குமரகுருபரின்-மீனாட்சியம்மை குறம்

Jan 11, 2009 | Uncategorized | 0 comments

தென்பாண்டியில் உள்ள தென்கைலாயத் தலத்தில்,வேளாளர் குலத்தில் திருவாளர் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும்,திருவாட்டி சிவகாமியம்மையாருக்கும் மகவாய் தோன்றியவர் குமரகுருபர்.ஐந்து வயதுவரை ஊமையாக இருந்து,முருகன் அருளால் பேசும் திறனைப் பெற்ற குமரகுருபர்,முருகன் மேல் முதன்முதலில்’கந்தர் கலிவெண்பா’ என்ற நூலை அருளினார்.அதன் பிறகு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துசுவாமி பிள்ளைத்தமிழ்,மதுரைக்கலம்பகம்,நீதிநெறி விளக்கம்,மதுரை மீனாட்சியம்மை குறம் போன்ற பல புகழ் பெற்ற இலக்கிய வகைகளைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் மதுரை மீனாட்சியம்மை குறம் 51 பாடல்களைக் கொண்டு,இலக்கிய நயத்துடனும்,பக்தி செறிவாயும் இலங்குகின்றது. இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

குறம்-குறவஞ்சி
.தொன்மையில் வழங்கிவந்த குறி சொல்லும் வழக்கமே பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக எழுந்தது என்றும், சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக இருந்த குறம்,பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக மலர்ந்தது என்றும் கூறுவர்.ஒரு குறத்தி குறி கூறுவதாக அமையும் பிரபந்தம் குறமென்றும் வழங்கும் என்பர் உ.வே.சா.குறத்தி ஒருத்தியின் கூற்றோடு வேறு பலர் கூற்றுக்களும் உள்ள நூல் குறவஞ்சி எனப்படும் என்பர் மொ.அ.துரை அரங்கசாமி.பொதுவாக தலைவன் உலா வரும்பொழுது அவனைக் கண்ட தலைவி
காதலுற்று,வருந்தும்பொழுது அதனை ஆற்றுவிக்குமாறு குறத்தி தலைவிக்குக் குறி கூறுவதைக் குறம் எனவும்,குறத்திப் பாட்டு எனவும்,குறவஞ்சி எனவும் வழங்கலாம்.
இவ்வாறு பாடப்படும் குறமாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தில் நிகழ்ந்தவற்றை அறிந்து,சிறந்த வகையில் அமைத்துப் பாடுவது எனப் பன்னுருப்பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது.
‘இறப்பு நிகழ்வு எதிர் என்னும்முக் காலமும்
திறம்பட உரைப்பது குறத்திப்பாட்டே’
மீனாட்சியம்மை குறம்-அமைப்பு
மீனாட்சியம்மை குறம் மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட அங்கயற் கண்ணியம்மைக்குக் குறத்தி குறி கூறுவதாக அமைத்துப் பாடப்பெற்றுள்ளது.இக் குறம் விநாயகர் காப்புடன் தொடங்குகின்றது.பிறகு குறத்தி குறி கூறும் முறையறிந்து,அதன் வழி தன்னுடைய நாட்டுவளம்,முன்னோர் சிறப்பு போன்றவற்றைக் கூறி, எண்ணிய எண்ணம் நிறைவேறக்கூடிய நன்னிமித்தம் வாய்த்துள்ளதாக கூறுவதாக அமைந் துள்ளது.இறுதியாக உள்ள இருபது கண்ணிகள் அங்கயற்கண்ணியம்மையைப் போற்றி பரவுவதாக அமைந்துள்ளன.
குறிசொல்ல தொடங்கும் முன்
மீனாட்சியம்மை குறத்தில் குறி சொல்ல தொடங்கும் முன் குறத்தி ,தரையை மெழுகிக் கோலமிட்டு,பிள்ளையார் பிடித்து வைத்து,அதற்கு நிறைகுடம் வைத்து, நிறைநாழியால் நெல்லளந்து வைத்து,விளக்கேற்றி வைத்து,பலவகையான பொருட்களை வைத்து வழிபட்டு,பிறகு அங்கயற்கண்ணியம்மையின் கையைப் பார்த்து குறி கூறத் தொடங்குகின்றாள்.
புழிகாலே தரைமெழுக பிள்ளை யார்வை
பொற்கோலம் இட்டுநிறை நாழி வையாய் (6)
குறத்தி குறி சொல்வதற்காக ஆடையினையும் ஒருகாசினையும் கேட்கின்றாள்.இவ் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.
தூசுமொரு காசும்வைஉள் நேசம் வரவே சொல்லநான்
மற்ற குறவஞ்சிகளில் வரும் குறத்தி பல கடவுள்களையும் மனதில் எண்ணி குறி சொல்ல ,மீனாட்சியம்மை குறத்தில் வரும் குறத்தி அங்கயற்கண்ணமையை மட்டும் மனதுள் உள்ளி குறி கூறத்தொடங்குகின்றாள்.
இயற்கை வளம்
சங்க இலக்கியம் தொட்டு இக்கால இலக்கியம் வரை இயற்கையைப் பாடதா கவிஞர் இல்லை.சங்க மக்கள் இயற்கையைத் தெய்வமாகவே வழிப்பட்டனர்.இவ் இயற்கை இன்பத்தில் தோய்ந்த குமரகுருபரும் தன் மீனாட்சி குறத்தில் மலை வளத்தினைக் குறத்தியின் வாயிலாக எழிலுறச் சித்தரிக்கின்றார்.குறத்தி தான் வாழும் மலையின் உயர்ச்சியினை,
திங்கள்முடி சூடுமலை தென்றலை விளை யாடுமலை
எனப் போற்றுகின்றாள்.மேலும் மலையின் வளத்தினை செந்நெல் முத்தும் கன்னல் முத்தும் ஒளிதிகழ் மதுரை அங்கயற்கண்ணமை பொன்னும் முத்தும் சொரியும் வெள்ளருவி பொதியமலை என்றும் கனக நவமணி விளையும் மலை என்றும் தன் பொதியமலை வளத்தினைக் கூறுகின்றாள்.
பொதியமலையில் வாழக்கூடிய விலங்கினங்கள் எவ்வித பகையுணர்வும் இல்லாமல் இணைந்து இன்புற்று வாழுகின்றன என்பதைப் பதிவு செய்து,அதற்கு அம்மையின் அருளே காரணம் என்கின்றாள் குறத்தி.மலையில் ஒருபால் சிங்கமும் யானையும் இணைந்து விளையாடும்;ஒரு பக்கம் சினப்புலியும் மானும் களித்திருக்கும்;வேறொருபால் வெங்கரடி மரையினோடு விளையாடும்;மற்றொரு புறம் துன்பத்தைத் தரக்கூடிய பாம்பும் மடமயிலும் விருந்தயருகின்றன.
சிங்கமும் வெங்களிறுமுடன் விளையாடும் ஒருபால்;
சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும் அங்கொருபால்;
வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால்;
விடரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்;
அங்கணமர் நிலம்கவிக்கும் வெண்க விகை நிழல்கீழ்
அம்பொன்முடி சூடும்எங்கள் அபிடேக வல்லி
செங்கமலப் பதம்பரவும் கும்பமுனி பயிலும்
தென்பொதிய மலைகாண்மற்று எங்கள்மலை அம்மே! (16)

குறவர்களின் பழக்கவழக்கம்
மீனாட்சியம்மை குறத்தின் மூலமாக,நானில மக்களுள் ஒருவர்களான குறவர்களின் பழக்கவழக்கங்கள் அறியமுடிகின்றது.சங்க இலக்கியங்களிலும் குறவர்கள் பற்றிய செய்தி மிகுதியாக காணப்பெறுகின்றன.குறவர்கள் தேனையும் கிழங்கையும் விற்றுப் பண்ட மாற்றாக,மீன் நெய்யினையும் நறவையும் பெறுவர்.உடும்பிறைச்சியோடு, கடமான் தசை,முள்ளம் பன்றியின் ஊன்,மூங்கி குழாயில் ஊற்றி வைத்த தேனிறல்,நெய்யால் செய்த கள்,புளிப்புச் சுவையுடைய உலையாக ஏற்றி ஆக்கிய மூங்கிலரிசிச் சோறு,பலாவிதையின் மாவு ஆகியவற்றை நல்கி மலைவாழ்நர் விருந்தோம்புவர் என மலைப்படுகடாம் கூறும்.இதே நிலையினை மீனாட்சியம்மை குறத்திலும் காணமுடிகின்றது.குறவர்கள் செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து உணவாக உட்கொள்கின்றனர்.மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும்,பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர்.விருந்தினருக்கு தேனும்,தினையும் வழங்கி விருந்தோம்புகின்றனர்.
கொழுங் கொடியின் விழுந்தவள்ளி கிழங்கு கல்லி எடுப்போம்;
குறிஞ்சிமலர் தெரிந்து முல்லைக் கொடியில் வைத்துது தொடுப்போம்
பழம்பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும் வாய் மடுப்போம்;
பசுய்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம்;
செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம்;
சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம்;
எழுந்து கயற்கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம்
எங்கள்குறக் குடிக்கு அடுத்த இயல்பு இதுகாண் அம்மே! (18)
முன்னோர் குறிச்சிறப்பு
மீனாட்சியம்மை குறத்தில், குறத்தி தன்னுடைய குறியின் சிறப்பைக் கூறத் தொடங்கும் பொழுது,தன் முன்னோர் கூறிய குறி பலித்த திறத்தினை இயம்புகின்றாள். அவளுடைய பாட்டி பூமகள் மாயவன் மார்பில் பொலிவள் என்று சொன்னதும்,தன் பெரிய தாய்,கலைமகள் மலரயனார் திருநாவில் வாழ்வாள் என்று சொன்னதும்,தன் நற்றாய் சுந்தரி இந்திரன் தோள் பெறும் என்றதும் தன் சிறியதாய் சொன்ன குறிக்கு அளவில்லை என்றும் குறிப்பிட்டுப் பின் தன்னுடைய குறிச்சிறப்பைக் கூறத் தொடங்குகின்றாள்.
பொற்றொடிவள் ளிக்குஇளைய பூங்கொடியென் பாட்டி
பூமகள்மா யவன்மார்பில் பொலிவாள்என்று சொன்னாள்
மற்றவள்பெண் களில்எங்கள் பெரியதாய் கலைமான்
மலர்அயனார் திருநாவில் வாழ்வாள்என்று சொன்னாள்
பெற்றெங்கள் நற்றாயும் சுந்தரிஇந் திரனுதோள்
பெறும் என்றாள் பின் எங்கள் சிறியதாய் அம்மே
சொற்குறிக்கு அளவுஉலைஎம் கன்னிமார் அறியச்
சொன்னேன்பொய் அலநாங்கள் சொன்னது சொன்னதுவே

கிளைச் சிறப்பு
முருகனுக்குக் குறக்குல வள்ளியை மணமுடித்தமையின்,முருகனின் தந்தையான சிவபெருமானையும் குறவனாகக் கூறும் இயல்பினைக் குறத்தினில் காணமுடிகின்றது.
வெள்ளி மலைக் குறவன்மகன் பழனிமலைக் குறவன் எங்கள்
வீட்டில் கொண்ட வள்ளிதனக் கேகுறவர் மனலமாட்சி சீதனமா வழங்கினாரால்
இப்பாடலில் சிவனை வெள்ளிமலைக் குறவன் எனச் சுட்டப்படுவதைக் காணலாம்.
குறி கூறுதல் இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம்.இலக்கியங்களின் வழி அவற்றை அறியும் பொழுது அன்று அவர்கள் குறி சொல்வதற்குப் பின்பற்றிய நெறிமுறைகளையும், அவர்களுடைய வாழ்வியல் முறைகளையும்,பக்தி நெறிகளையும் அறியமுடிகின்றது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *