மெய்யப்பன் தமிழாய்வகம்

Nov 18, 2008 | Uncategorized | 0 comments

ஆடலரசன் வீற்றிருக்கும் பெருமைமிகு தில்லை மூதூரின் கண் தமிழார்வலர்களின்
சரணாலயமாகத் திகழ்வது மெய்யப்பன் தமிழாய்வகமாகும்.இவ்வாய்வகத்தை உருவாக்கியவர்
பேராசிரியர் ச. மெய்யப்பனாவார்.இவர் தமிழார்வ துடிப்புக் கொண்டு எளிமையும் எழுச்சியும் மிக்க
தம் எழுத்தாலும்,சிறந்த பதிப்பாளும் சான்றோர் உள்ளத்துள் நின்று நீடு வாழ்பவர்.தமிழே நினைந்து
தமிழே சொல்லி,தமிழே வாழ்வெனக் கருதும் பேரன்பினராகத் திகழ்ந்த இவரை ஒரு புத்தகப்பித்தர்
எனலாம்.புத்தகங்களின் மீது கொண்ட காதலாலும்,அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்ற வேண்டும்
என்ற வேணவாவினாலும் பணியாற்றும் காலத்திலிருந்தே தமிழ் தொடர்பான பல்வேறு புத்தகங்களைச்
சேகரிக்கத் தொடங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் தமிழியல்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு
பெற்ற பிறகும்,ஓய்வே இல்லாமல் அல்லும் பகலும் தமிழகத்திலும்,தமிழ் வழங்கும் இடங்களிலும்
தேடித் தேடி சேகரித்த தமிழ்ப் புத்தகங்களைப் பொதுமக்களும் ஆய்வாளர்களும் பயன்படுத்தும்
வகையில் ச.மெய்யப்பனார் தம் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி,அதன் சார்பில் மெய்யப்பன்
தமிழாய்வகம் என்னும் உயர் ஆய்வகம் தொடங்கினார்.
இந்நூலகம் வடக்குவீதி புதுத்தெருவில் 2000-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது.
அரசு விடுமுறை நாள்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் தவிர,மற்ற நாள்களில் காலை
9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செயல்படுகிறது.வெளியூரில் இருந்து வரும் ஆய்வாளர்கள்
தங்கி ஆய்வு மேற்கொள்ள அறைகள் உள்ளன.இங்கு தமிழக ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமல்லாமல்
வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயன் பெறுகின்றனர்.
தமிழகத்தின் மிகச்சிறந்த ஆய்வு நூலகங்களுள் ஒன்றான இவ்வறிவு தோட்டத்தில்
ஆய்வு வேட்கையருக்குப் பசி தீர்க்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும்,பெரிதும்
முயன்று 40000-துக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வைத்துள்ளனர்.பதிமூன்று வகையான
கலைக்களஞ்சியங்கள்,அகராதிகள்,நிகண்டுகள்,ஆவணங்கள்,ஆய்வுக்கோவைகள்,ஆய்வடங்கல்கள்,
வரலாற்றுத்துறை நூல்கள் போன்ற நூல்கள் உள்ளன.இங்கு வாழ்க்கை வரலாற்று நூல்கள் மட்டும்
1500 உள்ளன.இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் உரைகளில் சுமார் 180 உரைகள் திரட்டி
வைக்கப்பெற்றுள்ளன.தமிழ்நாடு,மொழி,இனம்,வரலாறு,கலை,நாகரிகம்,பண்பாடு, தொடர்பான 2000
நூல்கள் காணப்பெறுகின்றன.இலக்கியம்,இலக்கணம், திறனாய்வு,நாட்டுப்புற இலக்கியம்,
சிற்றிலக்கியம்,ஒப்பாய்வு,இதழியல்,நாடகம்,கவிதை,சிறுகதை,புதினம்,பக்தி அறிவியல்,சுயமுன்னேற்றம்,
பயண நூல்கள்,பொது அறிவு நூல்கள்,முதலிய நூல்கள் தொகுத்து வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனோடு இவர்களுடைய பதிப்பக வெளியீடுகளும் உள்ளன.
குறிப்பாக தேசியக்கவி பாரதியார்,புரட்சிக்கவி பாரதிதாசன்,தமிழ்கடல் மறைமலையடிகள்,
மொழிஞாயறு தேவநேயப்பாவாணர்,பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை,பேரறிஞர் கா.சு.பிள்ளை,
மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்,தமிழ்த்தென்றல் திரு.வி.க., சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை,
டாக்டர் மு.வா,ஆராய்ச்சி அறிஞர் வையாபுரிப்பிள்ளை,அறிஞர் மு.அருணாச்சலம்,மயிலை சீனி
வேங்கடசாமி,பேரறிஞர் அண்ணா,சிலம்புச் செல்வர் மா.பொ.சி, அறிஞர் சாமி சிதம்பரம்,ராமகிருஷ்ணன்
கண்ணதாசன்,வைரமுத்து,புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன் போன்றவர்களின் நூல்கள் முழுமையும்
கிடைக்கின்றன,மேலும் வருடம் தோறும் பிற பதிப்பகங்களின் சிறந்த இரண்டு ஆய்வு
நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கும் திட்டம் இருப்பதால் புதிய நூல்களும் உடனுக்குடன்
இந்நூலகத்தில் கிடைக்கின்றன.
இவ்வாய்வகத்தின் வழி 60 வகையான ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்துள்ளன.இந்நூல்கள் அனைத்தும்
ஆய்வுலகத்தினர் பயன்கொள்ளும் வகையில் இங்கு ஒருங்கே வகைப்படுத்தி வைக்கப்பெற்றுள்ளன.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *