சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு (சிறப்பாய்வு – உறையூர்)

Jun 30, 2010 | Uncategorized | 0 comments

தமிழக ஊர்ப்பெயர் ஆய்வுகள் ,
1. ஊர்ப்பெயர் புனைவுகளை ஆதரித்துப் பொருள் கூறுதல்.
2. ஊர்ப்பெயர் புனைவுகளைக் கட்டுடைத்து அறிவார்ந்த நிலையில் விவாதித்தல்.
என இரண்டு நிலைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளுக்கு அடிப்படையாக 18 ஆம் நூற்றாண்டில் கோட் பிரைடுவில் ஹெல்ம் லெய்ப்னிஷ் என்பவர் இடப்பெயராய்வை ஒரு அறிவியல் துறையாகத் தோற்றுவித்தார். இத்துறை வரலாறு, மொழியியல் துறைகளில் அசைவுகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இடப்பெயராய்வு உலகளவில் கவனப்படுத்தப்பட்டு, மேற்கண்ட இரண்டு நிலைகளில் உலகளவிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இடப்பெயர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன .
வள்ளலார்(1828-1874) ஊர்ப்பெயராய்வில் விருப்பம் காட்டினார் என்றாலும் பெரிதாக ஈடுபடவில்லை. 1946 இல் வெளியான ரா. பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் என்னும் நூல் படிப்பதற்குச் சுவையாக இருப்பினும் ஆய்வு தொய்வுடையதாக அமைந்துள்ளது. (2008:206). திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தலபுராணங்களிலும் ஊர்ப்பெயர் பற்றிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் அக்காரணங்கள் புராண புனைவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இது போன்ற செயல்பாடுகளில் ஊர்ப்பெயர்களில் காணப்படும் புனைவுகளை ஆதரித்து அதற்கு ஏற்றார் போல் விளக்கம் கூறிச்செல்லும் போக்கே காணப்பட்டன.
மொழியியலின் வருகையால் ஊர்ப்பெயர் ஆய்வுகள் அறிவார்ந்த தளத்தில் முன்னெடுக்கப்பட்டன, 1965 இல் கேரளப் பல்கலைக்கழகத்தில் எம்.லிட் பட்டத்திற்கு ஞானமுத்துவும் டாக்டர் பட்டத்திற்குக் கி.நாச்சிமுத்துவும், 1973 இல் திருவேங்கடம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்திற்கு ஆர்.விஸ்வநாத ரெட்டியும் இத்தளத்தில் இயங்கி ஊர்ப்பெயராய்வில் புதுத் தடத்தினை உருவாக்கினர்.
1972 இல் திருப்பதியில் அனைத்திந்திய திராவிட மொழியியல் கழகம் தன்னுடைய இரண்டாவது மாநாட்டை நடத்தியபொழுது திராவிட இடப்பெயராய்வுக் கழகத்தைத் தோற்றுவித்தது.
1976 இல் வால்டேர் நகரில் திராவிட மொழியியல் கழகம் நடத்திய கிடுகு இராம மூர்த்தி நினைவு இடப்பெயராய்வுச் சொற்பொழிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இதன் விளைவாக சமூக பண்பாட்டு மொழி அசைவுகள் ஊர்ப்பெயரில் ஊடாடிக்கிடக்கின்றன என்பதையும், தொல் பொருளாய்வில் காணப்படாததும், வரலாற்றுச் சான்றுகளில் திரிபடைந்தும் அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியல் செய்திகளை இடப்பெயர்கள் முழுமையாகத் தருகின்றன(1983:51) என்பதையும் உணர்ந்து 1979 இல் இந்திய இடப்பெயர் கழகம் மைசூரிலுள்ள குவேம்பு வித்திதக் டிரஸ்டின் ஆதரவுடன் நிறுவி,பல கருத்தரங்குகளை நடத்தியது. அதோடு Studies in Indian Places Names என்ற பெயரில் ஆய்விதழையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
கல்வெட்டுகளும், செப்பேடுகளும், நாணயங்களும், மட்பாண்டங்களும் முதுமக்கள் தாழிகளும், தொல்லியல் வரலாற்றினை அறியப் பெரிதும் உதவி செய்கின்றன. அதுபோலவே சங்க இலக்கியங்களும் தொன்மையான ஊர்ப்பெயர்கள் ஆய்வுக்கு உறுதுணை செய்கின்றன என்பதை உணர்ந்த உலகத்தமிழாராய்சி நிறுவனமும் ஊர்ப்பெயர்த்தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு 1983 இல் கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர்கள் என்னும் நூலை முதலில் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து சமகால ஊர்ப்பெயர்களையும், இலக்கியங்களில் காணப்படுகின்ற ஊர்ப்பெயர்களையும் தொகுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியத்தின் மீதான வாசிப்பும், ஆய்வும் பல்வேறு நிலையில் நிகழ்த்தப்பட்டுள்ளன. சங்க இலக்கிய ஊர்ப்பெயர்களைத் தொகுத்து, ஆர்.ஆளவந்தார் என்பவர் ஆய்வுகளை மேற்கொண்டார். எனினும் தொடர்ந்து ஆய்வு நிகழ்த்துவதற்குரிய களமாகவே அத்துறை அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ஊர்ப்பெயர்களை முழுமையாகத் தொகுத்து நிலவரைவுக்கு உட்படுத்தும் போது, சங்க காலம் பற்றிய வரலாற்றுத் தெளிவும், பிற்காலங்களில் குறிப்பாக சமய நிறுவனங்களின் பின்னணியாலும், காலனிய ஆதிக்கத்தின் விளைவாலும் ஊர்ப்பெயர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும் இருப்பதை இனங்காண முடிகிறது. ஊர்ப்பெயர் ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடும் ஆர். ஆளவந்தார் ,
ஊர்ப்பெயராய்வுகள் பழந்தமிழரின் இருப்பைப் பறைசாற்றுவதோடு, ஊர்ப்பெயர்களை வைப்பதில் நம்முன்னோர் ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றி இருப்பதையும் அறியலாம். எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும். வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. எனவே இடப்பெயர்கள் எல்லாம் மனிதனின் மொழிமரபையும் பண்பாட்டையும் வளர்க்கின்றன. இதனடிப்படையில் ஊர்களை இனங்காணுவது மனித இனத்தின் முக்கிய நடத்தையை உருவாக்குகின்றது. (1984:10)
என்கிறார்.
எனவே ,‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’(தொல்.சொல்.640) என்னும் தொல்காப்பியரின் கூற்றின்படி, ஊர்ப்பெயர்களும் ஏதோ ஒரு பொருளினைப் பொதிந்துக்கொண்டு உள்ளன. அப்பொருள் இயற்கை சார்ந்தோ, மக்களின் வாழ்வியல் நிகழ்வுகள் கலந்தோ இருப்பதனால், ஊர்ப்பெயரினை அறிந்துகொள்ளுதல் இன்றைய தேவையாகவுள்ளது.
சங்க இலக்கியப் பாடல்களில் மட்டுமல்லாமல், அப்பாடல்களைப் பாடிய புலவர்களும் தாங்கள் சார்ந்த ஊரினை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் தங்களுடைய பெயருடன் ஊரின் பெயரினையும் இணைத்துள்ளனர். சங்க இலக்கியத்தில் 200க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்கள் ஊர்ப்பெயர்களின் அடையுடனே காணப்படுகின்றன.
சங்க இலக்கியங்களில் இயற்கையைச் சார்ந்தும் (குன்றம், கொல்லி, முதிர மலை), நீர்நிலையமைப்பாலும் (அலைவாய், கண்டவாயில், துறையூர்) தாவரத்தின் பெயராலும் (அரையம் ,மருவூர், மல்லி) விலங்கின் பெயராலும் (எருமைவெளி, செங்கண்மா) தெய்வத்தின் பெயராலும் (இருந்தையூர்) அரசர்களின் தொடர்பாலும் (கிள்ளி மங்கலம், கோநாடு), நிலப்பிரிவின் தன்மையாலும் (நெய்தலங்கானம், பட்டினப்பாக்கம், வயலூர்), தொழிற் பெயரினாலும் (செயலூர், கொற்கை) பொருட்பெயராலும் (அள்ளூர், ஊணூர், கள்ளூர்), திசைப்பெயராலும் (குடந்தை, குடவாயில், இடைக்காடு), போர்முனைத் தொடர்பாலும் (அட்டவாயில், முனையூர்), இருக்கும் இடத்தின் தன்மையாலும் (ஈரந்தை, உறந்தை, ஏரகம்) பிற நாட்டுப் பெயர்களும் (அடவிநாடு, அங்க நாடு, துளுநாடு, புன்றாளக நாடு) என 300 – க்கும் மேற்பட்ட ஊர்ப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சங்க காலத்தில் நகரங்களாக விளங்கியவைகளுள் சில, பிற்காலத்தில் தங்கள் அடையாளங்களை இழந்து , வளர்ச்சியடைந்த நகரத்தின் அங்கமாக மாறிவிடுதும் உண்டு. பாண்டிய மன்னர்கள் ஆண்ட மதுரை இன்றும் தன் அடையாளத்தை இழக்காமல், இயங்கிக் கொண்டு இருக்கின்றது. அதே நேரத்தில் சேரர் ஆண்ட வஞ்சி பற்றி முடிவு செய்யமுடியாத சூழல். சோழ மன்னர்களின் தலை நகரமாக விளங்கிய உறந்தை தன் அடையாளத்தை இழந்து திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக இன்று மாறிவிட்டது. இவ்வுரந்தை நகரமே தற்பொழுது உறையூர் என அழைக்கப்படுகிறது. இவ் உறந்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாற்றத்திற்கு உட்பட்டு வந்துள்ளது என்பதைச் சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு ஆராயமுடியும்.
உறந்தை – உறையூர்
உறந்தை சங்க காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது . இது திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1.6 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது உறைந்தை, உறையூர், கோழி, கோழியூர், வாரணம், உரபுரம் முதலான பெயர்களாலும் வழங்கப்பட்டது.
உறப்பு என்ற சொல் செறிவு என்னும் பொருள்படுவதைக் காணும்போது, மக்கள் நெருங்கி வாழ்ந்த இடமாக இருந்ததால் உறந்தை எனப் பெயர் பெற்றிருக்கலாம். உறைதல் என்றால் தங்குதல் எனப் பொருள் கொண்டு மக்கள் வாழ்வதற்குரிய நிலமைப்பும், வளங்களும் இருந்த ஊர் ஆகையால் உறையூர் எனப் பெயர் வழங்கியிருக்கலாம். வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை(குறுந்.11) மக்கள் வாழ்வதற்குரிய வளமை நிறைந்து காணப்பட்டதால் ஊர் எனப்படுவது உறையூர் எனவும் பாராட்டப்பட்டுள்ளது. சங்க பாடல்களில் உறந்தை எனவும், சங்க புலவர்களின் பெயர்களோடு ஊர்ப்பெயர் அடையெடுத்து வரும்பொழுது உறையூர் எனவும் வழங்கப்படுகிறது. ஏணிச்சேரி முடமோசியார், கதுவாய்ச் சாத்தனார், சல்லியங்குமரனார், சிறுகந்தனார், பல்காயனார், மருத்துவன் தாமோதரனார், முதுகண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் பெயருடன் உறையூர் அடையெடுத்தே வருகின்றது.
சிறுபாணாற்றுப்படை,83, நற்றிணை, 234,400 குறுந்தொகை,116, அகநானூறு,4,6,93,122,137,226,237,369,385, புறநானூறு,39, 58, 352,395 ஆகிய சங்க இலக்கியப் பாடல்களில் உறந்தை என்றும் புறம் 68,69 ஆகிய பாடல்களில் உறந்தையோன் என்னும் சொல்லட்சிகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்திடங்களிலும் உறந்தை என்னும் சொல்லாட்சியே காணப்படுகின்றன. சங்க இலக்கியப் புலவர்களின் பெயரிலும் பின்னால் தோன்றிய இலக்கியங்களிலும், உரைகளிலும் தான் உறையூர் என்னும் சொல்லாட்சி காணப்படுகின்றது.
சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் உறையூர் (சிலம்பு.10—242) எனவும், உறந்தை எனவும்(சிலம்பு.8-3)கோழி (சிலம்பு.299) வாரணம்( சிலம்பு.10- 247,248) இளங்கோ ஆண்டிருப்பதும், முத்தொள்ளாயிரத்தில் உறையூர் (58 – 3) என வருவதும் குறிப்பிடத்தக்கது.
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது (புறம்.395) என்னும் அடிக்குப் பெயரறியப்படாத உரையாசிரியர் உறந்தை என்பதற்கு உறையூர் எனக் குறிப்புரையில் குறிப்பிடுகின்றார்(1971:592).
உறந்தை என்பதற்கு உ.வே.சா பதிப்பித்த புறநானூற்று உரையில் அரும்பத முதலியவற்றின் அகராதியில்,
உறையூர் என்பதற்கு விளக்கம் கூறும் பொழுது உறையூர் ஓருர் பழைய இராசதானி; உறந்தை என்றும் கோழி என்றும் வழங்கப்படும்(1971:613).
என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலப்பதிகார அரும்பத முதலியவற்றின் அகராதியில் உறந்தை என்பதற்கு மேற்கண்ட விளக்கத்தையே கூறுகின்றார்.(2008:621)
இவ்வடிக்கு உரையெழும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையும்,
காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குவதற்கு முன்பே விளக்கம் பெற்ற தலைநகர் உறையூர் ஊரெனப்படுவது உறையூர் என்ற சிறப்புடையது. அதனையே இவர் செல்லா நல்லிசை யுறந்தை என்று குறிப்பிடுகின்றார். (2007:446)
உறந்தை என்பதற்கு உறையூர் என்றே பொருள் எழுதுகின்றார்.
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை இயைஇ(புறம்,67)
இப்பாடலில் கோழி என்பதற்குப் புறநானூற்றுப் பெயரறியப்படாத உரையாசிரியர்,
நல்ல சோழநாட்டின்கட் சென்று பொருந்தின், உறையூரின்கண் உயர்ந்த நிலையுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பொறையொடு தங்கி வாயில்காவலர்க்கு உணர்த்திவிடாதே(1971: 159)
புறநானூற்று 212 பாடலில் கோழியோன் என்பதற்கு உறையூரென்னும் படைவீட்டிருந்தான் எனவும் கோழி என்பது உறையூரையே குறிக்குமெனப் பதிவு செய்கின்றார்.
சிலப்பதிகார நாடுகாண் காதையில்,
முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்(சிலம்பு,10- 247,248)
என்ற அடிக்கு அடியார்க்குநல்லார் வாரணம் ஆகுபெயர் யானையைக் கோழிமுருக்கால் கோழியென்று பெயராயிற்று. யானை சயித்த கோழி தோன்றினவிடத்து வலியுடையதென்று கருதி அவ்விடத்து அதன்பெயராலே சோழன் ஊர்காண்கின்ற பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறம்பே சிறையுடைய கோழி என்று ஆயிற்று.
உறையூர் என்பதற்கு ,
இது சோழர்களுடைய பழைய நகரம். இஃது உறந்தை என்றும் கோழியென்றும் வழங்கப்படும். பழைய உறையூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பாண்டமங்கலத்தில் இருபதடிக்கு கீழ் இருக்கிறது. மண்மாரியால் முழுகியது
என அபிதானசிந்தாமணி விளக்கம் கூறுகின்றது.
சமணர்கள் மந்திர வலிமையினாலோ, தவ வலிமையினாலோ கல்மழையும் மண்மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என்று ,
மலைகொண் டெழுகுவார் கடல்கொண் டெழுவார்
மிசைவந்து சிலா வருணஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுவார்
இவறிற் பிறர் யாவர் நிசாசரே(தக்கயாகப்பரணி 70)
கூறுகிறது. இதற்குப் பழைய உரையாசிரியர் உறையூரில் கல் வருஷமும் மண்வருஷமும் (வருஷம்- மழை) பெய்வித்து அதனைக்கெடுத்துத் துரோகஞ் செய்தார் இவர். அதற்குப்பின்பு இராசதானி திருச்சிராப் பள்ளியாய்த்து என்று கூறிகின்றார்.இதனைக் கொண்டே அபிதானசிந்தாமணி ஆசிரியர் மண்மாரியால் உறையூர் முழுகியது என்று கூறுகின்றார் போலும்.
ஒரு ஊர் பல பெயர்களைப் பெறுவது இயல்பு. மேற்காட்டிய சான்றுகளில் இருந்து உறந்தை, உறையூர், கோழி, கோழியூர் அனைத்தும் ஒரே ஊரே என்று துணியலாம்.
இருப்பினும் சங்க இலக்கிய பாடல்களில் உறந்தை என்னும் சொல்லாட்சி மிக்கு வருகின்றது. ஆனால் சங்க பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயரில் ஊர்ப்பெயர் அடையெடுத்து வரும்போது உறையூரைச் சார்ந்த புலவர்களுக்கு உறையூர் பெயரே அடையாக வருகின்றது. சங்க இலக்கியத்தில் உறந்தை என வரும் இடங்களில் எல்லாம் பழைய உரையாசிரியர் உறையூர் என்றே குறிப்பிடுகின்றார். அவருக்குப் பின் எழுந்த உரைகளும் உறந்தையை உறையூர் என்றே எழுதுகின்றன. கி.பி. 13 நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில் உறந்தை என்றே கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி5: 548)
கோழி,கோழியூர், வாரணம் ஆகிய ஊர்களுக்குக் கூறப்படும் காரணங்கள் புனைவு தன்மை உடையதாகவே காணப்படுகின்றது.
தஞ்சைக்கருகில் உறந்தைராயன் குடிக்காடு என்னும் ஊர் காணப்படுகின்றது, அதோடு கள்ளர் இனத்தில் உறந்தைராயர்,உறந்தை கொண்டார், உறந்தைப்பிரியர், உறந்தையர், உறந்தையாண்டார், உறந்தையாளர், உறந்தையாளியார், உறந்தையாட்சியார், உறந்தையுடையார் என்னும் பட்டப்பெயர்களும் உள்ளன. இவை உறந்தையொடு தொடர்புடையனவா என்பதும் ஆய்வுக்குரியுது.
தொல்காப்பியப் புணரியலில் 11 ஆவது நூற்பாவிற்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர் மருதநிலத்துக்குரிய ஊர்ப்பெயர்களுக்குப் பின்னொட்டாக ஊர் வரும் என்று குறிப்பிடுகின்றார். ஆகையால் உறையூர் மருதநிலப் பகுதியாக இருப்பதால் உறையூர் என்ற பெயரே முன்பு வழக்கில் இருந்து பின்பு மருவி உறந்தை ஆகியிருக்கலாம், என்றாலும் நமக்குக் கிடைத்துள்ள முதல் சான்றான சங்க இலக்கியத்தில் ஊறந்தை என்னும் சொல்லாச்சியே காணப்படுகின்றது, அதோடு அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் பட்டப்பெயர்களோடு உறந்தை என்னும் பெயரே வருவதால் முதலில் உறந்தை என்று வழங்கப்பட்டுப் பின்னால் உறையூர் என்னும் பெயர் வழங்கப்பட்டு இருக்கலாம் எனத் துணியலாம்.
உறந்தை சோழர்க்குரியதாகவும், வளமையாகவும், செல்வச் சிறப்புடன் திகழ்ந்ததால் மக்கள் அதனை விட்டு நீங்க விருப்பம் கொள்ளதவர்களாகவும் இருந்தனர்,
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர்(அகம்.385)
என அகநானூறும், நல்ல புகழினையும் தேரினையும் உடைய சோழனது உறந்தை தன்பால் வாழ்வோர் விட்டு நீங்காமைக்குக் காரணமான சிறப்பினை யுடையது என (சிறுபாணற்றுப்படை82,83) கூறுகின்ற சிறப்புப் பொருந்திய, உறந்தையின் தொடக்கால வரலாற்றில் வெளியன் தித்தன் என்னும் தலைவனுக்கு ஒரு சிறந்த இடம் உண்டு. கடற்கரைப் பட்டிணத்தின் தலைவனான இவன் உறையூரைக் கைப்பற்றிப் பிறர் எளிதில் தாக்காவண்ணம் உறையூரில் அரண்களை அமைத்து, வலுவுள்ளதாக மாற்றியுள்ளான்.
நொச்சி வேலித் தித்தன் உறந்தை
கல்முதிர் புறங் காட்டன்ன (அகம்,385)
வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண் (அகம்,137)
அதோடு உறந்தை நல்ல வளம் பொருந்திய தலமாகவும் , வெண்ணெய் வயல்கள் வேலியாகச் சூழ்ந்த உறந்தை பெரிய வண்மையுடைய தித்தனுக்குரியதாவும். (புறம்.352) உறந்தையைச் சுற்றியுள்ள பகுதி வளப்பமுடையதாகவும் நெற்குவியல்கள் மிகுந்த உறந்தை மழைபோல வழங்கும் வண்மையுடைய தித்தனுடையதாகவும்(அகம்.6) சிறுகண் யானைகளையுடைய தித்தனுக்குரிய உறந்தை கெடாத நல்ல புகழ் வாய்ந்ததாகவும்; நல்ல விளைபுலங்களால் சூழப்பட்டு இருந்ததாகவும் (புறம்,395) இப்பாடல்களில் காணப்படுவதால் தித்தன் ஆண்ட காலத்தில் உறையூரைச் சுற்றியுள்ள இடங்கள் நெல் உற்பத்தி திறன் பெற்றிருந்ததால், சிறந்த நெற்களஞ்சியமாகவும், புகழ்பெற்ற நகரமாகவும் நல்ல சூழமைவுடனும் விளங்கியுள்ளது.
பின்னால் உறந்தை நகரினைத் திருமாவளவன் காடுகளை வெட்டியழித்து நாடாகச் செய்து களங்கள் அழித்து பல்வேறு வளங்களையும் பெருகச்செய்து பெரியநிலைகள் பொருந்திய மாடங்களை அமைத்து விரிவுறச் செய்தான். (பட்டிணப்பாலை,284-286)
சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட காலத்து அதனை அடைத்துக் கிடந்த நெடுங்கிள்ளியின் பின் தப்பிச் சென்று உறையூரை அடைத்துக் கிடக்க, அதனையும் அந் நலங்கிள்ளி முற்றுகையிட்டான். அந்நிலையில் கோவூர்க்கிழார் அவ்விருவரையும் அணுகிப் போரைக் கைவிடுமாறு அறிவுரை கூறினார். (புறம்.44,45) சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூருக்கு வந்த இளந்தத்தனென்னும் புலவனை ஒற்றெனைனக் கருதி, அங்கிருந்த நெடுங்கிள்ளி கொல்ல முயன்றபொழுது கோவூர்க்கிழார் அவனைப் பாடி இளந்தத்தனை உய்யக்கொண்டார்.(புறம்.47) கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த இடத்துச் சென்று மீண்டு அவனது உறையூருக்கு வந்த பொத்தியார் யானை இருந்து இறந்த கூட்டத்தைப் பார்த்துக் கலங்கும் பாகனைப் போல அம்மூதூரில் அவனிருந்த மன்றத்தைக் கண்டு அழுது பாடினார். (புறம்.210) வெற்றிமுரசினையும் போர்வென்றியையும் உடைய சோழர்க்குரிய உறந்தை இனிய கடுப்பு மிக்க கள்ளினை உடையது. (அகம்.137) நீர்மோதும் வாய்த்தலைகளை உடைய உறந்தையில் உள்ளோர், பாணர் முதலாயினருக்குக் கொழுவிய நிணத்துண்டுகள் கலந்த மெல்லிய தினைச் சோற்றையும் கருப்பம் பாகுடன் பால்பெய்து அளைத்த பசிய அவலையும் வழங்குவர்.(அகம்.369) கழுமலப்போரின்கண் மாற்றாரை வென்று அவர்தம் குடையோடகப்படுத்திய வெற்றியையும் நல்ல தேரினையும் உடைய சோழனின் உறந்தையில் பங்குனி விழா நடைபெற்றது.(நற்.234) மறம் பொருந்திய சோழரது உறந்தையிலுள்ள அவைக்களத்து அறம் கெடவறியாது நின்று நிலை பெற்றது. (நற்.400)
இச்செய்திகளினால் உறையூரின் வரலாற்றுச் சுவடுகளையும் ,மக்கள் வாழ்வியல் பதிவுகளையும் அறியமுடிகின்றது.
கரிகாற் சோழன் தனது தலைநகரை உறையூரில் இருந்து காவிரிப்பூம்பட்டிணத்திற்கு மாற்றினான் என்பதைப் பட்டினப்பாலை கூறுகின்றது. இதன் பிறகு ஏறத்தாழ கி.பி.6 ஆம் நூற்றாண்டு முடிய உறையூரைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கிடைக்கவில்லை. திருச்சிராப்பள்ளி கல்வெட்டும், மலைக்கோட்டையில் உள்ள இரு குடைவரைகளும், இப்பகுதியில் ஏற்பட்ட பல்லவர், பாண்டியர் ஆதிக்கத்தைக் காட்டுகின்றது. உறையூர் கூற்றம் என்ற ஒரு தனிக் கூற்றத்தின் தலைநகரமாகவும் சிறந்து விளங்கியது. இக்கூற்றம் வடக்கே காவிரி ஆற்றையும் தெற்கே உய்யக்கொண்டான் ஆற்றுடன் கற்குடி மலையையும் கிழக்கே சிராப்பள்ளி குன்றையும் மேற்கே குளித்தலையையும் தனது எல்லைகளாகக் கொண்டிருந்தது என்பதைக் கல்வெட்டுகளால் அறியலாம்.எல்லா வகையான சிறப்புகளும் வளங்களும் செல்வச் சிறப்பும் உறையும் நகரமாதலின் இது உறையூர் என வழங்கப்பட்டதாகப் பெரியப்புராண ஆசிரியர் கூறுவர். கோழியொன்று யானையைப் போரில் வென்றதால், வீரமிக்க இந்த இடம் கோழி அல்லது கோழியூர் என வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் கோழியும் யானையும் போரிடும் காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமை, இந்நிகழ்ச்சிக்குச் சான்றாகவுள்ளது. (வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி5,பக்.548)
தாலமி குறிப்பிடும் ஓர்தூரா ரெஜிய சோர்னாதி என்பது, சோரநாத என்னும் நாட்டின் அல்லது சோரிங்கி அரசின் தலைநகராகிய உறையூரையே குறிக்கும் என்று கன்னிங்ஹாம் கூறுகின்றார். (1989: 30) கி. பி. 81- 96 இல் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் என்ற சிறிய நூலின் ஆசிரியர் சோழநாட்டைப் பற்றி கூறும் போது, கொல்சிப் பகுதியை அடுத்து, கடலை அடுத்துள்ள கடற்கரை பகுதி எனப்படும் மற்றொரு மாவட்டமும் அருகறு எனப்படும் பகுதியும் உள்ளது என்று கூறுகிறார். இக்கூற்றிலிருந்து சோழநாடு, கடற்கறைப் பகுதி, உள்நாட்டுப் பகுதி என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை அறியலாம். கடற் பகுதியை புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டணத்தினின்றும், உள்நாட்டுப் பகுதியை உறையூரினின்றும் சோழர்கள் ஆண்டுள்ளனர்.(1989: 29) இவர் கூறும் அருகறு என்பது உறையூரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அருகறு உறையூரைக் குறிக்குமா என்பது ஆய்வுக்குரியது. அலெக்சாண்டிரியா நாட்டு வணிகர் எழுதிய குறிப்பில், உறையூர் சோழநாட்டின் தலைநகரமாக இருந்து வந்த செய்தி இடம்பெற்றுள்ளது. சோழர்களின் ஆட்சி காலத்தில் இந்த ஊர் மெல்லிய பஞ்சாடை வணிக மையமாக பெயர்பெற்றிருந்தது என்ற செய்தி பெரிப்ளூஸ் நூலில் காணப்படுகின்றது.( திருச்சி தமிழ்நாடு அரசாங்க செய்தித்துறை வெளியீடு, பக்.18) உறையூரில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுது சாயத் தொட்டிகள் கிடைத்துள்ளது,(வாழ்வியற் களஞ்சியம் தொகுதி5,பக்.548) மேற்கண்ட செய்தியை உறுதிப்படுத்துகிறது.
பல்லவ அரசன் சிம்ம விட்டுணுவால் (கி.பி.550) கைக்கொள்ளப்பட்டது. உறையூர்ப் பகுதி ஏறத்தாழ கி.பி. 600 முதல் 875 முடிய பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பல்லவரை அடுத்து, பாண்டியர் உறையூர்ப் பகுதியில் மேலாண்மை செலுத்தினர் என்பதை நெடுஞ்சடையான் பாண்டியனின் (கி.பி. 768 – 815) வேள்விக்குடிச் செப்பேடு சுட்டுகின்றது. தேர்மாறன் என்னும் பாண்டிய மன்னன் கூடல், வஞ்சி, கோழி என்னும் தலைநகரங்களிலுள்ள அரண்மைகளையும், அரண்களையும் புதுப்பித்த செய்தி, இச்செப்பேட்டால் அறியப்படுகிறது. உதயேந்திரச் செப்பேடு பராந்தகச் சோழனின் தலைநகரம் உறையூர் என்று செப்புகிறது. இதனால் உறையூர் பாண்டியரிடமிருந்து மீண்டும் சோழர் வசம் வந்தது புலனாகின்றது. பிற்காலப் பாண்டியர் வலுவடைந்த பொழுது, மீண்டும் உறையூர் பாண்டியர் கைக்கு மாறியது. முதலாம் மாறவர்மன் சுந்த பாண்டியன்(கி.பி 1216 – 1235) உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான் என்று திருக்கோயிலூர் கல்வெட்டு கூறுகின்றது.
பாண்டிய நாட்டின் மீது கி.பி 1310 – இல் படையெடுத்த அலாவுதீன் கில்சியின் படைத்தலைவனான மாலிக்கப்பூர் உறையூரையும் அழித்தான். இவ்வாறு பகைவர்களால் உறையூர் அவ்வப்போது அழிக்கப்பட்டது. இதற்கு முன்பே கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியின் வெள்ளப்பெருக்கால் அல்லூரும், உறையூரும் அழிந்தன என்பதை அல்லூர்க் கல்வெட்டு அறிவிக்கின்றது. அதனை உறையூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வும் உறுதி செய்கின்றது.
விசயநகர வேந்தனான இரண்டாம் அரி அரசனின் ஆட்சி காலத்தில்( கி.பி. 1377 – 1404) உறையூரில் விசய நகரத்தார் ஆட்சியைக் கண்டது. அதன் பிறகு உறையூரைப் பற்றியச் செய்திகளை அறியமுடியவில்லை.
சமண பள்ளிகள் உறையூர் பகுதியில் நிலைகொண்ட பிறகு, உறையூரின் புகழ் மங்கத் தொடங்கியது. காலனிய ஆதிக்கத்தின் போதும் உறையூர் கண்டுகொள்ளபடவில்லை .
முன்பு உறையூரைக் கொண்டு, திருச்சிராப்பள்ளி அடையாளப்படுத்தப்பட்ட நிலை மாறி , இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாகச் சுருங்கி பழம் பெருமையையும், அடையாளத்தையும் சுவடுகளாகத் தாங்கிகொண்டு உறைகிறது உறையூர்.
தமிழ் சமூகத்தின் அடிவேராக விளங்கும் சங்க பாடல்களில் புதைந்து கிடக்கும் வரலாற்றுக் கூறுகளைப் பிற வரலாற்றுக் கூறுகளோடு தொடர்புபடுத்தி அவற்றின் உண்மை நிலையினைத் தெரிந்து எழுதினால் தமிழக வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். இது போன்ற ஊர்ப் பெயர் பற்றிய உரையாடல்களின் மூலமாக மானிட சமூகத்தின் தடத்தினை கண்டடைய முடியும்.
ஆதாரங்கள்
ஆளவந்தான், ஆர், இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் ,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.
சாமிநாதையர், உ . வே, (ப. ஆ) புறநானூறும் பழைய உரையும், குறுந்தொகை மூலமும் உரையும் உ.வே. சா. நூல்நிலையம், சென்னை,1971.
சாமிநாதையர், உ . வே . (ப.ஆ) குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே. சா. நூல்நிலையம்,சென்னை, 2009.
தமிழண்ணல், அண்ணாமலை, சுப,(ப.ஆ), அகநானூறு,கோவிலூர் மடாலயம், கோவிலூர், 2004.
நாச்சிமுத்து, கி, இடப்பெயராய்வு, சோபிதம் பதிப்பகம், நாகர்கோவில்,1983.
நீலகண்ட சாஸ்திரி, கே. ஏ, சோழர்கள், இந்தியன் கவுன்ஸில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச் நியூ தில்லி அண்ட் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை,1989.
ஜெய அரிகரன்(தொ-ர்) வ.அய். சுப்பிரமணியம் கட்டுரைகள், மொழியும் பண்பாடும், அடையாளம், திருச்சி, 2007.
வாழவியற் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987.
Index des mots da la Litterature tamoule acienne, INSTITUT FRANCAIS D’ INDOLOGIE,PONDICHERY,1967.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *