உள்ளியது எய்த……..

Sep 28, 2009 | Uncategorized | 0 comments

இற்றை நாட்களில் புத்தக கண்கட்சிகளுக்குச் சென்றோம் என்றால் அங்குப் பெருமளவில் காணக்கூடிய நூல்கள்,வாங்க கூடிய நூல்களாக இருப்பது தன்னம்பிக்கையூட்டும் சுயமுன்னேற்ற நூல்களாக உள்ளன. சிறகை விரி சிகரம் தொடு,சுயமுன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டி,தன் முயற்சி,நமது இலக்கு என்ன அடைவது எப்படி,நம்மால் முடியும், நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள், நினைப்பதெல்லாம் நடந்துவிடும், வெற்றிக்கு வழிகாட்டி,வெற்றியின் மூலதனம்,தடைக்கு விடைகொடு,உங்களால் வெல்ல முடியும் போன்ற நூல்களைக் கூறலாம்.இந்நூல்களுள் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முப்பாட்டன் வள்ளுவர் கூறிவிட்டார்.

ஒருவன் வாழ்க்கையில் வெறுமனமே உட்கார்ந்து இருந்தால் காலம் என்ற மண்ணில் தன் அடையாளத்தைப் பதிக்கமுடியுமா? இந்த உலகத்தில் எதனையுமே செய்யாமல் எதனையும் பெற முடியுமா?

சுதந்திரம் வேண்டுமென நம்நாட்டவர் கொண்ட வேட்கை தானே அந்நியர்களை இம்மண்ணைவிட்டு விரட்டியது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோள் வேட்கையாக இருக்க வேண்டும். நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றிபெற முடியுமா என்றால் முடியும் என்பதை, ஆய்ந்தாய்து தமது குறளில் பதிவு செய்துள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

உள்ளியது எய்துதல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின் (540)

ஒரு குறிக்கோளினை வாழ்க்கையில் மேற்கொள்ளும் போது அதனை நோக்கியே நம்முடைய நகர்வுகள் அமைய வேண்டும். அதற்கு முதல் பயிற்சி உள்ளத்திற்குக் கொடுக்க வேண்டும். உள்நாடி உள்ளத்துக்குள் பதிக்கவேண்டும், பதித்ததோடு மட்டும் விட்டுவிடாமல் ,அதைப் பற்றியே உள்ளுதல் வேண்டும்.

உள்மனம் ஒரு தோட்டம் போன்றது,அதில் நீங்கள் என்ன விதைக்கின்றீர்கள் என்பது அதற்கு பொருட்டல்ல.அது நடுநிலையானது.அதற்கு எவ்வித ப்ரியமும் இல்லை,ஆனால் நல்ல விதைகளை விதைத்தால் நல்ல தோட்டம் அமையும், இல்லாவிட்டால் களைகளே அதிகமாக வளர்ந்துள்ளதைப் பார்ப்பீர்கள். இதற்கு மேலே போய் சொல்வதென்றால்,நீங்கள் நல்ல விதைகளையே விதைத்தாலும் கூட களைகளும் வரலாம்,களையெடுத்தல் விடாது தொடரவேண்டும் என்பர்(ஷிவ் கெரா,உங்களால் வெல்ல முடியும்)அதாவது தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான் என்ற கருத்தினையே இப்படிக் கூறுகின்றார் என்றாலும் அதற்கு மேல் சென்று, தினை விதைத்தாலும் அதில் களைகள் தோன்ற வாய்ப்புள்ளது ,அக்களைகளையும் அடிக்கடி களையவேண்டும் என்கின்றார்.
இந்த உள்மனத் தோட்டம் தான் வள்ளுவர் கூறும் உள்ளப் பெறின் என்பதாகும்.புற மனம்(conscious mind),அகமனம்(subconscious mind) என இரண்டாக பகுப்பர் உளவியலார். அகமனமாகிய ஆழ்மனதில் நம்முடைய உயர்ந்த குறிக்கோளின் வித்தினை விதைத்து,உள்ளத்து உறுதியும், தெளிந்த நல்லறிவும், பெற்றால் உள்ளிய பொருள் கைகூடும்,கனவு மெய்ப்படும் என்பது உறுதி என்பதையே குறள் வலியுறுத்துகின்றது.இதே கருத்தினை மற்றுமொரு குறளில்,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின் (660)

எனப் பதிவு செய்துள்ளார்.பழமொழி நானூறும் இக்கருத்தினை வலியுறுத்துவதைக் காணலாம்.

முனிவில ராகி முயல்க முனிவில்லார்
முன்னியது எய்தாமை இல் (154)
செய்க தவம் ! செய்க தவம் ! என்பான் பாரதி, உள்ளத்தில் ஏந்திய குறிக்கோளினைத் தவம் போல உள்ளி ,இதற்கான செயலில் ஈடுபட்டால் , வெற்றி திண்ணம் என்பதனை இளையோர் உணர்ந்து, குறள் நெறி நின்றால்,வாழ்வின் உயர்நிலை அடையலாம்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *