உன்னநிலை

Mar 9, 2009 | Uncategorized | 0 comments

சங்க கால மக்களிடத்துப் பல நம்பிக்கைகள் இருந்துள்ளதை சங்க பாடல்களின் வழி அறியமுடிகிறது. அவற்றுள் ஒன்று நிமித்தம் காணுதல்.அதாவது ஒரு நல்ல செயலைச் செய்ய செல்லும் முன் நிமித்தம் காணுதல்.நிமித்தம் என்பதற்கு அறிவிப்பது என்பது பொருள். அது நன்மை தீமை இரண்டினையும் சுட்டும்.இதனை தொல்காப்பியம் ஓம்படை எனக் கூறும்.
அச்சமும் உவகையும் எச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலம் கண்ணிய ஓம்படை.
இந் நிமித்தங்களுள் உன்ன மரத்தின் முலமாக காணும் நிமித்தம் உன்ன நிமித்தம் எனப்படும். உன்னம் என்பது ஒருவகை மரம் .இதனை இலந்தை மரம் என்றும் கூறுவர்.இதனுடைய இலை சிறிதாகவும் பூ பொன்னிரமாகவும் புல்லிய அடியை உடைதாகவும் இருக்கும்.உன்னநிலைப் பற்றி தொல்காப்பியம் ஓடா உடல் வேந்தன் அடுக்கிய உன்னநிலை எனக் குறிப்பிடுகிறது.
இதற்குப் புறங்கொடத சினமுடைய வேந்தனை,உன்னமரத்தொடு சார்த்தி வெற்றி தோல்விகளை அறிவதற்குக் காரணமானது உன்னமரம் என்பது பொருள்.
புறப்பொருள் வெண்பாமால் இதன் இலக்கணத்தைத்,
துன்னரும் சிறப்பின் தொடுகழல் மன்னனை
இன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று
என்று இயம்பும்.
சங்க இலக்கியத்தில் உன்னநிலை பற்றிய செய்திகள் பதிற்றுப் பத்தில் மட்டுமே ஈரிடங்களில் காணப்பெறுகின்றன.களங்காய் கண்ணி நார்முடிச்சேரலுடன் போர் செய்ய கருதிய பகைவர்,நிமித்தம் பார்த்தபோது,உன்னமரம் கரிந்து காட்டி அவருக்குத் தோல்வியை உணர்த்தியது.
செல்வக் கடுங்கோ வாழியாதன் அந்நிமித்தம் பார்த்தபோது,மரம் கரிந்து காட்டியது. அவ்வாறு கரிந்து காணப்பட்டால் அது தோல்வியைக் குறிக்கும். ஆனாலும் அம் மன்னன் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ,அந்நிமித்தத்தை புறக்கணித்துப் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடினான்.அக்காரணத்தாலேயே அவனுக்கு உன்னத்துப் பகைவன் எனப் பெயர் வழங்கலாயிற்று.
இது போன்றே மன்னன் நலங்கிள்ளி பறவை காட்டிய தீ நிமித்தத்தை கடந்து போரில் சென்று வென்றமையின் அவனைப் புட்பகைவன் என அழைத்தனர்.
இவற்றைப் காணும் போது நிமித்தமு பார்பதை விட எண்ணியார் திண்ணிய நெஞ்சம் உடையராய் இருந்தால் எச்செயலையும் செவ்வனே முடிக்கலாம் என அறியலாம்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *