சங்க இலக்கியங்களைப் பார்க்கும் போது ஏறு தழுவுதலில் முல்லை நிலத்து வாழ்ந்த ஆயர் மரபில் வந்த இளைஞர்கள் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளமையைக் காணலாம்.இலக்கண நூல்களும் முல்லை நில மக்களின் தொழில்களுல் ஒன்றாக ஏறுதழுவுதலைக் குறிப்பிட்டுள்ளன.
முல்லை நில ஆயர் மக்கள் தம் குடிப்பெண் பருவம் எய்திய போது,தம்மிடமுள்ள ஒர் காளைக் கன்றினை அவள் பொருட்டு ஊட்டசத்தான உணவுகளைக் கொடுத்து வளர்ப்பார்கள்.பெண் திருமண வயது வரவும் காளைப் பருவம் எய்திய நிலையிலும் ,அக்காளையை அடக்கும் வீரனுக்கே ஆயர் மகள் மணம் செய்விக்கப்பெறுவாள்.பொதுவாக காளையை அடக்குபவனை ஆயர் குலபெண்கள் மணப்பவர்கள் என்றாலும் ,சங்க இலக்கியத்தினை நோக்கும் போது காதல் கொண்ட ஆண்மகன் பெரும்பாலும் காளையினை அடக்க முன்வருவதும்,அந்த பெண் எப்படியாவது தன் காதலன் வெற்றிபெற வேண்டுமென வேண்டுவதையும் காணலாம்.
ஏறுதழுவுதலில் ஏற்றபடும் துன்பங்களுக்கு அஞ்சிப் பின்வாங்கும் இளைஞர்களைக் காதலித்தவள் கூட ஏற்க மறுப்பாள் என்பதனை ‘ கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்’ என வரும் இலக்கியப் பகுதியின் மூலம் அறியலாம்.
எட்டுத் தொகை நூல்களுல் கலித்தொக்யிலுள்ள முல்லைக்கலியில் மட்டுமே ஏறு தழுவுதல் தொடர்பான குறிப்புகள் காணப்பெறுகின்றன. அப்பகுதியில் இடம்பெறும் 17 கலிபாடல்களுள் 7 பாடல்களில் ஏறுதழுவுதல் செய்தி இடம்பெற்றுள்ளன.இப்பாடல்களின் வழி ஏறு தழுவுதல் ஓர் ஊர்விழாவினைப் போன்று நடைபெறுவதைக் காணமுடிகின்றது.காரி,வெள்ளை முதலிய பல நிறங்களில் அமைந்த ஏறுகள் கொம்புகள் சீவப்பெற்று ஏறு தழுவுவதற்குரிய களத்திற்குச் செலுத்தப்பெறுகின்றன.அவை அக்களத்தினுள் புகுவது மேகங்கள் ஒருங்கே திண்டு காணப்பெறுவது போல இருக்கின்றன.
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிய புரிய புகுந்தனர் தொழூவு..(கலி,104-16,17)
தலைவியர் ,தோழியர் முதலியோர் தங்கள் காளைகளை அடக்க முற்றபடுவோரின் வீரச்செயல்களைத் தனி இடங்களில் இருந்து காணுகின்றனர்.
ஏறு தழுவுதலைத் தொடங்கும் முன் பறைகளை அடித்து முழங்கிப் பேரொலி எழுப்புகின்றனர்.வீரர்கள் காளைகளை அடக்க முற்படுகின்றனர்.சில காளைகள் தம்மை தழுவ முற்படும் வீரர்களைத் தம் கொம்புகளால் குத்திக் குடல் வெளியே வரும்படி செய்து விடுகின்றன.இக்காட்சியினைத் தலைவிக்குத் தோழி காட்டுகின்றாள்.
நோக்கஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக் கோட்டிடைக் கொண்டு
குலைப்பதன் தோற்றம் காண்.
காளைக்கும் வீரர்களுக்கும் நடந்த ஏறுதழுவல் முடிவுற்ற களக்காட்சி
எழுந்தது துகள்
ஏற்றது மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்
என்று அழகுற வருணிக்கப்பெற்றுள்ளது
ஏறு தழுவல் முடிந்த பின்னர்ப் பெணகளும் ஆண்களும் குரவைக் கூத்தாடுகின்றனர்.அப்பொழுது பாடப்பெறும் பாடல்களில் ஏறு தழுவி வென்றோரை ஆயமகள் மணப்பதும்,ஏறு தழுவ மறுப்பவன் காதலனாக இருந்தாலும் அவனை மறுப்பதும் முதலிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
தலைவியல் காதலிக்கப்பெற்ற வீரன் ஏறு தழுவி வெற்றிப்பெற்று,காதலித்தவளைக் கைப்பிடிக்கின்றான்.அவ்வாறு ஏறுதழுவிய வீரனை மணந்த ஆயமகள் நெய்,மோர் விற்கச்செல்லும் போது,இவள் கணவன் ஏறு தழுவி வென்றவன் என்று மற்றவர்கள் கூறக்கேட்டதை எண்ணி மகிழ்ந்து,அப்புகழுரையே தாம் பெற்ற செல்வங்களில் மிகப்பெரிது எனப் போற்றுகின்றாள்.
சங்க இலக்கியத்தில் முல்லை நில மக்கள் மட்டும் கொண்டிருந்த ஏறு தழுவல் பிற்காலத்தில் எல்லா நில மக்களுக்கும் உரியது என்னும் மாறியது.
இப்பொழுது காதலுக்காக இல்லாமல் விர விளையாட்டாக மட்டும் சில இடங்களில் ஏறுதழுவல் என்னும் சொல்லாட்சி மறைந்து மஞ்சி விரட்டு,சல்லி கட்டு,மாடுபிடி என்று சொற்களில் பொங்கல் பண்டிகையின் மாட்டுப் பொங்கலன்று பொதுவாக விழாவாக நடைபெறுகின்றது.
ஏறு தழுவல் இங்கு நடைபெறுவது போலவே ஸ்பெயின் நாட்டிலும் நடைபெறுவது குறிப்படத்தக்கது.
0 Comments