1982 ஆம் ஆண்டு புதிய உரைநடை என்னும் நூலூக்குச் சாகித்திய அகதெமி விருதும்1983 இல் விடுதலைக்கு முன் தமிழ் சிறுகதை என்னும் நூலூக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசும்,1992 இல் கவிதை படைப்புக்குப் பாவேந்தர் பாரதிதாசன் விருதும்,1988 இல் நல்லாசிரியர் விருதும்,நாவல் இலக்கியம் என்னும் நூலுக்கு விருதும்,2008 இல் நிச்சயத்தார்த்தம் என்னும் குஜராத்தி மொழிபெயர்ப்பு நூலிக்கு சாகித்திய அகதெமி விருதும் பெற்ற பெருமைக்குரியவர் பேராசிரியர் மா.இராமலிங்கம்.இவர் இலக்கிய உலகில் எழில் முதல்வன் என்னும் புனைப்பெயரில் பல படைப்புக்களைப் படைத்துள்ளார்.ஒய்வு பெற்ற பின்பும் ஒயாது உழைத்துக் கொண்டு இருப்பவர். பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்து கொண்டுள்ளார்கள்.
நாகை மாவட்டம் திருத்துரைப்பூண்டி என்னும் தாலுக்காவில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5-10-1939 ஆம் ஆண்டு திருமிகு வ.மாணிக்கம் திருமதி மா.இராமாமிருத அம்மையார் இணையருக்கு மகவாய் தோன்றினார்.உயர்நிலைக் கல்வி திருத்துறைப்பூண்டியிலும்,தமிழ் இளங்கலை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று,முதுலை சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்று முதல் மாணவனாகத் திகழ்ந்தார்.முதுகலை பயின்ற காலத்தில் G.U .போப் விருதும் பல பரிசுகளையும் பெற்ற சிறப்புக்குரியவர்.
1963-64 இல் கோவை அரசுக்கல்லூரியில் துணை விரிவுராயாளராக பணிப்புரிந்து,பின்னர் 1964-73 இல் மாநிலக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகவும் ,1975-84 வரை பல்வேவேறு அரசு கலைக்கல்லூரிகளில் துறைத்தலைவராவும்,1985-2000 வரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்து தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்வேறு ஆக்க பணிகளைச் செய்து பணிஓய்வு பெற்றுள்ளார்.
டாக்டர் மு.வ ,டாக்டர் கா.மீனாட்சி சுந்தரம் சுந்தரம் ,புலவர் பா.சு.மணியம் (மறைமலை அடிகள் மாணவர்,மறைமலை அடிகள் மீதுள்ள பற்றினால் இவர் கையில் மறைமலை என பச்சைக்குத்தி இருப்பாராம் ) ஆகியோரிடத்துக் கல்வி கற்ற பெருமைக்குரியவர்.
பேராசிரியரிடம் பேசிக்கொண்டு இருந்த போது பாவேந்தர் பாரதிதாசனுடன் தாம் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பினை நினைவுகூர்ந்தார். இவருடைய முதல் கவிதை1958 –இல் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில் பத்திரிக்கையில் வெளிவந்ததுள்ளது.அப்போது பாவேந்தர் அவரைப் பாராட்டி குயில் பத்திரிக்கையில் ஒரு குறள் வெண்பா எழுதுகின்றார்.
எழில்முதல்வன் நல்லநல்ல செய்யுள் எழுதும்
தொழில்முதல்வன் ஆகின்றான் சூழ்ந்து.
பாவேந்தருக்குப் பொடி என்றால் மிகுந்த விருப்பமாம் எப்பொழுதும் பொடி போட்டுக் கொண்டு இருப்பாராம்.அதுவும் சண்முகம் பட்டப்பொடிதான் பாவேந்தருக்குப் பிடித்ததாம்.ஒரு முறை பாவேந்தரைக் காணச் செல்லும் போது பொடி வாங்கிக் கொண்டு சென்றாராம் அதற்கு பாவேந்தர் அவர் மனைவியிடம்,
ஒரு பொடியன் வரும்போதே பொடி வைத்துக் கொண்டு வருரான் பாரு
என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.அவருடன் பேசி விட்டுக் கிளம்ப முற்படுகையில் ,
இராமலிங்கு போவாயேல் என்மனம் வாடும்
இராமலிங்கா சற்றே இரு.
என ஒரு குறள் வெண்பாவைக் கூறிசிறிது நேரம் இருக்கச் சொன்னாராம்.
இவரும் கவிஞர் சுரதாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.கவிஞர் சுரதா அவர்கள் நடத்திய இலக்கியம் என்னும் இதழில் பல கவிதைகளை எழுதியுள்ளார்.
தமிழுக்குத் தொண்டாற்றிய பெருமழைப் புலவருடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்துள்ளார்.ஒரு முறை அவரை சந்திக்கச் செல்லும் போது நடந்த நிகழ்வினைப் பகிர்ந்து கொண்டார்.
இவருக்கு பதினேழு வயது இருக்கும் போது பெருமழைப் புவரைச் சந்திக்க அவரது ஊரான மேல பெருமழைக்குச் சென்றுள்ளார்.அப்போது ஒரு சிறிய கூரைவீட்டில் பெருமழைப்புலவர் வசித்துக்கொண்டிருந்தாராம்.அவர் ஒரு விவசாயி,அவர் தான் பெருமழைப் புலவர் என்று அறிமுடியாத படி நோஞ்சான் உடம்புடன் காட்சியளித்தாராம். இச் சிறுவயதிலேயே இவ்வளவு ஆர்வத்துடன் என்னைத்தேடி வந்துள்ளாயே என்று மகிழ்ந்தாராம்.இந்த ஊரில் உள்ள ஒருவர் கூட என்னை மதிப்பது கிடையாது,(வாழும் காலத்தில் எந்த அறிஞர்களும் போற்றப்படுவதிலை,)ஏதோ கிறுக்கிக் கொண்டுள்ளான் என்று நினைப்பார்கள் நீ எவ்வளவு தூரம் என்னை தேடிக்கொண்டு வந்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி, மதிய உணவினை இங்கு உண்டு விட்டுத்தான் செல்லவேண்டும் என்று சொல்லி, பூவரசு இலையைனைப் பறித்து, தனது கையினாலேயே தைத்து அதில் உணவு படைத்தாராம் .மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தமிழுக்கு மிக அளப்பறிய பணிகளைச் செய்தவர் பெருமழைப்புலவர்.பேராசிரியர் மா.இராமலிங்கம் பெருமழைப் புலவரின் உரைநயம் குறித்த கட்டுரையைக் குயில் இதழில் எழுதியபோது, மிக நன்றாகவுள்ளதாக பாராட்டினாராம் பொருமழைப் புலவர்.
புத்திலக்கிய தடத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சியவர்களில் பேராசிரியரும் ஒருவர்.இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது புத்திலக்கியம் தொடர்பான ஆய்வினையே மேற்கொண்டார்.
அப்பொழுது இரா.தண்டாயுதம் அவர்கள் நாவல் இலக்கியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இவர் சிறுகதை தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.
இவர் எழுதிய முதல் நூல் கவிதை நூல் இனிக்கும் நினைவுகள்என்பதாகும்.இந்நூல் 1965 இல் வெளிவந்துள்ளது.இதே ஆண்டில் தான் கமலா அம்மையாரைத் தனது வாழ்க்கைத் துணைவியாக்கிக்கொண்டார்.
அதன்பிறகு 1972 –இல் நாவல் இலக்கியம் (the theory of novel) என்னும் நூல் வெளிவந்தது.இதே ஆண்டில் இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம் என்ற நூலும்,1977 இல் புதிய உரைநடை என்னும் நூலும்,அகிலனின் கலையும் கருத்தும்,பொய்யான இரவுகள்(சிறுகதை),அதற்கு விலையில்லை(சிறுகதை) ,நாளைக்கு இதே க்யூவில்(சிறுகதை)பயணம் தொடரும்(கவிதை)இரண்டாவது வருகை,நோக்கு நிலை,கவண்கற்களும் சிறகுகளும்,எழில் முதல்வன் கவிதைகள் எனப் பல நூலுக்களைப் படைத்துள்ளார்.பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
2004-இல் அழகிய மணவாளஜீயர் அவர்களுடைய பகவத்கீதை வெண்பா என்னும் நூலைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார்.
பாகிஸ்தான் கதைகள்,பஞ்சாபி நாவல்,குஜராத்தி நாவல் ,வங்க நாவல் போன்றவற்றை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.இப்பொழுதும் செய்து கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் ,மலேசியா யூக்கோசுலோவாகிய போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழ் தொண்டு ஆற்றியுள்ளார். இவ்வூர்களுக்கு இவரை அரசே அனுப்பி வைத்து சிறப்பு.அனைத்திந்திய கவிதை அரங்குகளில் பங்கு கொண்டு பிறமொழி கவஞர்களிடம் தொடர்புடையவர்.
ஓய்வுக்குப் பிறகு தஞ்சையில் பவானி நகர் 4,கங்கைத்தெருவில் தமிழ்க்குடில் என்ற இல்லத்தில் தனது தமிழ்ப்பணியை இடையறாது ஆற்றிக்கொண்டுள்ளார்.
பேராசிரியர் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது திருக்குறளுக்கு நாளும் ஒரு உரை வருவது சரியில்லை.திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக இருக்கு அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.இலக்கிய உலகில் திறனாய்வு போக்கு இன்னும் செழுமையுறவேண்டும் எனவும்,நல்ல தரமான இலக்கியப் படைப்புகள் வெளிவரவேண்டும் என்றும் கூறினார்கள்.
0 Comments