இட்டலி,இட்லி,இட்டிலி,இட்டெலி என்றெல்லாம் கூறுகின்றோம் இதில் எது சரியென்று எண்ணியிருக்கோமா!
இட்லி,இட்டெலி என்று கூறுவதைக்காட்டிலும் இட்டிலி என்று கூறுவதே பொருத்தமுடையது என்பர்.காரணம் ‘ட்’ என்னும் வல்லினப் புள்ளியெழுத்துக்கு அடித்து அதே உயிர்மெய் வருவதே இலக்கணமுறைமை ஆகையில் இட்டலி என்பது சரியென்பர்.
கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்கள் செல்லமும் சிறுமியும் என்னும் தலைப்பில் ஒரு பாடல் இயற்றிருப்பார்கள்.
இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் -நீங்கள்
ஏதும் கருணை இலீரோ?அம்மா
பட்டினியாக இறந்திடினும் -நாங்கள்
பாவம் பழிசெய்ய மாட்ட்டோம் அம்மா!செல்வ சீமான் வீட்டுப்பெண்ணொருத்தி தங்கள் வீட்டிலில் இட்டெலி சாப்பிடதைக் கூற,இட்டிலியைப் பார்த்திராத,உண்டிராத ஏழ்மையான சிறுமி இட்டெலி எனபதனை எலி என்று எண்ணி,எலிதான் அவள் உண்டிருக்கின்றால் என்று எண்ணுகிறார்.எலியைத் தின்பதைப் பாவச்செயல் என்றும் கருதுகின்றாள்.
ஆக இட்டலி,இட்டிலி,இட்டெலி -இம்மூன்று சொற்களிலும் உள்ள அலி,இலி,எலி என்பவை இட்டொடு ஒட்டவில்லை.
அறிஞர் மு.வ கதைகளில் இட்டளி என எழுதுவார்.இட்டு அளிப்பது என்னும் பொருள் கொண்டு எழுதுகின்றார் போலும்.
சிலர் இடுதளி என்றும் கூறுகின்றனர்.தளி என்பது பழம் பெயர்.மண்ணால் ஆன கோயில் மண்தளி.கல்லால் ஆன கோயில் கல்தளி(கற்றளி) என்று வழங்கப்பெறுகின்றன.இன்றும் புரட்டாசி போன்ற மாதங்களில் தளிகை போடுகிறோம் என்று கூறவதைப் பார்த்திருப்பீர்கள்.
அதனால் இடுதளி இட்டளி என்று கூறுகின்றனர்.
சிலர் இட்டிலி எத்தனை ஈடு ஊத்தனும்,இல்லை எத்தனை ஈடு எடுக்கணும் என்று கேட்பதைப் கேட்டிருப்போம்.அதனைக் கொண்டு சிலர் ஈடுதளி என்றும் ஈட்டளி என்றும் கூறுகின்றனர்.
இவை எல்லாவற்றையும் விட திருப்பதி திருக்கோவில் கல்வெட்டு ஒன்றில் இட்டவி என்னும் சொல்லாட்சி உள்ளதாக கல்லவெட்டறிஞர் கண்டுள்ளனர்.அவியல் யாவரும் அறிந்ததே ! வள்ளுவரும் அவியுணவு என்ற சொல்லட்சியைக் கையாண்டுள்ளார்.ஆகையால் இட்டு அவித்தல் என்று கொண்டு இட்டவி என்று குறுவது பொருத்தமாக இருக்கின்றது.இனி நீங்கள் எப்படி அழைக்கப் போகின்றீர்கள்?
0 Comments