பிச்சாவரத்தில் ஒரு நாள்………

Sep 25, 2009 | Uncategorized | 0 comments

சிதம்பரத்திற்கு வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்றாலும்,பிச்சாவரம் சென்று பார்த்ததில்லை.ஊரில் இருந்து அம்மா குழந்தைகள் வந்திருந்தார்கள் சரி செவ்வாய் கிழமை போகலாம் என்று திட்டம் போட்டு நண்பர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றோம்.திட்டம் போட்டப்படி செவ்வாய் மதியம் 2.15 மணிக்கு ,படகில் செல்லும் போது சாப்பிடுவதற்கு நொறுக்குத் தீனிகள் போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு ,எங்களுடைய மகிழ்வுந்தில் கிளம்பினோம்.நான் ஓட்டிக்கொண்டு போனேன்.

மகிழ்வுந்து கேஸில் ஓடக்கூடியது ,கேஸ் குறைவாக இருந்தது.பெட்ரோல் கால் அளவு இருந்தது.இங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவுதானே போய்விட்டு வந்துவிடலாமெனக் கிளம்பிவிட்டோம்.

பாதி தூரம் சென்றவுடன் கேஸ் தீர்ந்துவிட்டது.உடனே பெட்ரோலுக்கு மாற்றி வண்டியை எடுத்தேன் மெதுவாக சென்றது.நாங்கள் போய் கொண்டு இருக்கும் போது பூனை ஒன்று குறுக்கே வந்தது(பூனை குறுக்கே வருவதில் எல்லாம் நம்பிக்கையில்லை அதுவேறு)
எப்படியோ ஒரு வழியாக பிச்சாவரம் போய் சேர்ந்தோம்.ஐந்து பேர் அமர்ந்து செல்ல கூடிய படகு 300 ரூபாய் என்றார்க்ள அதனை வாங்கி கொண்டு படகு ஏறுமிடத்திற்கு முன்னால் வனத்துறையினர் ஒருவருக்கு இரண்டு ரூபாயும் புகைபடக்கருவிக்கு 25 ரூபாயும் கட்டவேண்டும் என்றார்கள் ,அதனையும் கட்டிவிட்டு அதற்கான அனுமதி சீட்டையும் பெற்றுக்கொண்டு,படகில் ஏறுவதற்குச் சென்றோம்.

ஏறும் இடத்தில் இருந்து கீழே இறங்கி சென்றார் நண்பர் அவர் கையில் அவருடைய ஒரு வயது குழந்தை ,சென்ற வினாடியிலேயே வழுக்கி கொண்டு கீழே விழுந்தார் அதனைப் பார்த்தவுடன் நான் பதறிபோய் என்ன என்று கூட கவனிக்காமல் வேகமாகச்சென்றேன் நானும் வழுக்கி கொண்டு விழ,அவருடைய மனைவியும் வேகமாக வர அவரும் வழுக்கி கொண்டு விழ பெரிய கொடுமையாக போய்விட்டது.நல்லவேளை குழந்தையை அவர் ஏந்தி பிடித்துவிட்டார் .எங்களுக்கு அவ்வளவாக அடியில்லை பாவம் நண்பருக்குத்தான் அடி.ஏற்கனவே அவருக்கு காலில் அடிப்பட்டு இப்பொழுது தான் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தார் பட்டகாலிலேயே படும் எனபார்களே அதுபோல அதே காலில் அவருக்கு அடிப்பட்டது.

(சுற்றுலா மையத்தினர் பணம் மட்டும் அனைத்திற்கும் வசூல் செய்கின்றனர்.ஆனால் அங்கு வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஏனோ செய்யவதில்லை.அந்த இடத்தில் பல பேர் இது போல் வழுக்கி விழுந்துள்ளார்களாம் எனபது விழுந்த பிறகு தான் தெரிந்தது.அங்குள்ள அதிகாரிகள் அந்த இடத்தில் வழுக்கும் கவனம் தேவை என எச்சரிக்கைப் பலகை வைதிருக்கலாம்,இல்லை என்றால் அந்த இடத்தில் உள்ள பாசிகளை அடிக்கடி தேய்து கழுவி விடலாம் இதனை அங்குள்ளோர் இனிமேலாவது கவனித்து செயல்படுவார்களா?)

விழுந்து எழுந்து சரி படகு சவாரி போய்வந்துவிடலாம் என்று கிளம்பினோம் இரண்டு மணி நேரம் சுற்றி காண்பிக்கப்படும் என்றார்கள்.போன சிறிது தூரத்தில் படகு ஓட்டுபவர் ஒரு படகு மட்டும் செல்லகூடிய இடங்களை எல்லாம் சுற்றிக் காண்பிக்கின்றேன் .பார்கின்றீர்களா என்றார்.சரி வந்தது வந்து விட்டோம் பார்க்கலாம் என்று கூறினோம்.அதற்கு தனியாக 150 கொடுக்க வேண்டும் என்றார்.அதுவும் கரைக்கு வருவதற்கு முன்பே கொடுக்க வேண்டும் என்றார் .இல்லை 100 தருவதாகக் கூறினோம் அவரும் ஒத்துக்கொண்டு எங்களுக்கு இரண்டு மணி நேரம் சுற்றி காண்பித்தார்.

3.15 மணிக்குப் படகில் புறப்பட்டு 5 மணிக்குத் திரும்பினோம். அலையத்தி காடுகளின் வனப்பிலும் அழகிலும் மனதைப்பறிக்கொடுத்தில்
விழுந்ததைக் கூட மறந்து விட்டுடோம்.நன்றாக இருந்து.சுரபுன்னை மரங்களுக்கு இடையே உள்ள நீர் சாலை பார்பதற்கும் ,செல்வதற்கும் மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் இருந்தது.அங்கிருந்த கடற்கரை பகுதிக்கச் செல்லவேண்டும் என்றால் காலையிலேயே வரவேண்டும் வந்து சுற்றிப்பார்த்தால் நன்றாக இருக்கும் என்றார் படகோட்டி.படகோட்டி வந்தவர் படகில் வரும் போது பாட்டுப் பாடிக்கொண்டு வந்தார்.நன்றாக இருந்து.தசவாதாரம் ,சூரியன் போன்ற படங்கள் இங்கு எடுக்கப்பட்டது என்றும் நிறைய மாணவர்கள் இத்தாவரங்களைப் பற்றி ஆராய்ச்சிப் பண்ணுவதற்கு இங்கு வந்து போகின்றார்கள் என்ற செய்தியினையும் தெரிவித்தார்.

ஒரு வழியாக 5 மணிக்கு கரையை வந்தடைந்தோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் லியோனியின் பட்டிமன்றம் 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்து அதற்கு வந்து விடலாம் என்று கிளம்பி வந்து கொண்டிருந்தோம்.சோதனையாக பாதி வழியில் வரும் போது தொலை பேசி அழைப்பு வந்தது.நான் பேசிக்கொண்டே அண்ணாமலை நகர் செல்லும் வழியை விடுத்து சிதம்பரம் சாலையில் சென்று விட்டேன் ,சிறிது தொலைவிலேயே இரயில் செல்லும் தண்டவாள குறுக்குப் பாதை வந்து ,வரும்போது இப்பாதை இல்லையே என்று தோன்ற அப்பொழுதான் வேறு பாதை மாறி வந்து தெரிந்த்து ,பிறகு திருப்பிக்கொண்டு,கேஸிலிருந்து பெட்ரோலுக்கு மாறியதால் வேறு மெதுவாக சென்றது மகிவுந்து.காரின் வேகத்தை குறைக்கும் போது நின்று வேறு போய்,பிறகு எடுக்க வேண்டியதாக வேறு இருந்து.

திருப்பிக்கொண்டு அண்ணாமலை நகர் செல்லும் வழியில் வந்து கொண்டு இருக்கும் போது நின்றே விட்டது.எவ்வளவு முயன்றுக் நகரவே இல்லை.என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.சின்ன குழந்தைகள் வேறு இருந்தார்கள்.சுற்றிலும் காடு போன்று இருந்தது.என் கணவரைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைக கூறினேன்.அவர் காரை சரிபார்பவர்க்குத் தகவல் சொல்ல,அவர்
என்னை அழைத்து விவரம் வினவினார் .நான் கார் நகரமறுக்கும் விவரத்தைக் கூறினேன்.உடனே வருவதாக கூறினார்.
எல்லோரையும் ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பலாம் என்று முடிவு செய்த போது ,நல்ல வேளையாக அந்த பக்கம் ஒரு காலி ஆட்டோ வந்து,அதில் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு,நானும் நண்பரும் காத்திருந்தோம்.கார் சரிபார்பவர் இருவர் வந்தனர்.பார்த்துவிட்டு நீண்ட நாள்களாக கேஸிலேயே ஓட்டிவிட்டு பெட்ரோலில் ஓட்டாததால் அடைப்பு ஏற்றபட்டுள்ளது என்று கூறி எதனையோ தட்டி எடுத்தார்கள் கார் உறுமியது.சிறிது தூரம் சென்று விட்டு வருகிறோம் எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம் என்று கூறிவிட்டு இருவரும் எடுத்துச் சென்றனர்.போனவர்கள் நீண்ட நேரம் காணவில்லை என்னவென்று அலைபேசியில் அழைத்துக் கேட்டால் மறுபடியும் நின்றுவிட்டது.என்று கூறினார்கள் நாங்கள் இருவரும் நட்ந்து வந்து கொண்டிருந்தோம் ,அதற்குள் என் கணவர் வந்துவிட்டார்.பிறகு இன்னொரு நண்பதைத் தொலைபேசியில் அழைத்து அவரை வரச்சொல்லி ,அந்த நண்பருடன் அவரும் என் கணவருடன் நானும் விட்டிற்கு வந்து சேர்ந்தோம் மணி 8 ஆகிவிட்டது.

(அம்மா பூனை குறுக்கே போன போது நீ நம்ப மறுத்துவிட்டாய் இப்பொழுது நடந்ததெல்லாம் பார்த்தாயா? என்றார்கள் எனக்கு ஏனோ அதில் உடன்பாடு இல்லை)

(மாங்குரோவ் என்று ஆங்கிலத்திலும் தமிழில் சுரபுன்னை,அலையாத்தி என்று அழைக்க கூடிய மரங்கள் நிறைந்து காணப்பெறுகின்றன.இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே இவ்வகையான காடுகள் காணப்பெறுகின்றன.தமிழகத்தில் முத்துப்பேட்டையிலும் பிச்சாவரத்திலும் காணப்பெறுகின்றன. வேகமாக வரக்கூடிய அலைகளைத் தடுத்து அதன் வேகத்தை கட்டுப்படுத்துவதால் அதற்கு அலையாத்தி என்று பெயர்.சுனாமி வந்தபொழுது இம்மரங்கள் இருந்ததால் தான் இப்பகுதியி பெரும் சேதம் இல்லாமல் தடுக்கபட்டுள்ளது.)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *