இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சியணி (irony)என ஒன்று உண்டு.சங்க இலக்கயத்தில் இவ்வணி பயின்று வந்துள்ளது.
வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைப் புகழ்வது போல இகழ்வதும்,இகழ்வது போல புகழ்வதும் ஆகும்.(இன்றைய சூழலை புகழவேண்டியவரை இகழ்வதும்,இகழவேண்டியவரைப் புகழ்வதும் தானே நடந்து கொண்டு இருக்கிறது.பல இடங்களில்,சரி செய்திக்கு வருவோம்)
புறநானூற்றில் நெட்டிமையார் என்னும் புலவர் முதுகுடுமிப் பெருவழுதியை இகழ்வதுப் போல புகழுகின்றார்.
முதுகுடுமி பகைவர்களை வென்று அவர்களுடைய நாட்டில் இருந்து பல பொருள்களைக் கவர்ந்து வந்து பாணர் புலவர் போன்றோருக்கு வழங்குகின்றான்.அச்செயலைப் பார்த்த புலவர்,
பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும் புலவர் நெற்றிப் பட்டம் அணிந்து யானையுடன்,ஏறுதற்கேற்றப ஒப்பனை செய்து தேரை நிறுத்தவும் செய்தல் அறச்செயல் ஆகுமோ?
வெற்றியிற் சிறந்த முதுக்குடுமு பெருவழுதியே ! வேற்றாருடைய நிலத்தை அவர் துன்புறும்படி கைப்பற்றி உன்னுடைய பரிசிலரிடத்து இனிய செயல்களைச் செய்கின்றாய் என நெட்டியார்,அவ்வழுதியை வஞ்சப் புகழ்ச்சியணி தோன்றப் புகழுகின்றார்.
பாணர் தாமரை மலையவும்,புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றுஇது? விறல்மாண் குடுமி !
இன்னா ஆகப்பிறர்மண் கொண்டு,
இனிய செய்தி நின்ஆர்வலர் முகத்தே .(புறநானூறு,12)
ஒருமுறை அவ்வையார் அதியமானுக்காக தொண்டைமானிடத்து தூது செல்லுகின்றார்,அப்பொழுது அதியமானின் வீரத்தினை வஞ்சப்புகழ்ச்சியாக தொண்டைமானிடம் எடுத்துக்கூறுகின்றார்.
தொண்டைமானை சந்திக்கச் செல்லுகின்றார் அவ்வை ,அப்பொழுது தொண்டைமான் படைக்கலங்கள் உடைய அறையில் இருக்கின்றான்.அங்கு சென்ற அவ்வை அக்கலங்களை நோக்குகின்றாள்,அக்கலங்கள் எல்லாம் புதிதாக வாங்கி வைத்து வைத்தப்படியே இருக்கின்றது
அதனைப் கண்ட அவ்வை,இன்னுடைய படைக்கலங்கள் மயில் தோகை அணியப்பெற்று,மாலை சூட்டப்பெற்று,அவற்றின் வலிய காம்புகள் திருத்தம் செய்யப்பெற்று,நெய்பூசப்பெற்று,காவலுடைய பெரிய மனையிடத்து அழகாக்க வைக்கப்பட்டுள்ளது.(இன்று பூசல் இல்லா அமைதி உலகம் வேண்டும் என்று எண்ணுகின்றோம் ,இப்பொழுது எல்லா நாடுகளிலும் ஆயுதங்கள் இப்படியே இருக்கலாமோ?)
இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டி,
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியல்நக ரவ்வே. (புறநானூனு,95)
ஆனால் அதியமானி படைக்கலங்கள் எப்படி உள்ளது தெரியுமா? பகைவரிடம் அடிக்கடிப் போர் புரிவதால் கங்குல் முறிந்து,கொல்லனது வேல் செய்யும் பட்டறையில் கிடக்கின்றது.
பகைவர்க் குத்தி,கோடு,நுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ ! என்றும்
—————————
அண்ணல்எம் கோமான்,வைநுதி வேலே (புறநானூறு,95)
என்று அதியனை வஞ்ச புகழ்ச்சியாப் புகழ்கின்றார்.
கபிலர் பாரியினுடைய பெருமையை ,அவனது கொடைத்தன்மையை வஞ்ச புகழ்ச்சியாகவே புகழ்வார். பாரி பாரின்னு பெரிதாக எல்லோரும் பேசுகின்றீர்களே அவன் ஒருவன் மட்டும் தான் எந்த பயனையும் எதிர்பார்க்காமல் வழங்க கூடிய மனம் படைத்தவனா?இல்லையே மழை கூட உண்டே ? என்று மழையைப் புகழ்வது போல பாரியைப் புகழ்ந்துரைப்பார்.
பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன் ;
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே (புறநானூறு ,107)
0 Comments