தமிழ் நெறித் திருமணம்…

Feb 5, 2010 | Uncategorized | 0 comments

தமிழரின் திருமண முறை முன்பு எளிமையாக மூத்தோர் முன்னிலையில் நடைபெற்றது.இன்றைக்குக் காணக்கூடிய அக்கினி வளர்த்து,ஐயர் வைத்து நடத்தும் முறை அன்று இல்லை.சிலப்பதிகார காலத்தில் வந்தது என்றாலும் அது ஆரிய கலப்பினால் என்றே கூறலாம்.

தமிழன் ஏற்படுத்திக் கொண்ட திருமணமுறைபடி திருமணம் நடக்கவேண்டும் என்னும் விருப்பம் கொண்டு பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் அல்லூர் தவச்சாலை நிறுவனர் புலவர் இரா.இளங்குமரனார்.
இவர் தமிழ் நெறியில் திருமணங்களை எவ்வாறு நடத்துவது எனச் சிலருக்குப் பயிற்சியும் கொடுத்து வருகின்றார்.
திருமணம் தமிழ் மரபு படி எவ்வாறு நிகழ்த்தவேண்டுமெனப் பொதுக்குறிப்பினைத் தருகின்றார்

நம் பழைய மரபு – நம் பண்பாடு – பகுத்தறிவு இன நலம் என்பவற்றைப் பாதுகாத்துப் போற்றும் வகையில் அமைக்கப்படுவது இத் தமிழ்நெறி திருமணம்

எளிமை,இனிமை, நிறைவு என்பவை சார்ந்தவையாக இத் திருமணமுறையும்,பிற சடங்குகளும.

முற்றிலும் தமிழையும், தமிழ் நெறியாம் திருக்குறளையும் கொண்டு நிகழ்த்தப் பெறுவன.

இவை பாராட்டுதல், வாழ்த்துதல் என்பனவே உடையவை நல்லவை அன்றி அல்லவை இடம் பெறாதவை.

மகளிர், பெற்றோர், சான்றோர் ஆகியோரை முதன்மைப்படுத்தி நிகழ்த்தப் பெறுவன.

திருமணம் நிகழ்முறை

மணமக்கள் இருவரையும் மணவுடை, மணமாலை ஆயவற்றுடன் ஒரே நேரத்தில் அழைத்து மண இருக்கையில் மணமகனுக்கு வலப்பக்கம் மணமகளும், இடப்பக்கம் மணமகனும் அமரச் செய்தல்.

மங்கல விழாத் தலைவர், முன்னிலையர், மங்கலவிழா நிகழ்த்துநர் ஆகியோரை முன்மொழிந்து அமரச் செய்தலும், வழி மொழிதலும்.

தலைவர் விழாத் தலைமை ஏற்று மணமக்கள் வீட்டார் சார்பாக வரவேற்றுக் கூறலும் வரவேற்கக் கூறலும் அறிமு உரையும் சிறப்புச் செய்தலும்.

மணவிழாவை இவர் நிகழ்த்துவார் எனத் தலைவர் கூறுதல்.

மணவிழா நிகழ்த்துதல்

மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்குமாறு செய்து மீண்டும் இருக்கையில் அமரச் செய்தல்.

இயற்கை இறைவழிபாடு (அ) மொழி வாழ்த்து (அ) திருக்குறள் போற்றி என்பவற்றுள் ஒன்றையோ இரண்டையோ மூன்றையோ சூழ்நிலை காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூறுதல்.

இயற்கை இறைவழிபாடு

செங்கட் கரும்பாய் இனிப்பானைச்
செழுந்தேன் மலராய் மணப்பானைத்
திங்கட் பிறையாய்த் திகழ்வானைத்
தெளிந்த இசையாய் அமைவானை
அங்கட் புவனம் அளிப்பானை
அறமோ டின்பம் அருள்வானை
நங்கட் புலத்துள் நிறைவானை
நறவார் மலர்த்தூய்ப் பணிவாமே

மொழி வாழ்த்து

நீல வானின் உயரத்தை
நெஞ்சம் கவரும் நிலப்பரப்பைக்
கோலக்கடலின் ஆழத்தைக்
குன்றத் தமைந்த பேருரத்தைச்
சாலத் துளிக்கும் பனிநீரைச்
சாந்தில் தொடுத்த தீந்தேனை
மூலச் சொல்லாய் முகிழ்ந்தோங்கும்
முன்னைத் தமிழே வாழியவே.

திருக்குறள் போற்றி ! மந்திர மொழிகள் !

அகரமுதலாம் ஆதியே போற்றி !
மலர்மிசை ஏகும் மாண்டி போற்றி !
தனக்குவமை இல்லாத தகையடி போற்றி !
எண்குணத் திலங்கும் இறையே போற்றி
அமிழ்த மழையாம் அருளே போற்றி!
ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி !
நிறைமொழி அருளும் நிறைவே போற்றி !
குணமென்னும் குன்றே குறியே போற்றி !
மனத்தில் மாசிலா மணியே போற்றி !
வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி !
மங்கல மனையற மாட்சியே போற்றி !
அறிவறி பண்புப் பேறே போற்றி !
அன்போ டியைந்த வழக்கே போற்றி !
அகர முதலாம் ஆதியே போற்றி ! போற்றி !

மணவிழாத் தொடங்கவுரை

திருமணக் கரணத்திற்கு வந்துள்ள பெருமக்கள், பெற்றோர், உற்றார், உறவினர், உறவு, அன்று, நண்பு ஆகிய அனைவரையும் வணங்கி அவர்கள் இனிய இசைவுடன் மங்கல விழா நிகழ்த்துவதாகக் கூறுதல்.

தாய் மண் வழிபாடு (அ) உலக நலவழிபாடு

ஒவ்வொரு நலமும் உலக நலத்தில் உள்ளது. உலக நலம் ஒவ்வொருவர் நலத்திலும் உள்ளது. நாம் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, உறையும் வீடு, உளதாகிய வாழ்வு ஆகிய எல்லாவற்றிலும் உலகவர் பங்களிப்பு இல்லாமல் இல்லை. மசமக்கள் அணிந்துள்ள மாலைக்குள் எத்தனை பேர் உழைப்பு உள்ளது? பூ, பதியன் போட்டவன், நட்டவர், நீர் வட்டவர், களை எடுத்தவர், காத்தவர், பூப்பறித்தவர், மாலை கட்டியவர், வாங்கி வந்தவர் என எத்தனையோ பேர்களின் உள்ளார்ந்த உணர்வில் உழைப்புத்தானே மணமங்கல மாலையாகித் திகழ்கின்றது.இதனால் உலகம் நமக்குள்ளும், உலகுக்குள் நாமும் இருத்தல் புலப்படும்.ஆதலால் ,உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய்நாட்டு மண் வழிபாட்டை மணமக்கள் செய்கின்றார்கள்.என்று கூறித் தட்டில் வைக்கப்பட்டுள்ள மண்ணின் மேல் உதிப்பூக்களை மும்முறை தூவச்செய்தல் வேண்டும்.

உலகம் வாழ்க ! உயர்வெல்லாம் வாழ்க !

என மும்முறை மணமக்களைச் சொல்ல வைத்தல்.
———–தொரும்

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *