முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

Mar 1, 2009 | Uncategorized | 0 comments

நுங்கள் பாரியைப் பார்த்தேன் முற்றும் சரிதான்.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற் பிறப்பு அமைப்பீர்கள் எனத் தேவநேயப்பாவணரால் பாரி என்னும் ஆய்வுக் கட்டுரைக்காகப் பாராட்டப் பெற்று ,அண்மையில் திருச்சி பாவேந்தர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ. அவர்களால் மதிப்புறு முது முனைவர்ப் பட்டமும்,மதுரைப் பல்கலைக் கழகத்தால் செந்தமிழ் காவலர் என்ற பட்டமும் வழங்கப் பெற்று ,தேவநேய பாவணர் வழி நின்று நீடு தோறும் இனியராய் தனித்தமிழ் காவலராய் வாழ்பவர் புலவர் இரா.இளங்குமரனார். 80 வயதை கடந்த நிலையிலும் ஒய்வு இல்லாமல் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாக விளங்குகின்றார்.
400 மேற்பட்ட நூல்களை தமிழுலக்கு வழங்கி சிறப்புச் செய்துள்ள பெருமகனாரின் பெருமையையும் நுண்ணிய அறிவு நுட்டபத்தையும் இனங்கண்டு கொண்ட பாரதிதாசன் பல்கலைகழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னம்வைக்கோ அவர்கள் செம்மொழி அந்தணர் இளங்குமரனாரை கலைச்சொல்லாய்விற்கும் சொல்லாய்விற்கும் பயன்படித்திக் கொள்ள இசைந்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தின் வடக்கு எல்லையும்,முகவை மாவட்டத்தின் தெற்கு எல்லையும் சந்திக்கக் கூடிய இடத்தில் உள்ள வாழவந்தாள்புரம் என்னும் ஊரில் ஐயள் வாழவந்தாள்,ஐயன் இராமு என்னும் இணையருக்கு மகவாய் 30-1-1930-இல் பிறந்தார். சிறுவயது முதற்கொண்டே எண்ணிய செயலை முடிப்பவராய் நல்லனவே எண்ணுபவராய் திண்ணிய நெஞ்சராய் தெளிந்த நல்லறிவினராய் வாழ்ந்து வரும் பண்பாளர்.
மருத்துவப் பணி உடல்நலப்பணி.ஆசிரியப் பணி உளநலப் பணி.ஆதலால்,ஒன்றற்கு ஒன்று குறையாதது.உயிரோடு விளையாடும் செயலாற்றும் செயற்படுத்தும் உயிர்கலைகள் என்பதை உணர்ந்து 8-4-1946 ஆம் முதல் ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்புற பணியாற்றியதால் நல்லாசிரியர் விருது 26.07.1978 ஆம் ஆண்டு அவரைத் தேடி வந்தது. அதன் தொடர்ச்சியாக,
சைவசித்தாந்த கழகத்தின் வழி பல்வேறு அரிய நூல்களை ஆக்கியும் புதுக்கியும் வெளியிட்டு அப்பதிப்பகத்திற்குப் உறுதுணையாக இருந்ததால் 4-1-1978 ஆம் ஆண்டு மறைமலையடிகள் நூலக இருபதாம் ஆண்டு நிறைவு விழாவில்கழகச் இலக்கியச் செம்மல் என்னும் விருதினை வழங்கி பாராட்டியது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.16-12-1978 இல் பாண்டித் துரையார் பைந்தமிழ் பேரவை இலக்கியச் செம்மல் என்னும் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.11-6-88 இல் திண்டிக்கல் சின்னாளப்பட்டி சன்மார்க்க சபையினர் வள்ளுவர் வள்ளலார் தமிழ்ச்சித்தர் ஆய்வினைப் பாராட்டி இலக்கியச் செம்மல் என்னும் விருதினை வழங்கியது.13.08.1991 இல் தமிழ்க்கடல் என்னும் விருதும்,01.09.1994 இல் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திரு.வி.க.விருதும்,15.1.1995 இல் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தால் திருக்குறள் செம்மல் என்னும் விருதும்,28.11.1996 இல் திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் சார்பில் மீனாட்சி சுந்தரனார் விருதும்,திருச்சிராப்பள்ளி திருக்குறள் பேரவையின் சார்பாக

21.1.1995 இல் குறள் ஞாயிறு விருதும்,மதுரை புரச்சிக் கவிஞர் மன்றம் சார்பில் 21.06.97 இல் பெரியார் விருதும்,1.2.1999 இல் தென்னிலை விருதும்,தஞ்சையில் நிகழ்ந்த தமிழகப் பெருவிழாவில் 25.4.1999 இல் மொழிப்போர் மறவர் என்னும் விருதும்,4.5.1999 இல் திருக்கோவிலூர் கபிலர் விழாவில் கபிலவாணர் விருதும்,
14.5.2000 இல் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை சார்பில் திருக்குறள் விருதும்,சென்னை கம்பன் கழகம் 8.8.2000 இல் கம்பர் விருதும், 1,2.11.2001 இல் நாமக்கல்லில் நடைப்பெற்ற தமிழகப் பெருவிழாவில் தமிழ்ச் சான்றோர் விருதும்,பன்னாட்டு தமிழுறவு மன்றம் மதுதைக் கிளையின் சார்பில் 5.5.2002 இல் திருக்குறள் சான்றோர் விருதும், பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் எழுபானெ ஆண்டு விழாவில்
27.6.2003 இல் தமிழியக்கச் செமெமல் என்ற விருதும், புதுவை பண்டுவார் மகிழ்கோ அவர்களால் பண்டுவர் என்ற விருதும்,திருவாடுதுறைத் திருமடம் 8.3.2004 இல் திருக்குறள் செம்மல் என்ற விருதும்,21.7.2002 இல் உலகப் பெருந்தமிழர் என்னும் விருதும் ,பெற்ற பெருமைக்குரியவர் பெருமகனார் முதுமுனைவர் இரா. இளங்குமரனார்.

இப்பெருமகனாருடன் பழகும் வாய்ப்பினைக் கடந்த நான்காண்டுக்கு முன் பெற்றேன்.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல் என்னும் வள்ளுவ மொழிக்கேற்ப அவரை சிக்கெனப் பிடித்துள்ளேன் .அவர்களுடன் பழகி நாள்முதல் நான் அறிந்தவரை ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கும் பெருமகனார் .ஈத்துவக்கும் இன்பமுடையராய் திருச்சிக்கருகே அல்லூர் என்னும் ஊரில் தவச்சாலை நிறுவி ஆயிரக்கணக்கான நூல்கள் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் சிறந்த நூலகத்தை அமைத்து தமிழுலகுக்கு அறிவு ஈகையராய்த் திகழ்கின்றார்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *