சினம் குறித்த சொற்கள்……..

Aug 30, 2009 | Uncategorized | 0 comments

இப்பொழுது கோபம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றோம் அல்லவா? அச்சொல்லுக்கு பல பெயர்கள் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன.கோபம் என்னும் சொல் சங்க நூல்களில் இந்திரகோபப் பூச்சிகளைக் குறிதனவே ஒழிய சினம் என்பதைக் குறிக்கவில்லை.பிற்காலத்தில் தான் சினம் என்பதற்கு கோவம் கோபம்,என்ற சொல்லட்சிகள் வழக்கில் வந்தன.
கோபம் என்பதே சரியான சொல்வழக்கு.அனால் பேச்சு வழக்கில் கோவம் என்று கூறுகின்றோம்.

சங்க இலக்கியத்தில் கதம்,சீற்றம்,சினம்,வெகுளி முதலிய சொற்கள் கோபத்தை உணர்த்தும் சொற்களாகப் பயின்று வந்துள்ளன.அச்சொற்கள் எல்லாம் ஒரே பொருள் உடையன போல் இருந்தாலும் இவற்றுள் சிறு வேறுபாடு உண்டு.

கதம் — இச்சொல் இளஞ்சூட்டைக் குறிக்கும். கோபம் வந்தால் உடலில் சூடும் தோன்றுகிறது அல்லவா? கோபப்படுபவரைப் பார்த்து எதற்கு இதற்கெல்லாம் சூடாகிறாய் என்று இன்றும் நாம் வழக்கில் கூறுகின்றோம் தானே.சிறு கோபம் கொண்டு உடலில் இளஞ்சூடு பரவுவதற்குக் கதம் என்று பெயர்.உடல் எப்பொழுதும் வெதுவெதுப்பாக காய்ந்து கொண்டு இருப்பதால் அதனைக் காயம் என்று கூறுகின்றோம்.

சீற்றம்— பாம்பு சீறுவது போல வெகுண்டெழுவது.கோபம் அதிகமாவது. வெகுளியும் சிற்றத்தை ஒத்ததே.’உருமிற் சீற்றம் ‘ எனப் பதிற்றுப்பத்தில் காணப்பெறுவதால் ,சீற்றம் இடிஇடிப்பது போன்று கடுமையான சொற்களைக் கூறி வெகுள்வது என்பதை அறியலாம்.

சினம் —- சினம் என்பது தோன்றியவுடன் மறையாமல் காலம் நீட்டித்து இருப்பது என விளக்கம் தருவர் நச்சினார்கினியர்.சங்க புறநானூற்றுப் பாடல் ஒன்றில் அதியமான் போர்களத்தில் போர்புரிந்து கொண்டு இருக்கும் போது,அவனுக்கு மகன் பிறந்த செய்தி கிடைக்கின்றது, உடனே மகனைக் காண போர்களத்தில் இருந்து வருகின்றான்.மகனைக் கண்ட பின்பும் ,பகைஅரசர்களுடன் போரிட்ட போது ஏற்றபட்ட சினத்தின் காரணமாக சிவந்து கண்களின் நிறம் மாறாமல் அந்நிலையிலேயே உள்ளன.இந்நீடிப்பை சினம் என்ற சொல்லாட்சியால் ஔவையார் குறிப்பிடுகின்றார்.

இன்னும் மாறாத சினனே (புறம்,100)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *