வால்காவிலிருந்து கங்கை வரை…..

Dec 20, 2009 | Uncategorized | 0 comments

நீண்ட நாட்களாக படிக்கவேண்டும் எண்ணிக்கொண்டிருந்த நூல் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூல். அண்மையில் அந்நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.கோவை சென்றிருந்த பொழுது தோழி மணிமேகலை நூலினைக்கொடுத்தார்.

இந்நூலினை கண.முத்தையா அவர்கள் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்துள்ளார்கள்.இதுவரை இந்நூல் 28 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக வந்துகொண்டு இருக்கின்றது.

நூலின் நுவல் பொருள் கதையாக இருந்தாலும்,கற்பனையாக இருந்தாலும்,ஒரு சமுதாயம் என்பது இப்படி தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்னும் கருதுகோளை வைத்துக்கொண்டு அதனை நோக்கியே நகர்த்திச் செல்லுகின்றார் ஆசிரியர்.

தனி மனிதன் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயத்தின் படிநிலைகளையும் ,சமுதாயத்தில் மெல்ல மெல்ல நிகழ்ந்ந மாற்றத்தினையும் சுட்டிக் காட்டுக்கொண்டே செல்லுகின்றார்.

இந்நூல் புனைவாக இருந்தாலும் தர்க்க ரீதியாக,வரலாற்று நோக்கிலும் சில உண்மைகள் முன்வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

20 தலைப்பில் கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. ஆரம்பக் கதைகளான நிஷா,திவா,அமிர்தாஸ்வன்,புருகூதன் என்ற நான்கு கதைகளும் கி.மு.6000 இல் இருந்து 2500 வரை உள்ள சமுதாயத்தினைச் சித்தரிக்கின்றது.இதில் கூறப்பட்டவைகள் எல்லாம் உண்மையாக இருக்குமா என்று எண்ணினால் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

வேட்டைச் சமுதாயம் இருந்த பொழுது பெண்ணே எல்லவற்றிலும் முதன்மையாக இருந்துள்ளாள்.தாய்வழிப்பட்ட சமுதாயமே முன்னால் இருந்துள்ளது.இது மெல்ல மாற்றத்துக்கு உட்பட்டு தந்தைவழி சமூகமாக மாறுகின்றது.இதனை மையமாக வைத்தே கதையினை நகர்த்திச் செல்லுகின்றார்.

முதல் கதையில் வரும் நிஷா அவளுடைய வீரம் குடும்பத்தை வழிநடத்தும் பாங்கு,அதே நேரத்தில் தனக்கு அடுத்த நிலையில் தன் மகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவளை அழிக்கும் நிலை இது புனைவாக தோன்றவில்லை. வால்கா நதிக்கரையில் இருந்து தொடங்கும் கதை ,அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்திய எல்லைக்குள் வரும்பொழுது இங்கு மக்கள் நாகரிக நிலையில் இருப்பதைக் காட்டுகின்றார்.

ஆரியர் கலப்பு,இஸ்லாமியர் கலப்பு ,ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விரித்துச் செல்லுகின்றார் ஆசிரியர்.கி.பி.1942 வரை நீண்டு முடிகின்றது.
வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *