செல்லியம்மன் திருவிழா

May 28, 2009 | Uncategorized | 0 comments

அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது.காக்கப்படுகின்றது என்றும் கூறலாம்.

வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு ,கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ளதுதான் ஒக்கநாடு கீழையூர் என்னும் கிராமம். இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது.ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது.இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும்,இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

கோடைக்காலத்தில் (மே) மாதத்தில் விழாக்கள்நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் கடந்த வாரம் காப்புக் கட்டுடன் இங்கு விழாத்தொடங்கியது.இன்னும் இங்கு விழாவினைப் பறையறைந்து அறிவிக்கும் முறைவுள்ளது.விழா அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு வீடுக்ளிலும் நவதானியங்களைக் கூட்டி,ஆட்டின் புழுக்கையைக் கொண்டு வந்து ,இடித்து,பொடியாக்கி, அதனை பானையை உடைத்து அதன் கழுத்துப் பகுதியில், இல்லை இப்பொழுது வெங்கலத்தில் ,முளைப்பாளி இடுவதற்கென வந்துள்ள பாத்திரத்திலோ இட்டு முளைப்பாளியை வளர்ப்பார்கள். தனித்தனியாக வீடுகளில் வளர்க்காமல் நான்கு ,ஐந்து பேர்கள் இணைந்து ஒரு வீட்டில் போடுவார்கள்.முளைப்பாளி இடும் வீட்டினைத் தினமும் மிகத் தூய்மையாகப் பேணுவார்கள்.முளைப்பாளி நன்றாக வளர வேண்டும் என்பது அனைவருடைய வேண்டுதலாக இருக்கும். காரணம் யாருடைய முளைப்பாளியாவது சரியாக வளரவில்லை என்றால்,அந்த ஆண்டு ,முளைப்பாளி சரியாக வளராதவர்களுடைய வீட்டில் ஏதேனும் கெட்டது நடக்கும் என்பது நம்பிக்கை.அது உண்மையும் கூட,எங்கள் வீட்டில் 1999 இல் திருவிழா நடந்தபோது போட்ட முளைப்பாளி அழுகிவிட்டது, ஏதோ நடக்க போகிறது என்றார்கள்,அதுபோலவே என் தந்தை 2000 இல் இயற்கை எய்திவிட்டார். அதிலிருந்து அதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு.

விழா அறிவிக்கப் பட்ட ஏழாம் நாள் கழித்து மூன்று நாள்கள் விழா நடைபெறும் .முதலா நாள் கொழுக்கட்டை திருவிழா.அன்று வெளியூரில் இருக்க கூடிய சொந்த பந்தங்களுக்கு கொழிக்கட்டை சுட்டுக் கொண்டு கொடுத்து விட்டு விழாவிற்கு அழைப்பது வழக்கம். காலையில் இருந்து மாலை வரை ஒரே கொழுக்கட்டை மயமாக இருக்கும். மாலையில் முளைப்பாளி போட்ட வீட்டிலிருந்து அவரவர் வீடுகளுக்கு எடுத்து வந்து, அதற்கு சாமிகும்பிடுவார்கள்.

இரண்டாம் நாள் முமையாக மீன்.எங்கு பார்த்தாலும் மீன் விற்பனை, எல்லார் வீட்டிலும் மீன் குழம்பு மீன் வறுவலாக இருக்கும்.மாலையில் முளைப்பாளியினை அலங்கரித்துக்கொண்டு, அனைவரும் ஒரே இடத்தில் குழுமி,திரௌபதி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள குளத்தில் கொட்டி விட்டு வருவார்கள். அன்று இரவு முமுதும் 21 காய்கறிகள் ,மீன் குழம்பு கருவாட்டு குழம்பு,மீன் கருவாடு வறுவல் சமையல் நடக்கும்.
மூன்றாம் நாள் தேர் திருவிழா.தேரில் வாரையினைக் கட்டி முன்பு தூக்கிச் செல்வது வழக்கம்,அதனைப் பார்க்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் இப்போது உள்ளவர்களால் தூக்கமுடியாமல் ,சக்கரத்தின் மீது தேரினை வைத்து இழுத்துச் செல்லுகின்றார்கள். அப்போது உடல் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். இன்று இளைஞர்களிடம் உடல் வலிமை எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாகவுள்ளது.

செல்லியம்மன் திருவிழா எப்படி நடக்கத் தொடங்கியது என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். நான் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தேன் என்றுதான் பெயர் . வீட்டை விட்டு எதற்கும் வெளியில் செல்வது கிடையாது.தேர்வீட்டு முன்பு வரும்போது வணங்குவதுடன் சரி.இப்போது அதனைப் பற்றி அறியவேண்டும் என்ற ஆவலில் கோயிலுக்குச் சென்றேன்.அங்கு உள்ள பெரியவர்கள் இக் கதையைக் கூறினார்கள். அந்த கோயில் ஊரின் எல்லையில் வயலுக்குள் இருக்கும்.

முன்பு ஒக்கநாடு மேலையூர்,ஒக்கநாடு கீழையூர் என்ற பிரிவு இல்லாமல் இருந்து என்றும், இரண்டு ஊராக பிரிந்தவுடன் இரண்டு ஊருக்கும் உள்ள பொருள் நிலம் அனைத்தையும் பங்கிட்டுக் கொள்ளும் போது,ஒக்கநாடு கீழையூரில் வணங்குவதற்கு உரிய தெய்வத்தைப் பிரித்துக் கொடுத்து இருக்கின்றார்கள்.பிரித்து கொடுத்த தெய்வத்தை அங்கிருந்து ,அந்த ஊரில் பிறந்த பெண்தான் எடுத்து வரவேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது,அப்படி அந்த பெண் எடுத்து வரும்போது,இப்பொழுது கோயில் உள்ள அந்த இடத்தில் இருந்து,அம்மன் வரமறுத்ததாம், அதனால் அந்த இடத்திலேயே கோயில் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.

செல்லியம்மன் உள்ள அந்த கோயில்லுக்கு இரவு சமைத்த உணவினை ஊரில் உள்ள அனைவரும் கொண்டு வந்து அங்கு வைத்துக் கும்பிடுவார்கள்,வரமுடியாத சிலர் வீட்டில் வைத்தும் கும்பிடுவதும் உண்டு.இதனை சுள்ளுஞ்சோறு படைத்தல் என்று கூறுவார்கள்.
அது முடிந்தவுடன் மதுகாட்டல் என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.மதுகாட்டல் என்றால் ,அந்த ஊரில் உள்ள தலித் இன மக்கள் திருவிழா அறிவிக்கப்பட்ட நாள் முதல் நவதானியங்களை ஒன்று சேர்த்து ,ஒரு புதுப் பானையில் ஊர வைப்பார்களாம் ,அது ஒரு வாரத்திற்கு நன்கு ஊறுவதால் ,அதிலிருந்து ஒருவகையான மது உற்பத்தி ஆகுமாம்.அதனை அந்த ஆண்டு தேர்ந்தெட்டுக்கப் பட்ட குடும்பம் தான் செய்யும்.திருவிழா அன்று அந்த மதுவினை வடித்து இரண்டு புதுப் பானைகளில் ,அந்த இனத்தை சார்ந்த பெண்கள் எடுத்து வருவார்கள்.அவர்கள் எப்படி எடுத்து வருவார்கள் என்றால் இடுப்புக்கு மேல் எவ்வித துணியும் அணியாமல் பூவினை அணிந்து மட்டும்கொண்டும், சிலர் வேண்டுதல் காரணமாக பெண்கள் தங்களுடைய தாலிகளை எல்லாம் கழற்றி இவர்கள் கழுத்தில் அணிந்து கொண்டும் வருவார்கள் . தாலியினை கழற்றி அவர்கள் கழுத்தில் அணிவிப்பதால்அம்மனிடம் வேண்டிய வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கை.

இரு பெண்களும் மது உள்ள அந்த கலசத்தை தாரை,தப்பட்டைகள் அதிர எடுத்து வருகிறார்கள்.அவர்களுடன் புதுப்பானையில் கரண்டிபடாமல் சமைத்த உணவு,காய்கறிகள், ஆட்டுக்கறி போன்றவற்றையும் எடுத்து வருகின்றார்கள். எடுத்து வந்து அந்த கோயிலை ஒருமுறை வலம் வந்த பிறகு, அந்த பெண்களை தலையில் இருந்து அந்த கலசம் இறக்கப்பட்டு,அம்மனுக்குப் படையல் இடப்படுகின்றது. அம்மனை அவ்வூர்கார்ர்கள் தூக்கிக் கொண்டு நிற்க,இவர்கள் படையல் இடுகின்றார்கள்.படையல் இடும் போது வாயினைத் துணியைக் கொண்டு கட்டிக்கொண்டும், உணவுகளை கையினாலேயே எடுத்து வைக்கின்றார்கள்.

சாமி கும்பிட்ட பிறகு,தாளம் சொல்லுதல் என்ற ஒரு நிகழ்ச்சி உள்ளது, அவர்கள் ஒவ்வொரு கரை என்று கூறுகிறார்கள் அந்த ஒவ்வொரு கரைக்கும் ஒருவராக வரிசையாக நின்று கொண்டு , தப்போசைக்கு ஏற்ப ,அம்மனின் பெருமையைப் பாட்டாக பாடுகின்றார்கள். இந்த பாட்டில் இதனைப் பற்றிய நிகழ்ச்சி காஞ்சிபுத்திலும் ,திருவாரூரிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். எனக்கு சரியாக புரியவில்லை ஆராயப்படவேண்டிய ஒன்று.
தாளம் சொல்லுதல் முடிந்தவுடன்,அங்கு படைக்கப்பட்ட மதுவினை அவர்கள் அனைவரும் குடிக்கின்றார்கள்,அது அந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே குடிக்க வேண்டுமாம்,பெண்களும் அதனைப் பருகின்றார்கள்.

இதன் பிறகு அம்மன் தேரில் ஏற்றபட்டடு,ஒவ்வொரு தெருவாக கொண்டு செல்வார்கள்.நல்ல பெரிய தேராக இருக்கும். இங்கு என்ன சிறப்பு என்றால் புதிதாக வெட்டி மரத்தில் இருந்த உடனே இந்த தேர் செய்யப்படுவது.நல்ல உயரமாக இருக்கும். தேரில் அம்மன் ஏற்றப்பட்டு தெருவுக்குள் நுழையும் போது,பல ஆடுகள் பலியிடப்படும்.முதலில் எங்கள் தெருவுக்குத்தான் வரும். எங்கள் தெருவுக்கு மட்டும் ஒரு பழக்கம் தேர் வந்து சென்ற பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பது. தேர்வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டாலும் காத்திருந்துதான் சாப்பிடவேண்டும். ஒரு முறை தேர் எங்கள் தெருவின் பாதியிலேயே நின்று விட்டது அப்போது சாப்பிடாமலேயே இருந்தோம் தேர் சென்ற பிறகு மாலைதான் சாப்பிட்டோம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *