கள்வன் மகன்

Jul 16, 2009 | Uncategorized | 0 comments

சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் மேலைநாட்டினரின் வருகையால் நமது நாட்டில் வளர்ச்சியுற்றதாக கருத்து உள்ளது.உரைநடை வடிவில் உள்ள இலக்கிய சிறுகதைகள் வேண்டுமென்றால் வந்து என்று கூறலாம் ஆனால் சிறுகதை படிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தக் கூடிய செய்யுள்களை நம்முடைய சங்க இலக்கியங்களில் காணலாம்.

சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை.இந்நூலில் குறிஞ்சிக்கலிப் பகுதில் கபிலரால் பாடப்பட்ட ஒரு பாடலைப் படிக்கும் போது நமக்கு ஒரு சிறுகதையினைப் படித்த உணர்வும் ஒரு நாடகத்தைப் பார்த்தவுணர்வும் தோன்றும்.

இப்பாடலில் தலைவி தோழியிடம் ,தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக,கபிலர் 16 அடிகளில் அமைந்து பாடியுள்ளார்.

தலைவி தோழியிடம் ,அழகிய ஒளி பொருந்திய வளையகள் அணிந்த என் அன்புக்கினிய தோழியே நான் கூறுவதை சற்றுக் கேட்பாயா?

நாம் சிறு வயதில் வீதியில் விளையாடி திரியும் போது,நல்ல தேர்ந்த கட்டக் கலைஞர்களைப் போல மணவீடுகட்டி விளையாடுவோம்.அப்பொழுது நாம் கட்டிய மணல் வீட்டினைக் காலால் இடறி கலைத்து மிதித்து விட்டு,தலையில் நாம் வைத்திருக்கும் பூக்களையும் பிய்த்து எறிந்துவிட்டு,பூங்காவனத்தில் பந்து வைத்து விளைடும்போது அதனையும் பறித்துக் கொண்டு செல்வானே,அவன் நேற்று எங்கள் வீட்டிற்கு வந்தான் உனக்கு தெரியுமா?

அப்பொழுது நானும் அன்னையும் மட்டுமே வீட்டில் இருந்தோம்.வந்தவன் என்ன செய்தான் தெரியுமா? நல்ல பிள்ளையாக நடித்துக்கொண்டு,தண்ணீர் தாகத்தால் நா வரண்டு விட்டது தண்ணீர் தாருங்கள் என்று கூறினான்.அம்மாவும் அதனை நம்பி அழகிய சொம்பில் தண்ணீர் வார்த்துக் கொடுத்து,அவனிடம் கொண்டு கொடுத்து வா என்றாள்.

நானும் கொடுக்கச் சென்றேன். தண்ணீரைக் கொடுத்தால் அதனை வாங்காமல் என் முன் கையை முரட்டுத் தனமாய் பற்றி விட்டானடி.நான் அப்படியே பதறி போய் கத்திவிட்டேன்.
என் கத்தலைக் கேட்டு அம்மா ஒடி வந்து என்ன நிகழ்ந்து ஏன் இப்படி கத்தினாய் என்று கேட்டார்.என்னால் உண்மையைச் சொல்ல முடியவில்லை.அவனைக் காட்டிக் கொடுக்கவும் மனம் வரவில்லை என்ன செய்வதென எண்ணி,பொய்சொல்ல துணிந்து, தண்ணீர் குடிக்கும் போது புரையேறிவிட்டதால் கத்தினேன் என்று பொய் கூறி அவனைக் காப்பாற்றினேன்.

உடனே அம்மா இதற்குப் போய் இப்படி கத்தலாமா என்று கூறிவிட்டு,பதற்றப்படாமல் குடிப்பா என்று அவன் முதுகை நீவிவிட்டாள்.

அவனோ என் உயிரைக் கொல்லவதுபோல் தன் கடைக்கண்ணால் பார்த்துச் சிரிக்கின்றான்.சரியான களவன் மகன் அவன்.என்னுயிரைக் கவர்ந்து சென்றான். என்று தோழியிடம் தலைவி ஒருநாள் நடந்த நிகழ்ச்சியினை ஒவியமாகச் சித்தரிக்கின்றாள்.

இதனை படிக்கும் போது ஒரு சிறுகதையினைப் படிப்பது போன்றே தோன்றுகிறது.இதோ அந்த செய்யுள், படித்துப் பாருங்களேன்.இன்பமாக இருக்கும்.

சுடர்தொடீஇ! கேளாய்-தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற்சிதையா,அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி,மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா,இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு,அன்னை
அடர்பொன் சிரகத்தால் வாக்கி,சுடர்இழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள்;என யானும்
தன்னை அறியாது சென்றேன்,மற்று என்னை
வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு,
அன்னாய்!இவன் ஒருவன் செய்தது காண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்,
உண்ணுநீர் விக்கினான் ! என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,நகைக்கூட்டம்
செய்தான்,அக்கள்வன் மகன்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *