவர் மனம்நெகிழச் சுவைத்தார், ஆனாலும் அக்காவைப் பற்றி ஒரு சிறு குறிப்பைக் கூட எங்கும் அவர் எழுதி வைக்கவில்லை.

செங்கோட்டை ஆவுடை அக்கா அவர்களின் பாடல்களை ஏறத்தாழ முந்நூறு பக்கங்களில் வரிசைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தபோவனம் கிராமத்தில் உள்ள ஞானாந்த நிகேதன் வெளியீடாக இத்தொகுதி வெளிவந்துள்ள குறிப்பையும் தந்துள்ளார். எந்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது என்னும் குறிப்பு காணப்படவில்லை.

அக்கா பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புற மெட்டுகளின் வடிவத்தில் எளிய பமரனுக்கும் வேதாந்த கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அக்காவின் பாடல்கள் சில

ஆசை என்னும் ஏலேலோ – அரும்புவிட்டு அயிலேலோ
கோசம் என்னும் ஏலேலோ – கொழுந்துவிட்டு அயிலேலோ
மோட்சம் என்னும் ஏலேலோ – மொட்டுகட்டி அயிலேலோ
போதம் என்னும் ஏலேலோ – பூப்பூத்து அயிலேலோ
காமம் என்னும் ஏலேலோ – காயகாத்து அயிலேலோ
கருணை என்னும் ஏலேலோ – காவலிட்டு அயிலேலோ
பக்தி என்னும் ஏலேலோ – பழம் பழுத்த அழிலேலோ

மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும்
நமக்கு ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும்
உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும்
தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணி பாரும்பாரும்

சேவலும் கோவென்று கூவத் தொடங்குமே வெண்ணிலாவே
ஆவலைத் தீர்க்க அழைக்கவா நாதனை வெண்ணிலாவே
அகர்த்தனை இப்போது அழைத்துவராவிட்டால் வெண்ணிலாவே
அரைகஷணம் தங்காதென் ஆவி தயை செய்வாய் வெண்ணிலாவே

ஆவுடை அக்காவைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் கிடைத்த பாடல்களையும்முதல்முதலாகத் திரட்டியவர் ஆய்குடி வேங்கடராம சாஸ்திரியார்.1953 இல் இத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இதற்கு முன்பாக 1890 -1910 காலகட்டங்களில் வைதியநாத பாரதியாரும் இராமஸ்வாமி தீட்சிதரும் தஞ்சை திருவதியில் வெளியிட்ட சிறுசிறு பிரசுரங்களின் வழியாகக் கிடைத்த பாடல்களையும் வாய் வழியாகத் தொகுத்த தனிப்பாடல்களையும் கையெழுத்துப் பிரதிகளாகக் கண்டெடுத்த சில பாடல்களையும் இத்தொகுப்பு பயன்படுத்திக்கொண்டனர். அதற்குப் பிறகு பாடல்களைத் திரட்டும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இம்முயற்சியில் மனம் தளராமல் ஈடுபட்டவர்கள் கோமதி அம்மையார். இவர் பாரதியாருக்கு உறவினர். இவர் 1964 இல் சங்கர கிருபா என்னும் இதழில் ஆவுடை அக்காளைப் பற்றி விரிவாக கட்டுரை எழுதுகிறார் அதில்

சுப்பிரமணிய பாரதியார் அவர்களுக்கு அக்கா அவர்களின் பாடல்கள் என்றால் உயிர், அவரும் அக்காவின் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாக தெரிகின்றது. அவளுடைய அநேக பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் அவரும் அநேக வேதாந்த பாடல்களைப் புனைந்திருக்கின்றார். அவர் எனது தாயார் அவர்களுக்கு சகோதரியின் கணவராகையால் சிறு வயதில் அவர் மூலமாக சில தகவல்கள் அறியும் பாக்கியம் கிடைத்தது.

என்று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *