இலக்கிய நூல்களைக் காட்டிலும் இலக்கண நூல்களைப் படித்தறிதல் கடினமானது.இலக்கண நூலை இயற்ற வேண்டும் என்றால் பரந்த நூலறிவு வேண்டும். இலக்கண நூல்களை இயற்றுவதிலும் பெண்கள் சிறப்புடன் செயலபட்டுள்ளனர்.செய்யுளைப் பற்றிய இரண்டு நூல்களை பெண்பாற் புலவர்கள் இயற்றியுள்ளனர்.அவ்விலக்கண நூல்கள் காக்கைப்பாடினியம்,சிறுகாக்கைப் பாடினியம் என்பதாகும்.யாப்பருங்க விருத்தியுரை,யாப்பருங்கலக் காரிகையுரை என்னும் நூல்கள் இவ்விரு நூல்களில் உள்ள பல சூத்திரங்களை மேற்றகோளாக் காட்டியுள்ளன.காக்கைப்பாடினியம் பற்றிய குறிப்பு தொல்காப்பிய உரைகளிலும்,நன்னூல் மயிலைநாதர் உரையிலும்,களவியல் உரையிலும்,வீரசோழியம் உரையிலும் உள்ளன.காக்கைப் பாடினிய நூற்பாக்கள் 89 கிடைத்துள்ளன.புலவர் இரா.இளங்குமரன் அவர்கள் உறுப்பியல் செய்யுளியல் பொதுவியல் எனப் பகுத்துக்கொண்டு இந்நூலை அமைத்துத் தருகின்றார்.சங்க இலக்கியத்திலும் ஒரு காக்கைப்பாடினியார் இருந்துள்ளார்.பாடினி என்பது பெண்களைக் குறிக்கப்பயன்படும் சொல்லாகும்.
பாணன் சூடான் பாடினி அணியாள் (புறம்,242)
மறம்பாடிய பாடினியும்மே(புறம் 11)
வாடா மாலை பாடினி அணிய ( புறம் ,364)
புரிமாலையர் பாடினிக்குப் (புறம்,361)
பாடினி மாலை அணிய (319)
என்ற பாடல்களில் பாடினி என்பது பாணனுக்கு பெண்பாலாக அமைவதைக் காணலாம்.
ஆக பாடினி என்ற சொல் பெண்பாலைக் குறிக்கும் என்பது திண்ணம்.
காக்கைப்பாடினியாரின் இலக்கணப் புலமையை யாப்பருங்கால விருத்தியுரையார் போற்றி ஒரு வெண்பா இயற்றியுள்ளார்.
தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார் – நல்யாப்புக்
கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்,
சொற்றார்தம் நூலுள் தொகுத்து.
காக்கைப்பாடினியத்துக்குப் பின் மற்றுமொரு காக்கைப்பாடினியார் இலக்கண நூல் யாத்துள்ளார்.அவரிலிருந்து இவரைப் பிரித்துக் காட்டவே சிறுகாக்கைப் படினியார் என்று வழங்கப்பெற்றார்.
31 நாற்பாக்கள் மட்டுமே கிடைத்துள.
0 Comments