தாம்பூலம் தரித்தல்…..

May 13, 2009 | Uncategorized | 0 comments

தமிழர்களுடைய பழக்க வழக்கங்களில் ஒன்று தாம்பூலம் தரித்துக்கொள்ளுதல். தாம்பூலம் தரித்தல் என்றால் வெற்றிலைப் போடுவதாகும்.என்னென்ன பொறுள்களைக் கலந்து தாம்பூலம் தரிக்கவேண்டும் என்பதும் உண்டு.வெற்றிலையுடன் பச்சைக் கற்பூரம்,ஜாதிக்காய் ,வால் மிளகு,காராம்பு,கத்தக்காம்பு,சுண்ணாம்பு,பாக்கு ஆகிவற்றைச் சேர்த்து போடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது.

தாம்பூலம் தரிப்பதால் என்ன பயன் என்றால், வாய்க்கு நறுமணம் ஏற்படுகிறது.முகத்திற்கு அழகையும் ஒளியையும் உண்டாக்குகிறது . தாடை ,பல்,நாக்கு இவற்றின் அசுத்தங்களைப் போக்குகிறது.வாயில் மிகுதியாக உமிழ் நீர் சுரப்பதைத் தடுக்கின்றது.கலவியில் விருப்பத்தை ஏற்படுத்துகிறது.துவர்ப்பு ,கார்ப்பு,கசப்பு,உவர்ப்பு சுவைகள் ஒருங்கே இருப்பதால் எளிதில் உண்ட உணவு செரிக்கின்றது.இதயத்திற்கு நலம் பயக்கின்றது.தொண்டை நோய்களைப் போக்குகின்றது.

தாம்பூலத்தை எப்பொழுது போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் வரையறுத்துற்றனர் நம் முன்னோர்.தூங்கி எழுந்தவுடன்,உணவு உண்ட பின்,குளித்த பிறகு தாம்பூலம் தரித்துக்கொள்ளலாம்.அதே போல காலை நேரத்தில் தாம்பூலம் போடும்போது பாக்கைச் சிறிது கூடுதலாகவும்,மதியநேரத்தில் போடும்போது கத்தைக்காம்பைச் சிறிது கூடுதலாகவும்,இரவு நேரத்தில் சுண்ணாம்பு சிறிது கூடுதலாகவும் சேர்த்துப் போடவேண்டும்.

அதைபோலவே வெற்றிலைப் போட்டு முதலில் வருகின்ற உமிழ்நீரை உட்கொள்ளக் கூடாது,அது நஞ்சிக்கு ஒப்பானது,இரண்டாவது வரக்கூடிய உமிழ்நீரும் நல்லதல்ல ,மூன்றாவதாக வரக்கூடிய உமிழ்நீரையும் அதன் பிறகு உள்ளதையும் உட்கொள்ளவேண்டும்.இது அமுதத்திற்கு ஒப்பானது என்று கூறப்படுகின்றது.

மென்று முடித்தவுடன் அதன் சக்கையை உட்கொள்ள கூடாது .காரணம் வறச்சியை உண்டாக்கும்,பசியை அணைத்துவிடும்,ஆண்மையைக் குறைத்துவிடும்.நீரழிவு நோயை உண்டுபண்ணும்.

பால் குடித்தவுடன் தாம்பூலத்தைப் போடக்கூடாது.அதன் சுவை நீங்கிய பிறகே போடவேண்டும். காரணம் உடலுக்கு நீரழிவு,நீர் சுருக்கு,தோல் நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் இல்லையா ,அதுபோலவே தாம்பூலத்தையும் மிகுதியாக தரிக்ககூடாது.அளவோடு போடவேண்டும்.அப்படி அளவுக்கு அதிகமானால், கண்,கூந்தல்,பல்,பசித்தீ,காது இவற்றின் வலிமையைக் குறைத்தவிடும். வெற்றிலை போடும் போது,கவனமாக காம்பு ,நுனி,நடுப்பகுதியில் உள்ள நரம்பு ஆகியவற்றை நீக்கிவிட்டு போட்டுக்கொள்ள வேண்டும்.இவை உடம்புக்க கேடுவிளைவிக்க கூடியது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *