முதல்வர் D.சாந்தி

May 30, 2009 | Uncategorized | 0 comments

பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் தங்களது முத்திரைகளைப் பதித்து வருகின்றனர் . எடுத்துக்கொண்ட வேலைகளைச் செவ்வனே முடித்து வெற்றிவாகை சூடிக்கொண்டுள்ளனர். அந்த வகையில் தான் கேரளாவில் சந்தித்த ஒரு தமிழ் பெண்மணியைக் குறிப்பிடலாம்.
தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று சாதனைகளின் எல்லைகளைத் தொட்டு கொண்டிருப்பவர்தான் Regional Vocational Traning Institute For Woman (RVTI) என்ற நிறுவனத்தின் முதல்வர் D . சாந்தி.

திண்டுக்கல் பெத்தாம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து ,பெத்தம்பட்டி அரசு பள்ளியில்1-3 வகுப்பு வரையிலும் கொசவப்பட்டி R.C.கான்வெட்டில் 4-8 பயின்றும்,மேலும் மதுரை லூர்தூ அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றும் ,மதுரையில் ஆடை வடிவமைப்புத் துறையில் பயின்று,1992 ஆம் ஆண்டு UPSC –யால் பயிற்சி அதிகாரியாக தேர்வு செய்யப்பெற்று,தன்னுடைய திறமையான பணியின் காரணமாக இன்று,இந்தியாவின் ஏழு இடங்களில் அமைந்துள்ள இந்நிறுவனங்களின் ஒன்றான கேரள பகுதியில் முதல்வராக 11-6-2007 இலிருந்து பதவியேற்று,திறம்பட தன் பணியை இன்று செய்து வருகின்றார்.

அந்த பகுதி நிறுவனத்தில் முதல்வராக பதவி ஏற்றுள்ள முதல் பெண்மணி இவர்தான்.இவருக்கு அங்கு பல்வேறு விதமான சாவால்கள் காத்துக்கொண்டு இருந்து,அதனை எல்லாம் முறியடித்து , அந் நிறுவனத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றார்.

கேரளாவிற்கு இதற்கு முன் நான் சென்றது இல்லை ,அங்கு அவல்கள் தஞ்சை கல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பணிபுரியக் கூடிய மங்கையர்கரசி அவர்களின் மூலம் அறிமுகமானார்கள்.அவருடைய சித்தி இவர்.அவர்களை சந்தித்த நேரத்தில் இருந்து எங்களை அப்படி ஒரு கவனிப்பு,நாங்கள் அந்த ஊருக்கு புதிது என்பதால்,ஒவ்வொன்றையும் பொறுமையாக எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.கேரளாப் பல்கலைக்கழகத்தின் பயிற்சிக்கு சென்றிருந்த எங்களுக்கு ,அங்கு தங்குவதற்கு சரியாக ஏற்பாடு செய்யவில்லை,அந்த பயிற்சியின் அமைப்பாளர் சானவாஸ் அவர்கள் எங்களை ஒரு வீட்டில் தங்கிகொள்ளுமாறு கூறினார். ஏற்கனவே இருவர் அந்த அறையில் தங்கியுள்ளார்கள் என்று அந்த வீட்டில் உள்ளவர்கள் கூறினார்கள்,சரி பரவாயில்லை தங்கிகொள்ளலாம் என முடிவு செய்து நானும் மங்கையும் எங்கள் பொருள்களை அங்கு வைத்துவிட்டுப் பயிற்சிக்குச் சென்றுவிட்டோம்.மாலை வந்து பார்த்தால் அந்த அறையில் நான்கு பேர் இருக்கின்றார்கள். என்ன இப்படி செந்துவிட்டீர்கள் இரண்டு பேர்தானே தங்கி இருக்கிறார்கள் என்று கூறினீர்கள் என்று அந்த வீட்டில் உள்ள அம்மாவிடம் கேட்ட பொழுது,பரவாயில்லை தங்கி கொள்ளலாம் என்று கூறினார் . அந்த அறையில் மூன்று நான்கு பேரே அதிகம் நாங்கள் எப்படி தங்குவது. இப்படி எங்களிடம் பொய் கூறிவிட்டீரகளே என்று அந்த அம்மாவிடம் கேட்டதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் ,நீங்கள் காலையில் இருந்து இங்கு பையை வைத்து சென்றதற்குப் பணம் தாருங்கள் என்று கேட்டது.இது என்ன கொடுமை என்று நினைத்துக் கொண்டு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டோம்.

பிறகு சாந்தி அவர்களிடம் தொடர்பு கொள்ள அவர்கள் கிளம்பி வந்து விடுங்கள் இங்கு எங்கள் கல்லூரி விடுதியில் தங்கி கொள்ளலாம் என்று கூறினார்கள்.உடனே நானும் மங்கையும் கிளம்பி அவர்கள் இருந்த இடம் சென்றோம். அவர்கள் வீட்டில் எங்களைத் தங்க வைத்திருப்பார் ஆனால் அவர்கள் அடுத்த நாள் வேலை காரணமாக வெளியூர் செல்வதால்,நீங்கள் இந்த ஊருக்குப் புதிது தனியாக அங்கு தங்கினால் உதவிக்கு ஆள் இருக்க மாட்டார்கள்,அதனால் விடுதியில் மாணவிகள் எல்லாம் இருக்கின்றார்கள் ,அவர்கள் உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.

விடுதிக்கு அவர்களே வந்து அறைகள் எல்லாம் எப்படி இருக்கின்றது என்று பார்வையிட்டு ,அங்குள்ள தமிழ் நாட்டு மாணவியை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.இவர்களுக்கு என்ன உதவி வேண்டுமோ செய்யுங்கள் என்று அங்குள்ள மாணவியரிடத்துக் கூறினார். அந்த விடுதி மிகத் தூய்மையாய், அறைகள் காற்றோட்டமுள்ளதாய் இருந்தது. அந்த இடம் மிகவும் பிடித்துவிட்டது.அங்க 32 மாணவிகள் மட்டுமே தங்கி இருந்தனர்.நாங்கள் இருந்த மாடிப் பகுதியில் யாரும் இல்லை நாங்கள் மட்டுமே இருந்தோம்.

அவர்கள் விடுதியிலேயே உணவினையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.இங்கு உள்ளது பிடிக்கவில்லை என்றால் வெளியில் தமிழ் நாடு உணவுவிடுதி உள்ளது அங்கு சென்று சாப்பிடலாம் என்று கூறி,கழக்குட்டம் பகுதிக்கு அழைத்துச் சென்று அக்கடையினைக் காட்டி இரவு உணவினையும் வாங்கி கொடுத்தார்கள்.

சாந்தி அவர்கள் ஒரு கல்லூயின் முதல்வராக இருந்தபோதும் ,எவ்விதமான ஆடம்பரமும் இல்லாமல் பழகுவதற்கு மிக இனிமையானவராய்,அன்பு காட்டுவதில் நிகர் இல்லாதவராய் ,எங்கள் மீது மிகுந்த அக்கறைக் கொண்டு,அவருடைய வேளை பளூவுக்கு இடையேயும் எங்களோடு அவர் கழித்த அந்த நேரத்தை மறக்க முடியாது.

சிலரிடம் பழகும் போது சில நல்ல குணங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்து எங்களிடம் காட்டிய அக்கறை,வந்துவிட்டார்களே என்று இல்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து மகிழ்ச்சியோடு செய்தார்கள். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நல்ல சிறந்த பெண்மணியை சந்தித்தோம் என்ற மனநிறைவு.

அடுத்தநாள் ஊருக்குச் செல்வதால் உங்களை எங்கும் அழைத்து செல்ல இயலாது இன்று சங்கமுகம் கடற்கரைக்குச் சென்று வரலாம் என அழைத்துச் சென்றார்கள்.அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது இன்றைய சூழலில் பெணகளின் நிலை எவ்வாறு உள்ளது.அவர்கள் வெளியில் வேலைக்கு வந்தாலும் வீட்டில் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கிறார்கள் என்று வினவினேன்.

அதற்கு அவர்கள் பெண்கள் என்ன தான் பல துறைகளில் சாதனைகள் படைத்தாலும்,இன்னும் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டி சூழல்தான் உள்ளது.எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அவர்களுடைய அனுமதியைப் பெற்றுதான் இன்றும் செல்லவேண்டியுள்ளது.நம்முடைய விருப்பத்திற்கு வெளியில் சென்று வந்தால் அன்று வீட்டில் பிரச்சனைதான் ,இன்னும் ஆண்கள் மத்தியில் மாற்றம் வரவேண்டும்.பெண்களைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பெண் தான் எடுத்துக்கொண்ட வேலையில் சிறப்பாக மேல் நிலைக்கு வருகிறாள் என்றாள் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆண்களுக்கு வரவில்லை என்று கூறினார்கள்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *