அந்திமாலை

Aug 8, 2009 | Uncategorized | 0 comments

அழகினைப் பற்றி கூறும் பாவேந்தர் மேற்றிசையில் இலங்குகின்ற மாணிக்கச் சுடரில் அழகு வீற்றிருக்கும் என்பார்.அந்தி மாலை என்பது இறைவன் படைப்பில் இன்பத்தின் தொடக்கம் என்று கூறலாம்.மாலை நேரத்திற்கு மயங்காத உயிர்களே இல்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தினைக் காட்டி மயக்கும் மாலை நேரத்திற்கு மயங்காதார் யார்.அந்தி மாலையைப் பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள்,
யாரங்கே ?
ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியில்
மஞ்சள் அரைப்பது யார் ?

இத்தனை வண்ணக்கோலம்
ஏனங்கே?


அது
இரவின் வாசல் என்றா
இத்தனை அலங்காரம்?

என்ன அது ?
தீயில் அங்கே
தேன் வடிகிறதா?

அங்கே
வழிந்தோடுவதெல்லாம்
வனத்துக்கு
ஒரு பகைலைப்
பலிகொடுத்த
ரத்தமா?

இத்தனை
வண்ணப் புடவைகள்
கலைத்துப் போட்டும்…….
கடைசியில்
இரவு கறுப்பைத்தானே
கட்டிக்கொள்ளுகிறது?

என்று மாலை நேரத்தின் கோலத்தினை கவிதைப் பொருளாக்கி பாடுகின்றார்.இந்த மாலை நேரத்தினைப் பற்றி இளங்கோவடிகளும் பாடுகின்றார்.கண்ணகியை விட்டு பிரிந்து கோவலன்
மாதவியிடம் சென்றுவிடுகின்றான்.

பிரிந்த பிறகு, அந்தி மாலை கோவலனைப் பிரிந்த கண்ணகிக்கு எத்தகைய துன்பம் தரக்கூடியதாக இருந்தது என்பதையும்,அதேவேளையில் கோவலனுடன் இருக்கும் மாதவிக்கு எத்தகைய இன்பத்தைத் தருவதாக மாலை காலம் இருந்து என்பதனையும் அந்தி மாலை சிறப்புச் செய் காதையில் பதிவு செய்கின்றார்.

புணர்ந்தோர் பூவணிய பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு அறிய
என்று கூறும் ஒரு புறநானூற்றுப் பாடல்.ஆதே போல்தான் கணவனுடன் இருக்கும் மனைவிக்கு மாலை காலம் என்பது இன்பத்தை அள்ளி தரக்கூடியதாகவும் ,கணவனை விட்டுப் பிரிந்த மனைவிக்கு மாலை காலம் என்பது கொடுமாயின கூற்று போல இருக்கும்.

இதோ பாருங்கள் கண்ணகிக்கும் ,மாதவிக்கும் அந்தி மாலை எப்படி உள்ளது என்பதை.என்நடையில்…….படித்துப் பாருங்கள்.

கடலெனும்
மங்கை தன்துணை
காண
திசை திசை
நோக்க

நோக்கி காணமல்
வருந்துங்காலை
அன்பிலா
மக்களை வருத்தும்
மன்னன் போல
அந்தி மாலை
வந்தது காண்.

அந்தி மாலையில்…….
தம் மனம்
தங்கிய
கொழுநரைப் பிரிந்த
மகளிரெல்லாம்
துயரினை எய்த

இணைந்த மகளிரெல்லாம்
களிமகிழ்வு
எய்த……..

மாதவி
ஒப்பனையோடு
நிலா முற்றத்தில்
கோவலனுடன்
ஊடியும் கூடியும்
இன்புற்றிருக்க……..

கணவனோடு
புணரந்த
மகளிரெல்லம்
பூஞ்சேக்கை ஆவி போல
கணவன் மார்பில்
ஒடுங்கி
காவிமலர் போலும்
கண்னால்
களிதுயில் எய்தினர்……..

பிரிந்த கண்ணகியோ
மங்கலஅணி அன்றி
பிறவணி
அணியாமல்……
ஒப்பனை இன்றி
நுதல் திலகம் இழந்தும்
கண்ணெழுதாமலும்
கூந்தல் நெய்யணி துறந்தும்
கையற்ற நிலையில்….
நெஞ்சு கலங்க வருந்தினாள்………

அது போன்றே
கொழுநனைப் பிரிந்த
மங்கையர் பலரும்
ஊதுகுலைக் குருகு போல்
வெந்துயரால்
கண்ணகள் முத்தினை
உதிர்க்க
உள்ளம் துயருற்று கலங்கினர்………

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *