தமிழ் சொற்கள் சில பொருள் ஒன்று என எண்ணுவோம் ஆனால் அவற்றுள் சில வேறுபாடுகள் இருக்கும் என்பதை நாம் அறிவதில்லை.எடுத்துக்காட்டாக
வணங்குதல் ,தொழுதல் என்னும் சொற்களுக்கு பொருள் ஒன்று என எண்ணுவோம்.ஆனால் இரண்டு சொற்களுனுடைய பொருளில் சிறு வேறுபாடு உண்டு.
வணங்குதல் என்பது தலையினுடைய தொழில் என்றும் தொழுதல் என்பது கையினுடையச் செயல் என்றும் கூறப்பெறுகிறது.இதற்கானச் சான்று திருக்குறளில் காணப்பெறுகிறது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
இக்குறளில் ‘வணங்கா தலை’ என்ற சொற்களை நோக்கும் போது வணங்குதல் என்பது தலையினுடைய தொழில் எனபதை அறியலாம்.
அதேபோல்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்என்ற குறளில் ‘கைகூப்பி தொழும்’ என்ற சொற்களைப் பார்கும் போது தொழுதல் கையினுடைய செயல் என்பதனை அறியலாம்.இஸ்லாம் மதத்தினர் இறை வழிப்பாட்டினைத் தொழுகை என்று கூறுவதும் இங்கு நினையத் தகும்.
அது போலவே ஐம் புலன் ஐம் பொறி என்பதற்கும் வேறுபாடு உண்டு.
பொறி என்றால் மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்ற உறுப்புக்களைக் குறிக்கும்.புலன் என்றால் அதனால் நடக்க்கூடிய செயலினைக் குறிக்கும்.அதாவது உணர்தல் ,சுவைத்தல் ,பார்த்தல்,நுகர்தல்,கேட்டல் ஆகியவற்றைக் குறிக்கும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.
புலனுக்கு விளக்கம் தருகின்றார்.
0 Comments