பெரும் பிறிதாதல்…

Sep 4, 2009 | Uncategorized | 0 comments

பெரும் பிறதாதல் என்ற மரபுத்தொடர் சொல்லுக்குச் சாதல் என்று பொருள்படும். பெரிதும் வேறாதல் அதாவது உறவு தொடர்பெல்லாம் நீங்கிப் பிணம் எனப் பெயர் பெற்று வேறாக அன்னியமாக்கப் பெறுதல் என்பது விளக்கம்.
இச்சொல் சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது
காட்டகத்தே ஒரு ஆண்குரங்கு மரத்தில் தாவி விளையாடும் போது இறந்து விடுகின்றது.
பெண் குரங்கோ தன் தலைவன் பிரிந்ததைப் பொருத்துக் கொண்டு கைமை நோன்பை நோற்க விரும்பாமல்,தன் குழந்தையைத் தன் சொந்தங்களிடம் சேர்த்துவிட்டுத் தன்னுயிரை விடுகின்றது.(இதற்கு இன்னொரு பொருளும் கூறுகின்றனர் தன் கட்டி தன் வேலைகளைத் தானே செய்யும் படி திறம் பெறுவரை அதனை வளர்த்து விட்டு அதன் பிறகு உயிரினை மாய்த்துக் கொள்கின்றது) இப்பாடலில் ,

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குமலை அடிக்கத்துப் பாய்ந்துயிர் ஞெகுக்கும்
சாரல் நாட (குறுந்தொகை,69)

பெரும்பிறிது என்னும் சொல் அப்பொருளில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.

அது போலவே கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலையில் போர் செய்து புறப்புண்பட்டு,அதற்கு நாணிய சேரலாதன் வாளொடு வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை செவிமடுத்த மறவர்கள் எல்லோரும் அவனொடு துறக்கவுலகம் புக விரும்பிப் பெரும்பிறிதாயினர் என அகநானூறு அறிவிக்கும்.

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறி தாகியாங்கு (அகம்,55)

வல்வில் ஓரி விடுத்த அம்பு யானையை வீழ்த்திப் புலியைச் சாகடித்து,மானை இருட்டி ,பன்றியைச் சாய்த்து இறுதியாகப் புற்றிலுள்ள உடும்பை ஒழித்துது.இச்செய்தியைப் பாடும் வன் பரணர் பெரும்பிறிதாதல் என்னும் மரபுத்தொடரைப் பயன்படுத்துகின்றார்.

வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழல்தலைப் புகர்க்கலை உருட்டி,இரல்தலைக்
கேழற் பன்றி வீழ,அயலது
அழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோள் (புறம்,152)

இன்னுயிர் பெரும்பிறி தாயினும் என்னதூஉம்,புலவேன் வாழி தோழி
என நற்றிணையிலும் இம் மரபுத்தொடர் ஆட்சி பெற்றுள்ளது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *