தமிழ்மண்

Mar 10, 2009 | Uncategorized | 0 comments

பதிப்புத் துறையில் கால் பதித்து வெற்றி கண்டோர் பலர். ஆனால் தமிழ் உணர்வோடு ,மொழிப் பற்றோடு பதிப்புத்துறையில் ஈடுபட்டவர்கள் மிகக் குறைவே. தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் அவர்கள் தமது மொழி உணர்வாலும்,இன உணர்வாலும் ஈக்கப்பட்டு,தமிழுக்குத் தொண்டு செய்யும் நோக்குடன் பல அரிய பணிகளைச் செய்து வருகிறார்கள்.
நம் தமிழ் மண்ணின் பெருமையை,மொழியின் திண்மையா,இலக்கியச் செறிவினை, வெளிகொணர்ந்து ஆவணப்படுத்தும் எண்ணத்தில் தமிழில் எழுந்த நூல்களையெல்லாம் திரட்டி தொகுப்பு நூலாக்கி தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கிவருகிறார்.
தஞ்சை மண் ஊருக்குப் படியளந்து,உறவுக்குக் கை கொடுத்த மண் மட்டுமல்ல.தமிழ் வளர்த்த மண்.எத்தனையோ தமிழறிஞர்களை உருவாக்கிய மண்,பல கலைகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிய மண்.இப்பெருமை மிகு தஞ்சை பகுதியில் தோன்றியவர் கோ.இளவழகனார்.03.07.1948 ஆம் ஆண்டு உரத்தநாடு வட்டம்,உறந்தையராயன் குடிக்காடு என்னும் ஊரில் திருமிகு அ.கோவிந்தசாமி,திருமதி அமிர்தம் அம்மையார் இணையருக்கு மகவாய் தோன்றினார்.
1965 இல் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் இருந்தே மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டு ,மொழிப்போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று 48 நாள்கள் சிறையில் இருந்துள்ளார்கள்.
பிறந்த ஊரான உறந்தையராயன் குடிக்காட்டில் ஊர்நல வளர்ச்சிக் கழகம் என்னும் சமூக அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு,பல்வேறு ஊர்நலப் பணிகளை ஆற்றியவர்கள்.உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி ,தமிழ்மொழி,தமிழின மேம்பாட்டிற்கு உழைத்தவர்.பாவாணர் மீது கொண்ட பற்றினால் பாவாணர் படிப்பகம் நிறுவி இளம் தலைமுறையினருக்குத்தமிழார்வத்தை ஊட்டினார்.
அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை உள்ளத்துள் ஏந்தி,உரத்தநாட்டின் மதுவிலக்கு குழுவின் முக்கிய அமைப்பாளராக இருந்து செயலாற்றியுள்ளார்.1975 இல் ,தமிழ்நாடு சட்ட மன்றத்தில் உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றிப்பெற உழைத்தவர்.
சிறு வயது முதற்கொண்டே இனம் உணர்வும் மொழி உணர்வும் கொண்டு திகழ்ந்ததால், இவர் தாம் எடுத்துக் கொண்ட பதிப்புத் துறையையும் அதை சார்த்தே அமைத்துக்கொண்டுள்ளார்.
இப்பதிப்பகத்தின் வழி பல்வேறு அரிய நூல்கள் முழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
1.தமிழிசை அறிஞர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரம்
2.மொழிஞாயிறு தேவநேயப் பாவணாரின் அனைத்து நூல்கள்
3.பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரின் 40 க்கு மேற்பட்ட நூல்கள்
4.தொலாகாப்பிய பழைய உரை தொகுப்பு
5.ந.சி.கந்தையாபிள்ளையின் அனைத்து நூல்கள்
6.யாழ்பாண அகராதி
7. வரலாற்றறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் நூல்கள்
8.சாத்தன்குளம் அ.இராகவன் நூல்கள்
9.நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள்
10.திரு.வி.க. நூல்கள்
11.சதாசிவ பண்டாரத்தார் நூல்கள்
12.பண்டித வித்துவான் தி.வே.கோபாலய்யரின் தமிழ் இலக்கணப் பேரகராதி
13.40,000 பழமொழிகள் தொகுப்பு
14.வாழும்தமிழறிஞர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நூல்கள்
15.பழைய உரைகளைத் தொகுத்து வெளியிட்ட செவ்வியல் கரூவூலம்.
இப்படி பல்வேறு அரிய நூல்களைத் திரட்டி தமிழுலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுப்பாக் கொடுத்துக்கொண்டுள்ளார்கள். மேலும் பல நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் அரிய முயற்சியினைப் பாராட்டுவதோடு,அந்நூல்களை வாங்கியும் பயன்பெறுவோம்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *