இல்லறம் ஏற்றகும் துணையர் இருவரும் வாழ்க்கையில் எது போல இருக்கவேண்டும் என்பதைப் பல உவமைகளின் வழி நமது இலக்கியங்கள் கூறுகின்றன.
இரட்டை மாலைகளை ஒருங்கே ஒருமாலையாக பிணைப்பது போல பொலிவுடையவர்கள் அறிவு,உரு,திரு முதலியவற்றால் ஒப்புமையுடைய தலைவன் தலைவியர் என ஒரு குறுந்தொகைப் பாடல் கூறுகின்றது.
துணைமலர் பிணையல் அன்னஇவர்
மணமகிழ் இயற்கை(குறுந்தொகை,229)
இப்பாலின் மூலமாக நாம் அறிந்து கொள்வது அனைத்திலும் வாழ்க்கை இணையர் இருவரும் சமநிலையில் இருந்தால் அவ்வாழ்க்கை சிறக்கும் என்பதாகும்.
அன்புடைய தலைவன் தலைவியர் ஓருயிரை இரண்டு உடற்கண்ணே பகுத்து வைத்ததுபோலவும்,இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவையைப் போலவும் ,மணியும் அதனுள் தோன்றும் ஒளிபோல ஒன்று பட்டவர்கள் போலவும் வாழ்வார்கள் என நற்றிணையும் ,அகநானூறும்,சூளாமணியும் கூறுகின்றன.
நினக்கு யான்,உயிர்பகுத்தன்ன மாண்பின்னே(நற்றிணை,128)
யாமே,பிரிவின் றியைந்து துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே (அகநானூறு,12)
நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல
மணியுள் பரந்த நீர்போலத் துணிபாம்
இணைபிரியாமல் ஒருவர்மேல் ஒருவர் உண்மையான அன்பு கொண்டு வாழும் இனிய இல்லறவாழ்க்கை என்றும் நீர்வற்றாத ஆற்றின் கரையில் எப்படி மரம் செழிப்புடன் காணப்படுமோ அது போல என்றும் அவர்கள் வாழ்க்கையும் செழித்துக்காணப்பெறும் என்று கூறுகின்றது குறிந்தொகை.
யாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே (குறுந்தொகை ,368)
தலைவன் தலைவியரிடையே உள்ள நட்பெனும் காதல் பிரிக்கமுடியாமல் சிக்குண்ட முடிச்சுப்போல் அவர்கள் யாராலும் பிரிக்கமுடியமல் அன்பால் கட்டுண்டு இருக்கவேண்டும் என்பதை,
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிது முடிந்தமைந் தன்றே (குறுந்தொகை ,313)
இச் சங்கபாடல் கூறுகின்றது.
ஆகையால் நம்முடைய சங்க இலக்கியங்களெல்லாம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று கூறும் வாழ்வியல் பெட்டகங்களாக உள்ளன. அவற்றின் பயன் அறிந்து அவற்றை நாம் துய்த்து வாழ்வை இனிமையுடையதாக ஆக்கி கொள்ளவேண்டும்.
0 Comments