சைவசமயம் என்பது எப்பொழுது தொடங்கியது என்பதனை அறுதியிட்டுக் கூறமுடியாது.சைவ வழிபாடு என்பது தொன்மை காலத்தில் இருந்துள்ளது என்பதை, அகழாய்வின் மூலம் நிறுவியுள்ளனர். சிவலிங்க உருவ வழிபாடும் இருந்துள்ளமையையும் கல்வெட்டுகளில் காண்டெடுத்த சிற்பங்களின் வாயிலாக அறியமுடிகின்றது.
தொன்மை வாய்ந்த சிவ வழிபாடு பற்றிய குறிப்பு , நம் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் காணப்படவில்லை என்றாலும்,சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு சில குறிப்புக்கள் காணப்பெறுகின்றன. தொல்காப்பியம் நானிலத்துக்குரிய தெய்வத்தை மட்டும் கூறுகிறது,சிவபெருமானைத் தனித்துக் கூறாததற்குக் காரணம், எல்லா நிலத்துக்கும் பொது வழிபாட்டுத் தெய்வமாக சிவபெருமான் இருந்துள்ளது என்றும் கூறுவர்.
சங்க இலக்கியத்தில் பயின்று வரக்கூடிய தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே (புறம்) ஈர்ஞ்சடை அந்தணன்,ஆலமர் செல்வன் (கலித்தொகை) முக்கண்ணன் (கலித்தொகை) கறைமிடற்று அண்ணல் ,முதுமுதல்வன்,ஆலமர் கடவுள்(புறம்) மணிமிடற்று அண்ணல் (பரிபாடல்) நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் (ஐங்குறு நூறு) போன்ற சொல்லாட்சிகள் சிவனைக் குறிப்பதால்,சிவ வழிபாடு சங்க காலம் தொட்டு இருந்துள்ளது என்பதை அறியலாம்.
சைவ சமய வழிபாடு சங்கம் மருவிய காலத்தில் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது,சமணம் பௌத்தம் போன்ற சமயங்கள் மக்களிடையே புகுந்தன.அப்பொழுது தோன்றிய இலக்கியங்களும்,இச் சமயங்களை மையமிட்டு ,பரப்பும் நோக்கில் எழுந்து எனலாம். இல்லை அக் காலத்தில் மக்களிடையே இருந்த சமயத்தை வெளிப்படுத்தியது என்றும் கூறலாம். சைவம் மீண்டும் தழைக்குமா என்னும் நிலை இருந்து.
சமணம் ,பௌத்தம் போன்ற சமயங்களின் நெறிகள் மக்களை அவ்வளவாக பின்பற்ற முடியாததாகவும் இருந்து. இப்படி பிற சமயங்களால் கட்டுண்டு கிடந்த மாந்த இனத்தை உய்விக்க ‘சைவப் புண்ணியக் கண்கள்’ எனச் சேக்கிழார் பெருமானால் பாராட்டப்பெற்ற திருநாவுகரசரும் , திருஞானசம்பந்தரும் தமிழகத்தில் அவதரித்தனர்.
இவர்கள் இருவரும் தமிழையும்,சைவசமயத்தையும் இரு கண்களாகப் போற்றி வளர்த்தனர். இவர்களின் சைவநெறிப்படுத்தலின் விளைவாக ,திங்களை மறைத்த மேகமூட்டம் விலகுவது போல மக்களிடையே எற்பட்டிருந்த அறியாமை இருள் அகன்று, சைவத்தைப்பற்றிய விழிப்புணர்வும் ,தெளிவும் ஏற்பட்டது. இந்த காலத்தை (கி.பி.600 முதல் கி.பி 1200 ) சைவசமயத்தின் பொற்காலம் என்று கூறலாம்.
இவர்களுக்குப் பிறகு சைவசமய அடியார்கள் ஒவ்வொருவராகத் தோன்றி சைவசமயத்திற்குப் பல்வேறு ஆக்கங்களைச் செய்துள்ளனர்.இவர்கள் 63 நாயன்மார்கள் என வரையறைப்படுத்தப்பட்டுள்ளது.
சைவசமயத்தின் பெருமையையும்,சிவனின் சிறப்பினையும் கூறும் நூல்கள் 27 அடியாளர்கள் அருளிய பன்னிரு திருமுறை என்னும் நூலாகும். இந்நூல் தோத்திர நூல்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இவற்றின் பிழிவாக பிற்காலத்தில் வடித்தெடுக்கப்பட்ட நூல்கள் சாத்திர நூல்கள் எனப்படும்.
தோத்திர நூல் என்பது இலக்கிய நூல் என்றும் ,சாத்திர நூல் என்பது இலக்கண நூல் என்றும் கூறலாம். எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியம் இருந்தால் தானே இலக்கணம் படைக்க முடியும்.ஆகையால் பன்னிரு திருமுறைகளின் இலக்கண நூலே பதினான்கு சாத்திர நூல்கள் எனலாம்.
0 Comments