புறநானூற்றில் பொறையன் என்னும் புலவர் குறிஞ்சி பாடல்களைப் பாடுவதில் சிறந்தவரான கபிலரைப் போற்றிப் பாடுகின்றார்.
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்ளவி விளங்கு புகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன்!(புறம்,53)
கபிலர் பல பொருளையும் அடக்கிய செய்யுளை இயற்றும் செவ்விய நாவையும்,மிகுந்த அறிஞானத்தையும்,பல்லோர் புகழ்ந்து ஏத்தும் சிறப்பினையும் உடையவர் எனப் பாடுகின்றார்.
மாறோகத்து நப்பசலையார் என்ற புலவரும் கபிலரைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற் அந்த ணாளன்
இரந்துசெல் மாக்கட்க் இனியிடன் இன்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்.(புறம்,126)
மண்ணில் பரவியுள்ள மக்களுக்கெல்லாம் புலமைக் குறை இல்லாத அந்தணனாகிய கபிலன்,இரந்து செல்லும் புலவர்களுக்கு இனி இடம் இல்லையாகப் பெருகிய புகழ் நிலைக்கப் பாடினான் என்று கபிலரின் கவி திறனைக் கண்டு வியக்கின்றார்.
பதிற்றுப் பத்தில் பெருங்குன்றூர் கிழார் கபிலரின் பாடலின் சிறப்பையும்,பாடலால் அவர் பெற்ற ஊர்களையும் பாடுகின்றார்.
அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
நனவினும் பாடிய நல்இசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.(பதிற்றுப்பத்து,85)பகையரசர்களின் அவைகள் பணியவும்,அறத்தை விரும்பியும் அதற்கு இடையூறு ஏற்பட்டால்,அதனைக் காத்தற் பொருட்டு மறத்தை விரும்பி செயற்பட்டு விளங்கிய ,அவனது கொள்கையைச் செம்மை விளங்கிய நாவினாலும்,இழிவும் கவலையும் இல்லாத மனத்தினாலும் மெய்மயாய் பாடிய கபிலர் பரிசிலாகப் பெற்ற ஊர்கள் பல .
மதுரை நக்கீரனார் என்னும் புலவர் அகநானூற்றில் கபிலரின் வாய்மையைப் பாடுகின்றார்.
உலகுடன் திருதரும் பலர் புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன்.(அகம்,78) உலகுடன் இணைந்து வருகின்ற பல்லோர் போற்றும் சீர்த்தியைக் கொண்ட பொய்யாமொழிக் கபிலன் எனப் பாராட்டி உரைக்கின்றார்.
பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மோசிகீரன் என்னும் புலவரைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.
……………..திருந்துமொழி
மோசி பாடிய ஆயும் (புறம்,158)
அதுபோலவே அந்துவனாரை மருதன் இளநாகன் என்ற புலவர் அகநானூற்றுப் பாடலில் சிறப்பித்துப் பாடுகின்றார்.
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை ( அகம்,59)
0 Comments