தூய வெள்ளாடை,அமைதி தவழும் முகம்,கனிவான பேச்சு, அகத்தில் அறிவு முதிர்ச்சி,புறத்தில் இளமை,தமிழைத் தவிர வேறு நினையாத மனம்,அவரிடம் பயிலும் பயின்ற மாணவர்கள் மட்டுமல்ல யாவரும் விரும்பும் தமிழ்பேரறிஞராய் ந.மு.வேங்கடசாமி கல்லூரியில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் பேராசிரியர் இரா.கலியமூர்த்தி.
கடந்த மூன்றாண்டுகளாக அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன்.ஓர் ஆசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டுமென இவர்களைப் பார்த்தப் பிறகு தெளிந்தேன். மாணவர்களிடம் இவர் காட்டும் அக்கறை சொல்ல வார்த்தைகள் இல்லை.இவரிடம் மாணவர்கள் பழகும் முறையே அதற்குச் சான்றாகும்.
இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் பல இலக்கியங்களைக் கற்ற மகிழ்ச்சித் தோன்றும்.
சங்க இலக்கியம்,பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம்,திரைப்படப் பாடல்கள் அனைத்திலும் ஆழ்ந்த தோய்வின் காரணமாக ஒரு செய்திக்கு அது தொடர்பான இலக்கியம் முதல் திரைப்படப்பாடல் வரை எடுத்துக்காட்டுவார்கள்.
இவருடைய தமிழ் ஈடுபாட்டின் காரணமாக தமிழ்ப்பேராசான் ,ஔவை,வாண்டையார் விருது,மாமன்னன் இராசராசன் விருது, குறள் செம்மல், போன்ற விருதுகளைப் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி சிறப்பித்துள்ளது.ஐந்தாம் ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரிசு, சித்பவானந்தா கழகப் பரிசு,திருநெல்வேலி ,சைவசித்தாந்தகழகப் பரிசு,ந.மு.வே.நாட்டார் நினைவுத் தங்கபதக்கம் போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்கள்.
1938 இல் இராவுசாப்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த திருமிகு க.இராசு திருமதி இரா.துளசியம்மாள் இணையருக்கு மகவாய் தோன்றினார்.1964 இல் க.இராசேசுவரி அம்மையாரை வாழ்க்கைத் துணைநலமாக பெற்றார்.
இவர் தொடக்கப்பள்ளி இராவுசாப்பட்டியிலும் ,உயர்நிலைப்பள்ளி வல்லத்திலும், வித்திவான் படிப்பு கரந்தைப் புலவர் கல்லூரியிலும்,தமிழாசிரியர் பயிற்சி அண்ணாமலையிலும்,பி.லிட் ,எம்,ஏ.,சென்னைப் பல்கலைக்கழகத்திலும்,பி.எட்.,எம்,எட் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்,எம்.பில்.,பிஎச்.டி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.இவர் வித்துவான், எம்,ஏ.,முதலியவற்றில் முதல் வகுப்பில் முதல் தகுதியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பிய உவமையியல் ஓர் ஆய்வு ,தொல்காப்பியப் பொருளதிகார உரை வேறுபாடு அகத்திணையியல்-புறத்திணையியல் ஓர் ஆய்வு என்னும் தலைப்புகளில் ஆய்வு செய்துள்ளார்கள்.
1959 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி 1997 ஆம் ஆண்டு வரைப் பணிப்புரிந்து,ஓய்விற்குப் பிறகு ந.மு.வே.நாட்டார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிகின்றார்கள்.
0 Comments