அவனும் காதலித்தான் ;அவளும் காதலித்தாள் ; உள்ளம் இரண்டும் ஒன்று ஆயின .சிலநாள் இன்பம்.பிறகு அவன் சென்றான்;அவனோ செல்வச் சீமான் வீட்டுப் பிள்ளை; நெய்தல் நிலத்திலே உள்ள ஒரு பெரிய மரக்காயர் மகன்.அவன் ஊரிலே ஏராளமான புன்னை மரங்கள் உண்டு.
அந்த மரங்களிலே குருகு வந்து தங்கும்;உறங்கும் . ஓயாது அலைகள் வீசும்.அத்தகைய நெய்தல் நில இளைஞன் விரைவில் வருவேன் என்று சொல்லிப்போனான்.
அவன் வரவையே எதிர் நோக்கினாள் ; வழிமேல் விழிவைத்து நின்றாள்.ஆனால் வரவில்லை.ஒரு நாள் அல்ல பல நாள் இப்படி சென்றன.
உணவு செல்லவில்லை அவளுக்கு ,உறக்கம் கொள்ளவில்லை.துன்புற்றுத்துடித்தால்,வாடினாள்.
ஐயோ ! என்னால் தாங்க முடியவில்லையே ! காம நோய் என்று சொல்கிறார்களே ! அது இப்படி தான் இருக்குமோ தோழி என்று கேட்கின்றாள் தோழியை நோக்கி.
அந்த உள்ளம் தான் எத்தனை மாசு மறுவற்றது ! அந்த உள்ளத்தில் இருந்து எத்தகைய ஏக்கம் எதிரொலி செய்கிறது;சூது வாது இல்லாத பெண் . காதலன் பிரிந்து அவள் படும் பாட்டைச் சில வரிகளிலே தம் கண்முன் எழுதி காட்டுகின்றார் கவி.அந்த சொற்கள்தான் எப்படி நம் உள்ளத்தைத் தொடுகின்றன.இதோ அந்த குறுந்தொகைப் பாடல்.
அதுகொல் தோழி காம நோயே?
வதிகுருகு உறங்கும் இன்னிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண்கண் பாடுதல்ஒல் லாவே ———-நரிவெரூஉத் தலையார்
0 Comments