சாக்த மதம்

Apr 14, 2010 | Uncategorized | 0 comments

இந்து மத்தத்தில் சிறப்பாகச் சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம்,கௌமாரம்,சௌரம் என ஆறு சமய வழிபாடுகள் உண்டு.
சக்தியை சிவபெருமானுக்குத் தேவி என்றும், திருமாலுக்குத் தங்கை என்றும்,கணபதி முருகன் ஆகியோருக்குத் தாய் என்றும் கூறுகின்ற புராணப் போக்குகளால் இந்து சமயங்கள்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமை புலப்படும்.இதனை உணரவேண்டுவது மக்களின் கடமையாகும்.

சக்தி வழிபாடு காஷ்மீரத்தில் சஷிரா பவானியும், மகாராட்டிரத்தில் துளஜா பவானியும், குஜராத்தில் அம்பாஜியும் உத்திரப்பிரதேசத்தில் விந்தியாவாசினியும், வங்களாத்தில் காளியும், அசாமில் காமரூபியும், மைசூரில் சாமுண்டீஸ்வரியும், கேரளத்தில் பகவதியும், காஞ்சியில் காமாட்சியும், மதுரையில் மீனாட்சியும், தில்லையில் சிவகாமியும், திருவாரூரில் கமலாம்பிகையும், திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியும், திவண்ணாமலையில் உண்ணாமுலையம்மையும், திருக்கடவூரில் அபிராமியும் பெருஞ் சிறப்புடன் வழிப்படுகின்றனர். காசி விசாலாட்சியும் தென் கோடியில் கன்னியாகுமரியம்மனும் அம்பிகை வழிபாட்டிலே ஒருமைப்பாட்டின் நிலைக்களங்களாக விளங்குவதைக் காணலாம்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அம்மையின் அருள் தலங்கள் சக்திபீடங்கள் பல அமைந்துள்ளன. தந்திர சூடாமணி, குப்ஜிகாதந்திரம்,ஸ்கந்தபுராணம், தேவிபாகவதம் முதிலியவற்றில் சக்தி பீடங்களின் பெயரும் எண்ணிக்கையும் சிற்சில வேறுபாடுகளுடன் கூறப்படுகின்றன. சக்தி பீடங்கள் மொத்தம் 64. அவை இந்தியா முழுவதும் பல்வேறு பாகங்களில் பரவலாக அமைந்துள்ளன.
சக்தியை ஆற்றலும் ஆவேசமும் மிக்கவளாக மறக்கருணை நெறியில் வழிபடுவதும் உண்டு. அவளையே அழகும் அருளும் நிரம்பியவளாக அறக்கருணை நெறியில் வழிபடுவதும் உண்டு. வடநாட்டில் மறக்கருணை அணுகுமுறை மிகுதி. தென்னாட்டில் அறக்கருணை அணுகுமுறை
மிகுதி எனப் பொதுவாக உணருந்து கொள்ளலாம்.

……….தமிழ்ப் பண்பாட்டு வரலாறு

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *