மாலை வகைகள்……..

Aug 18, 2009 | Uncategorized | 0 comments

நம் முன்னோர்களால் எழுதப்பட்ட பழமை இலக்கியங்களின் வாயிலாக மாலை என்று இன்று ஒரு சொல்லால் குறிப்பிடுகின்றோமே பூமாலையை அதற்கு பலப் பெயரில் வழங்கியுள்ளதை அறியலாம்.

மாலை,தார்,கோதை,கண்ணி,தெரியல்,தொடையல்,ஒலியல்,தாமம் என்ற சொற்கள் சங்க நூல்களில் காணப்பெறுகின்றன.இந்நொற்கள் அனைத்தும் சில வேறுபாடுகள் உடையது.

கண்ணி கார்நறுங் கொன்றை,காமர்
வண்ண மார்பில் தாரும் கொன்றை

என புறநானூற்றிலும்,

கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
என அகநானூற்றிலும்

கண்ணியார் தாரர் கமழ்நறுங் கோதையர்

எனப் பரிபாடலிலும்
காணப்பெறுவதால் கண்ணி,தார் மாலை,கோதை என்ற சொற்கள் வெவ்வேறானவை என்பதை அறியலாம்.

கண்ணி என்பது தலையில் சூடுவது.செறிவாக பல வண்ணமலர்களைக் கொண்டு தொடுக்கப்பெறுவது.
தார் ஆண்கள் அணியக்கூடியது.
மாலை பெண்கள் அணியக்கூடியது.
கோதை ஆண்கள்,பெண்கள் இருபாலரும் அணியக் கூடியது.

தெரியல் என்பது தேர்ந்தெடுக்கப் பட்ட மலர்களால் தொடுப்பது என்று கூறுவர்.
தொல்காப்பியர்
‘உறுபகை வேந்திடை தெரியல் வேண்டி’
என்று கூறுவதனால் தெரியல் என்பது இன்ன குலத்தினர் என்று அறிந்து கொள்ள சூடிக்கொள்ளும் பூமாலை என்லாம்.
அதாவது மூவேந்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு வகையான மாலையை அணிந்தார்கள் அல்லவா அதுதான் தெரியல் என்பர்.

தொடையல் என்பது பூவால் தொடுக்கப்படுவது என்று கூறப்பெறிகின்றது.

தாமம் என்பது நாரினால் கட்டப்படும் மாலையைக் குறிக்கின்றது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *