கண்துடிப்பு….

Sep 7, 2009 | Uncategorized | 0 comments

நம்பிக்கை என்பது தெளிந்த எண்ணத்தின் திடமான உறுதிபாடு என்பர்.நம்பிக்கை தான் வாழ்க்கையின் அடிதளம்.நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி எனபதே இல்லை. ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கை என்பது வேறு. மரபு வழியாக சில நிகழ்வுகளையோ , கருத்துக்களையோ, நம்பிக்கொண்டு தான் இருக்கின்றோம்.வீட்டை விட்டுக் கிளம்பும் போது பூனைக் குறுக்கே போனால் ஏதோ கெட்ட சகுனம் என்று வழிவழியாக நம்பிகை நம்முள் விதைக்கப்பட்டுள்ளது.அதனை இன்றும் நாம் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றோம்.இது போல் எத்தனையோ நம்பிக்கைக்ள நம்மை விட்டு பிரிக்க முடியாமல் நம்மோடு ஒன்று கலந்துவிட்டது.

சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கும் போது அக்கால மக்களில் கொண்டிருந்த சில நம்பிக்கைகள் இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம்.

மகளிருக்கு இடக்கண்ணும் ஆடவருக்கு வலக்கண்ணும் துடித்தால் நல்லது நடக்கும் என்றும்,மாறாகப் பெண்ணுக்கு வலக்கண்ணும் ஆணுக்கு இடக்கண்ணும் துடுத்தால் கெட்டது நடக்கும் என்றும்,கூறுவதைக் காணலாம்.இந்நம்பிக்கை சங்க இலக்கியத்திலும் காணப்பெறுகின்றது.

பொருள்வயின் காரணமாக தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கின்றான்.பொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில் மீள்வான் எனபதன் நன்நிமித்தமாகத் தலைவியின் இடது கண் துடித்தலை இயம்புகின்றாள்.

நல்லெழில் உண்கண் ஆடுமால் இடனே (கலித்தொகை,11)
தலைவன் ஏறுதழுவி வென்று ஒரு நாளில் நம்மை அடைவது உறுதி என்பதை நம் கண்கள் முன்னரே அறிவித்து உதவி செய்தன எனத் தலைவி தோழியிடம் உரைக்கின்றாள்.

பொதுவன் தமக்கொரு நாள்
கேளான் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்.(கலித்தொகை,101)

இப்பாடல் அடிகளை நோக்கும் போது கண் துடித்தால் அதுவும் பெண்களுக்கு இடக்கண்துடித்தால் நன்மை பயக்கும் என்பதை அறிய முடிகின்றது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *